IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

திராவிட கழகத்தை துவக்கிய அந்நாளில் அறிஞர் அண்ணா பேசியது என்ன ?

Get real time updates directly on you device, subscribe now.

புதிதாக கட்சி துவங்கிய கமல்ஹாசன், மதுரையில் தம்முடைய கட்சி துவங்கப்பட்டதற்கான நோக்கத்தை விவரித்து உரையாற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த உரை குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களும் நடைபெற்றன.

பொதுவாக ஒரு கட்சி துவங்கப்படும்போது, அக்கட்சியின் தலைவர் ஆற்றும் உரை மிகவும் முக்கியமானதாக, அந்தக் கட்சி துவக்கப்பட்டதற்கான நோக்கத்தைச் சொல்வதாக, அதன் எதிர்காலப் பாதையையும், கொள்கைகளையும் சொல்வதாக அமையும்.

திராவிடர் கழகத் தலைவர் பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக சி.என். அண்ணாதுரை உள்ளிட்ட திராவிடர் கழகத் தலைவர்கள் அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து 1949 செப்டம்பர் 17ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினர்.

அந்தக் கட்சியின் நோக்கத்தையும் கொள்கைகளையும் விளக்கும் வகையில் அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 18ஆம் தேதி சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் (தற்போது அண்ணா பூங்கா) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் சி.என் அண்ணாதுரை உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக்கழகம் தோன்றியதற்கான காரணத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் விவரித்தார். அண்ணா பேசிக் கொண்டிருந்தபோது கடும் மழையும் பெய்துகொண்டிருந்தது. பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்வதுதான் விலகியதற்கான முக்கிய காரணம் என்று கூறிய அண்ணா, தமது புதிய கட்சியின் கொள்கைகளையும் தெளிவாக விளக்கினார்.

அவரது உரையின் சில பகுதிகள் இங்கே:

“மழை பலமாகப் பெய்துகொண்டிருக்கிறது. பலர் பேச வேண்டும். சங்கடமான நிலைதான். விடாது மழை பெய்கிறது. அளவற்ற கூட்டம். தாய்மார்கள் தவிக்கின்றனர். மழையில் நின்றுகொண்டே இருக்கிறீர்கள். சங்கடம்தான்; ஆனாலும் சமாளிக்கிறீர்கள். இது போன்ற நிலையில்தான் நாட்டிலே சில காலம் கழகத்தின் வேலைகள் செயலற்றுக் கிடந்தன. சங்கடமான நிலை ஏற்பட்டது. சரி செய்தோம்.

பெரியார் திருமணம் என்ற செய்தி கேட்டதும் அழுதவன் நான். ஆயாசங் கொண்டவன் நான். அதுமட்டுமல்ல, நான் ஒதுங்கிவிடுகிறேன் என்ற எண்ணத்தை, நான் கொண்ட கருத்தைத் தெரிவித்தவன் நான். என் போன்ற பல தோழர்கள் பெரியாரை, பெரியார் போக்கை, அவர் திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை என்பதை மட்டுமல்ல, கண்டித்தனர். கதறினர். வேண்டாம் என்றனர் வேதனை உள்ளத்தோடு.

அவரோடு சேர்ந்து பணிபுரிய முடியாத பெரும்பான்மையினர், கழக முக்கியஸ்தர்கள் கூடிப் பேசி ஒரு முடிவுசெய்தனர். அந்த முடிவுதான் திராவிட முன்னேற்றக் கழகத் தோற்றம். இது போட்டி கழகமல்ல.

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

அடிப்படைக் கொள்கைகளில், கருத்துகளில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் கொள்கை, அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.

நம்மை மதியாத, இகழ்ந்த, தூற்றலுடன் துச்சமென மதித்த தலைவரின் தலைமையைவிட்டு வெளியேறித் தனிக்குடித்தனம், தனி முகாம், தனிக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கிறோம். நாம் உழைத்து உருவாக்குவோம் இந்தக் கழகத்தை.

இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர், பார்த்த தலைவர், இவர் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்ததில்லை. அதே காரணத்தால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தலைவரை ஏற்படுத்தவில்லை. அவசியம் என்றும் கருதவில்லை.

இதயபூர்வமான தலைவர், இதயத்திலே குடியேறிய தலைவர், நமக்கெல்லாம் அவ்வப்போது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம். அந்த பீடத்திலே, நாற்காலியிலே வேறு ஆட்களை அமர்த்தவோ அல்லது நாங்களே அல்லது நானோ அமரவோ விரும்பவில்லை.

திராவிடர் கழகமாகட்டும், திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படைவரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான். திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டுபட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும்.

இரு கழகங்களும் இரு திக்குகளிலிருந்தும் வட நாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும். அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள் திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத்தான் குறிக்கும்.

இரு பூங்காக்களும் தேவை. ஒன்றோடொன்று பகைக்க தேவையில்லை. அவசியமும் இல்லை. எது புஷ்பித்தாலும் மாலையாகப் போவது திராவிடத்திற்குத்தான் என்ற எண்ணம் வேண்டும்.

மழை பெய்து நின்று, கறுத்த வானம் வெளுத்திருப்பதைப் போல இன்று புதுக் கழகம் அமைத்து முன்னேற்ற வேகத்துடன் மோதல் இன்றிப் பணியாற்ற புறப்பட்டுவிட்டனர். கொள்கை பரப்புவதே நமது முதல் பணி. பகைமை உணர்ச்சியை அடியோடு விட்டொழிக்க வேண்டும்.

நான் கேட்கிறேன் தோழர்களே, எது முக்கியம் நமக்கு? லட்சியமா, பெரியாரா? லட்சியம் தேவை, பெரியாரல்ல என்று முடிவுசெய்தோம். பிரச்சனை முடிந்தது அத்தோடு. இதோ நம் கண் முன் வடநாட்டு ஏகாதிபத்தியம், மக்களைப் பாழ்படுத்தும் பாசிசம், பதுங்கிப் பாய நினைக்கும் பழமை இவைதான் ஒழிய வேண்டும்.

பழமையும், பாசிசமும் முறியடிக்கப்படும்வரை ஓயமாட்டோம். உழைப்போம். உருவான பலனைக் காண்போம். அப்போது பெரியார், “பயல்கள் பரவாயில்லை. உருவான வேலைதான் செய்கிறார்கள் ” என்று உள்ளம் மகிழும் நிலை வரத்தான் போகிறது.

முதல் வேலையாக எழுத்துரிமை, பேச்சுரிமை, எதையும் அடக்கும் சர்க்கார் போக்கை எதிர்த்துப் போரிட திராவிட முன்னேற்றக் கழக முன்னணிப்படை அமைய வேண்டும். அதில் பங்குகொள்ள சமதர்ம தோழர்களை வாருங்கள் என்று வரவேற்கிறேன். கம்யூனிஸ்டுகளை ஒத்துழையுங்கள் என்று கூப்பிடுகிறேன்.

பேச்சுரிமையைப் பறிக்காதே, எழுத்துரிமையைத் தடுக்காதே, புத்தகங்களைப் பறிமுதல் செய்யாதே என்று போரிடுவோம்!

பெரியாரே…. நீரளித்த பயிற்சி, பக்குவம் பெற்ற நாங்கள் உம் வழியே சர்க்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லத்தான் வேண்டுகோள் விடுக்கிறோம். துவக்க நாளாகிய இன்றே!” என்று சி.என். அண்ணாதுரை தன் உரையை முடித்தார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader