IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஊடகத்துறைக்கு வந்த வாழ்நாள் அவமானம்! – மூத்த பத்திரிக்கையாளர் கருத்து

Get real time updates directly on you device, subscribe now.


நேற்று வெளியான பத்திரிக்கை ஒன்றின் முதல் பக்க விளம்பரத்தில் ஜீ ஹிந்துஸ்தான் பத்திரிக்கையில் மட்டும்தான் செய்திகள் மட்டும் இருக்குமாம், நெறியாளர்கள் இருக்க மாட்டார்கள் என பிரிண்ட் செய்து பத்திரிக்கை வெளியாகின. இதற்கு ஊடகத்துறை சார்பாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இந்த விளம்பரம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் துரை அரசுவின் சமூக வலைதளபக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் கூறியதாவது,

நேற்று வெளியான நாளிதழ் ஒன்றின் முதல் பக்க விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். ஜீ தொலைக்காட்சி நிறுவனம், 24 மணி நேர செய்தி செய்தி சானலைத் தொடங்குகிறதாம். அதில் வெறும் செய்திகள் மட்டுமே இருக்குமாம். நெறியாளர்கள் இருக்க மாட்டார்களாம் என பிரிண்ட் செய்து வெளியாகின.

தொடக்கத்தில் எல்லா செய்தி சானல்களுமே அப்படித்தான் தொடங்கப்பட்டன. ஒரு கட்டத்தில் ஆழமான விவாதங்களுக்கான தேவை இருப்பது உணரப்பட்டது. அதனையடுத்து விவாத நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள், அலசல்கள் தொடங்கப்பட்டன. அவற்றை முறைப்படுத்த நெறியாளர்கள் வந்தனர்.

நெறியாள்கையில் புதிய தரத்தை அவர்கள் உருவாக்கினர். அல்லது தரத்தை கேள்விக்குள்ளாக்கினர். அது வேறு விஷயம். ஆனால் செய்திகளை விவாதமாக மாற்றி பேசுபொருளாக ஆக்கியது ஒரு புதிய போக்கு. தென்னிந்திய மொழிகளிலேயே தமிழில்தான் நிகழ்ந்தது. அது மலினமான ஒரு கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதும் கவலைக்குரிய விஷயம்தான். ஆனால் அதற்கு மாற்று ‘நெறியாளர்கள்’ இல்லாத வெறும் செய்திகளன்று.

ஏனென்றால் இன்றைக்கு காட்சி ஊடகங்களைவிட மிக விரைவாகவும் துல்லியமாகவும் சமூக ஊடகங்கள் செய்திகளை வழங்குகின்றன. யாரும் தனிப்பட்ட முறையில் நம்பகத்தன்மைக்குப் பொறுப்பேற்க இயலாது என்பதே அதில் உள்ள குறைபாடு. அதேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பதிவுகளை, பகிர்வுகளை ஒப்புநோக்கி ஒரு முடிவுக்கு வந்துவிடமுடியும்.

அந்த வகையில் காட்சி ஊடகமான தொலைக்காட்சி சானல்களுக்கு கடும் சவாலாகவும் போட்டியாகவும் வந்திருப்பவை சமூக ஊடகங்களே. அதனை எதிர்கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

செய்திகளை முந்தித் தருவதில் காட்டும் கவனத்தைக் கொஞ்சம் திசை திருப்பி, குறிப்பிட்ட செய்தியின் பின்புலம், அது சமூகத்தில் ஏற்படுத்தும் / ஏற்படுத்த இருக்கிற தாக்கம், பொருளாதாரத்தில் அது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா? இது வெறும் செய்திதானா? அல்லது சமூகப்போக்கா? சமூகப் போக்காக இருந்தால் அதனை எப்படிப் பார்க்க வேண்டும்? இதுகுறித்த வரலாற்றுத் தரவுகள் ஏதேனும் உண்டா?….

இப்படியெல்லாம் ஆராயவேண்டும். அவ்வாறு செய்தால்தான் செய்தியின் உள்ளும் புறமும் பார்வையாளனுக்கு/வாசகனுக்குப் புரியும். இன்றைய பார்வையாளன்/வாசகன் முட்டாளல்லன். வெறுமனே திரையில் எதைக் காட்டினாலும் வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டிருப்பான் என்று நினைப்பவர்களே ஏமாந்துபோவார்கள்.

ஊடகங்கள் மீதான் பிரமிப்பு தமிழனுக்கு என்றைக்கோ போய்விட்டது. இன்றைக்கு அவன் எதிர்பார்ப்பது உண்மைத்தன்மையை, விரிவான பின்புலத்தை, அலசலை. அதற்குத் தெம்பும் ஆர்வமும் இல்லாவிட்டால் ‘இல்லை’ என்று சொல்வதே நேர்மையான விடை.

மாறாக,நெறியாளர்களைக் கழுவித்துடைத்துவிட்டு வெறும் செய்திகளை வரவேற்பறையில் கொட்டுவதால் அறிவு வளராது. பரபரப்பும் படபடப்பும் வேண்டுமானால் வளரலாம்.

சரி, நெறியாளர்கள் இல்லாத செய்திகள் என்பது ஒரு தொலைக்காட்சியின் உரிமை என்று வைத்துக்கொள்வோம். அதற்காக சக தொலைக்காட்சி நிறுவன நெறியாளர்கள் இத்தோடு மண்ணோடு மண்ணாகிப் போய்விடுவர் என்ற தொனியில் தினமலரில் விளம்பரம் தந்திருக்கிறது ஜீ நிறுவனம் (இல்லை இல்லை, ஜீ இந்துஸ்தான்).

இதனைக்கண்ட ஒட்டுமொத்த பத்திரிகை உலகமும் கொதித்துக் கிடக்கிறது. இதுவரை தமிழ் ஊடக உலகம் கண்டிராத இழி செயல் என்பதால் பலரும் அதிர்ச்சியில் இருந்துமீளவில்லை. இந்த விளம்பரத்தை உருவாக்கியதன்மூலமாக தன்னுடைய தரம் என்ன என்பதை ஜீ தொலைக்காட்சி நிறுவனம் தெளிவாகத் தெரிவித்து விட்டது. இனி அதற்கு விளம்பரமே தேவையில்லை.

சக நிறுவன ஊழியர்களைக் காழ்ப்புடன் அணுகும் அளவுக்கு ஒரு தரத்தில் அவர்களது செய்திகள் இருக்கும் என்பதே போதுமான தகவல். வெறுப்பு அரசியலை உமிழுவோரை மக்கள் புறமுதுகிட்டு ஓடச்செய்துவருவதை இன்றைய செய்திகள் நமக்குச் சொல்கின்றன. அரசியலை முழுநேரத்தொழிலாகக் கொண்டவர்களுக்கே இந்த கதி என்றால்…மீதத்தைச் சொல்ல வேண்டியதில்லை.

நண்பர் குணசேகரன், கார்த்திகைச் செல்வன், அசோக வர்ஷினி ஆகியோரை ஏன் குறிவைத்தனர் என்பதில் ஒரு அரசியல் இருக்கிறது. குணாவும் கார்த்திகைச் செல்வனும் தமிழக அரசியல் குறித்த தெளிவான பார்வையும் பின்புலமும் கொண்டவர்கள். பங்கேற்பாளர்கள் என்னதான் தம் பக்கம் நெறியாளரை இழுக்க முயன்றாலும் சொந்த அறிவின் துணைகொண்டு நீதியின் பக்கம் வெளிச்சம் பாய்ச்ச முயல்வோர். வலதுசாரிகளுக்கு அது பெரிய வேதனை. அதன் வெளிப்பாடுதான் வெறுப்பு ஊடக அரசியல்.

ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? அவர்கள் ரங்கராஜ் பாண்டேவையோ, மதனையோ விளம்பரத்தில் பயன்படுத்தவில்லை. ஏன் என்று அவர்களுக்குத் தெரியும். நமக்குத் தெரியுமா?

இன்னொன்றையும் கவனியுங்கள். தந்தி, புதிய தலைமுறை, ரிலையன்ஸ் குழுமம்’ -என்றுகூட விளம்பரத்தில் வந்திருக்கலாமில்லையா? ஏன் வரவில்லை? முதலாளியைப் பகைக்க முடியுமா? அதனால்தான் தொழிலாளிகளோடு மோது கிறார்கள். அந்தக் கோணத்திலும் இதனைப் பார்க்க வேண்டும்.

பத்தாண்டுகளுக்கு முன்பேயே கவனித்திருக்கிறேன். ஜீ தொலைக்காட்சியின் விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள், அதில் நடனமாடிய பெண்களின் உடைகளின் வண்ணங்கள் மற்றும் ஒப்பனை -எல்லாவற்றிலும் காவி நிறம் இருக்கும்.

அன்றைக்கு தன்னை மேலோட்டமாக வெளிப்படுத்திய ஜீ , இன்றைக்கு வெளிப்படையாகவே ‘ஹிந்துஸ்தான்’ தொலைக்காட்சியாக வருகிறது.

தமிழ்ப் பத்திரிகையாளர் கூட்டத்தில் நானும் ஒரு துளி என்ற அடிப்படையில் இந்த விளம்பரத்தை உருவாக்கிய விளம்பர நிறுவனம், அதற்கு விளம்பர வாசகம் எழுதிக்கொடுத்த ’நல்ல மனதுக்காரர்’, விளம்பரத்தின் உரிமையாளரான ஜீ டீவி, கொஞ்சம்கூட இதனைப்பற்றி யோசிக்காமல் முதல் பக்க விளம்பரமாக வெளியிட்ட நாளிதழ் என்று்-அனைவரும் கண்டிக்கத்தக்கவர்களே.

நாட்டின் முதல் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கிய திரு.சுபாஷ் சந்திரா அவர்களே, அந்த ஒரு பெருமை மட்டும் போதுமா? தமிழ் ஊடகத்துறையில் மரியாதையான ஒரு பெயரையும் சம்பாதித்துக்கொள்ளுங்கள்!

தமிழர்கள் நல்லனவற்றை ஆதரிக்கவே செய்வார்கள்.
#DuraiArasu #Media #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader