IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வால் பொங்கல் விற்பனை டல்

118

பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வால் பொங்கல் விற்பனை டல்லடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டிற்கு பொங்கல் பண்டிகையையொட்டி காய்கனிகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு காய்கறிகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இங்கு நேற்று கிலோவுக்கு கத்தரி ரூ.100, வெண்டை ரூ.40, பூசணி ரூ.20, சுரைக்காய் ரூ.10, அவரை ரூ.70, சிறு கிழங்கு ரூ.40 முதல் ரூ.60 வரை, மாங்காய்-ரூ.200, சேனை-ரூ.40, மல்லி இலை ரூ.20, சின்ன வெங்காயம்- ரூ.130, பல்லாரி ரூ.65, தேங்காய் ரூ.40, சாம்பார் வெள்ளரி ரூ.8, தக்காளி ரூ.20, முருங்கை-ரூ.200, கேரட் ரூ.60, பீன்ஸ் ரூ.70, பீட்ரூட் ரூ.30, காலி பிளவர் ரூ.30, சேம்பு- 70க்கு விற்பனையானது.

கரும்பு சில்லறை விலைக்கு 1க்கு ரூ.50 ஆகவும், 15 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.400 முதலும், மஞ்சள் குலை ரூ.30 ஆகவும் இருந்தது. இது தவிர செவ்வாழை ரூ.500 முதல் 1200 வரையிலும், கற்பூர வள்ளி ரூ.500, பச்சை வாழை ரூ.300, நாட்டு வாழை ரூ.250 முதலும், வாழை இலைக்கட்டு ரூ.800 முதலும் விற்பனையானது.
மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் அதிகளவு காய்கனிகள் ஏற்றுமதி செய்யப்படும் பாவூர்சத்திரம் மார்க்கெட்டிற்கு பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பே உள்ளுர் பொதுமக்களும், வியாபாரிகளும் அதிகளவு வந்து காய்கறிகளை வாங்கி செல்வர்.

ஆனால் இந்தாண்டு காய்கறி விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வரத்து குறைந்தே காணப்படுவதால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு பொங்கல் விற்பனை டல்லாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்..