சிபில் ஸ்கோர் என்பது என்ன..?

Get real time updates directly on you device, subscribe now.

கடனட்டை (கிரெடிட் கார்டு) பயன்படுத்துபவர்கள் / கடன் பெறுபவர்கள் அதிகம் கேள்விப்படும் பெயராக இருப்பது ‘சிபில் ஸ்கோர்‘.

சிபில் என்றால் என்ன?

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள், கடன் பெறுபவர்கள் (வாகன, தனிப்பட்ட, வீட்டுக்கடன்) தங்கள் கணக்குகளை எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து மதிப்பிடும் நிறுவனம் சிபில் என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு மதிப்பிடப்படும் முறையைச் சிபில் (CIBIL – Credit Information Bureau (India) Limited) ஸ்கோர் என்று அழைக்கிறார்கள்.

1. எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?

ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் படி வங்கிகள், நிதி சார்ந்த அமைப்புகள் தங்கள் வாடிக்கையாளர் கடன் சார்ந்த விவரங்களை CIBIL நிறுவனத்தில், மாதம் ஒரு முறை அல்லது 60 நாட்களுக்கு ஒருமுறை பதிவு செய்யும்.

இவ்விவரங்களை வைத்துச் சிபில் ஸ்கோர் மதிப்பிடப்படுகிறது.

தாமதக்கட்டணம் இல்லாமல் சரியான கால அளவில் பணத்தைக் கட்டுபவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்களும், முறையாகக் கட்டாதவர்களுக்குக் குறைந்த மதிப்பெண்களும் கொடுக்கப்படுகிறது.

2. மதிப்பெண் விவரங்கள் என்ன?

300 முதல் 900 வரை இருக்கும். 750 க்கு மேல் மதிப்பெண்கள் இருந்தால், கடன் பெறுவதில் சிக்கல் இருக்காது. இதை விடக்குறைந்த மதிப்பெண்கள் இருந்தால், வங்கிகள் கடன் வழங்க யோசிக்கும் அல்லது வட்டி அதிகம் இருக்கும்.

கிரெடிட் கார்டு கட்டணம், கடனை முறையாகப் கட்டுபவர்களுக்குத் தோராயமாக 800 – 850 க்கு மேல் மதிப்பெண்கள் இருக்கும்.

36 மாதங்களின் History (பணப்பரிவர்த்தனை) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

3. சிபில் ஸ்கோரில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?

ஒவ்வொரு மாதமும் கடன் கட்டிய விவரங்கள், எப்போது கடன் வாங்கினீர்கள்? எப்போது முடித்தீர்கள்? எந்த வங்கியில் கடன் பெற்றீர்கள்? எந்த முகவரியில் இருந்த போது கடன் பெற்றீர்கள்? கடன் தொகை, செலுத்திய காலம்.

PAN கார்டு, அடையாள அட்டை விவரங்கள், முகவரி, மொபைல் எண் இருக்கும்.

4. சிபில் ஸ்கோர் எப்படிப் பார்ப்பது?

CIBIL இணையதளத்தில் வருடம் ஒருமுறை இலவசமாகப் பார்க்க முடியும். தற்போது புதிய கணக்குகளுக்குக் கொடுக்கிறார்களா என்பது தெரியவில்லை.

Premium, Standard & Basic முறையில் CIBIL Score விவரங்களைப் பணம் கட்டிப்பார்க்க முடியும்.

https://www.cibil.com/choose-subscription

5. அடிக்கடி பார்த்தால் மதிப்பெண் குறையுமா?

நாம் பார்த்தால் குறையாது ஆனால், கடனுக்கு விண்ணப்பித்து வங்கிகள் பார்க்கும் போது குறையும். காரணம், நமக்குப் பணத்தேவை இருப்பதாக உணர்த்துகிறது.

எனவே, ஒரே சமயத்தில் பல கடனட்டை / கடனுக்கு விண்ணப்பிப்பது கூடாது.

கடன் விண்ணப்பத்தை வங்கி நிராகரித்தால், உடனே முயற்சிக்காமல் தாமதித்துச் சில மாதங்களுக்குப் பிறகு முயற்சிக்க வேண்டும்.

6. தவறான விவரங்கள் சிபிலில் இருக்குமா?

ஆமாம்.

சரியாகப் பணம் கட்டியிருந்தாலும், கட்டாததாகப் பதிவாகியிருக்க வாய்ப்புள்ளது. வங்கியிடம் மட்டுமே கூறி சரி செய்ய முடியும், சிபில் நிறுவனம் மாற்றாது.

எனவே, தவறான தகவல்கள் கூட மதிப்பெண்கள் குறையக் காரணமாக இருக்கலாம்.

7. சிபில் இணையதளத்தில் மட்டுமே பார்க்க முடியுமா?

இல்லை.

தற்போது CIBIL போல பல்வேறு நிறுவனங்கள் வந்து விட்டன ஆனால், மதிப்பீடு முறையில் சிறு மாறுதல்கள் உள்ளன.

8. சிபில் ஸ்கோரால் என்ன பயன்?

ஒருவருக்கு கடன் கொடுக்கலாமா? சரியாகக் கட்டுவாரா? என்பதை சிபில் ஸ்கோரை வைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் அறிந்து கொள்ள முடிகிறது.

வங்கிகளில் கடனுக்கு முயற்சிக்கும் போது தனிப்பட்ட நபர் தன் தவறுகளைத் தெரிந்துகொள்ள, சரி செய்து கொள்ள முடிகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader