IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியா முழுவதும் மூலிகைத் தாவர சாகுபடி அதிகரித்து வருகிறது.மேற்குத் தொடர்ச்சி மலை, போதிய மழை வளம் கொண்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலவகை மூலிகைத் தாவர சாகுபடியை அதிகம் விரும்பிச் செய்கின்றனர் . இளம் தலைமுறை விவசாயிகளும், தொழில்முனைவோராக மாற விரும்பும் இளைஞர்களும் மூலிகைத் தாவரங்களைப் பயிரிட்டு லாபம் ஈட்டலாம். இவற்றில், துளசி சாகுபாடி முன்னணியில் உள்ளது.

 

துளசி இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. இதைப் புனிதமாகக் கருதி வளர்க்கின்றனர். வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. துளசி காற்றைச் சுத்தப்படுத்தி, சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்துகிறது. ஆன்டிஆக்சிடன்ட், வைட்டமின் ஏ, சி, கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது கிருமி, கொசுக்களுக்கு எதிரான பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது.

 

துளசியின் மருத்துவ பயன்கள்

 

 • துளசி இலையிலிருந்து எடுக்கப்படும் ‘எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய்’ பூச்சிக்கொல்லியாகவும், ஆன்டி பாக்டீரியலாகவும் செயல்படுகிறது.
 • நறுமண மூலிகையான துளசியை மற்ற மூலிகைகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
 • துளசி இலை, பூக்களை சாறாக அல்லது தேநீராகத் தயாரித்து வயிற்றுவலி, இருமல், மார்புச் சளி, தோல் வியாதி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்.
 • மலேரியா, காலராவுக்கு முன்காப்பு மருந்தாகப் பயன்படுகிறது.
 • துளசி விதையை தண்ணீர், பழச்சாறு அல்லது பாலுடன் கலந்து பயன்படுத்தும்போது ஆன்டிஆக்சிடன்டாக மாறுகிறது.
 • ஆற்றல் குறைவு, அல்சர், வாந்தி, வயிற்றுப் பிரச்னைக்கு மருந்தாகவும், டானிக்காகவும் பயன்படுகிறது.
 • துளசி வேரிலிருந்து தயாரிக்கப்படும் பொடியை பால், நெய்யுடன் கலந்தோ அல்லது சாறாக மாற்றியோ மலேரியா காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்.
 •  பூச்சிக்கடிக்கு மருந்தாக, வலி நிவாரணியாக பயன்படுகிறது. துளசி, ரத்த அழுத்தத்தை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமன் செய்கிறது.
 • புற்றுநோயைத் தடுக்கும் முன்காப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

  நடவுமுறை

  துளசியில், பசுமை வகை (துளசி), ஊதாவகை (கிருஷ்ண துளசி) என இரு வகை உள்ளது.

 

 • துளசி எல்லா வகை மண்களிலும் வளரும். அதிக உப்பு, காரத்தன்மை, நீர் தேங்கும் பகுதிகளில் வளருவதில்லை.
  அங்ககத் தன்மையுள்ள மணல் கலந்த பசலை மண்ணில் நன்கு வளரும். வெப்பம் மற்றும் மிதவெப்ப காலநிலையில் நன்கு வளரும்.
 • துளசி விதை மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
  ஒரு ஹெக்டேருக்கு 300 கிராம் விதை தேவை.
  நாற்றங்கால் அரை நிழல், பாசன வசதியுடன் இருக்க வேண்டும்.
 • மண்ணை 30 செ.மீ. அளவுக்கு பறித்து, நன்கு மக்கிய தொழுஉரமிட்டு மண்ணைப் பண்படுத்தி, 4.5-1.0-0.2 மீ அளவுள்ள படுக்கைகள் அமைக்க வேண்டும்.
 • பருவமழை தொடங்குவதற்கு 2 மாதங்கள் முன்னரே 1:4 என்ற விகிதத்தில் விதையை மணலுடன் கலந்து நாற்றங்கால் படுக்கைகளில் விதைக்க வேண்டும்.
 • 8 முதல் 12 நாளில் முளை வந்து, நாற்றுகள் 6 வாரங்களில் 4-5 இலைகளுடன் நடவுக்குத் தயாராகிவிடும்.
 • விதையில்லா பெருக்கத்துக்கு அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் துளசியின் முற்றிய கிளையின் நுனிகளை வெட்டி நட்டால் 90-100 சதவீதம் முளைத்துவிடும்.
  இதற்கு 10-15 செ.மீ. நீளமும், 8-10 கணுக்களும் உள்ள தண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
 • விளைநிலம் தயாரிக்கும்போது ஹெக்டேருக்கு 15 டன் தொழுஉரத்தை அடியுரமாக அளிக்க வேண்டும்.
  தழை, மணி, சாம்பல் சத்துகள் முறையே ஹெக்டேருக்கு 120: 60: 60 கி.கி. பரிந்துரைக்கப்படுகிறது.
 • நட்ட ஒரு மாதம் கழித்து முதல் களையெடுப்பும், அடுத்த 30 நாளில் 2ஆவது களையெடுப்பும் செய்ய வேண்டும்.
  பிறகு களையெடுக்கத் தேவையில்லை.
 • பொதுவாக, துளசி அதிகளவில் பூச்சி, நோயால் தாக்கப்படுவதில்லை. சில பூச்சிகள், இலைச் சுருட்டுப் புழு போன்றவை துளசியைத் தாக்குகின்றன.
 • 0.2 சதவீதம் மாலத்தியான் அல்லது 0.1 சதவீதம் மெத்தில் பாரத்தியான் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
 • மீன் எண்ணெய் சோப்புகளைப் பயன்படுத்தி, சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், நனையும் கந்தகம் 0.3 சதவீதம் தெளித்து சாம்பல் நோயையையும், நாற்றங்கால் படுக்கைகளில் 0.1 சதவீதம் மெர்குரியல் பங்கிசைடு மண்ணில் அளித்து நாற்று கருகல், வேர் அழுகல் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.
 • நடவு செய்த 90 நாளுக்குப் பிறகு முதல் அறுவடை செய்யலாம். தொடர்ந்து, ஒவ்வொரு 75 நாளுக்குப் பிறகும் அறுவடை செய்யலாம்.
 • வெயில் காலங்களில் அறுவடை செய்வதால் அதிக அறுவடை கிடைக்கும்; எண்ணெய் அளவும் அதிகமிருக்கும்.
  ஓராண்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு துளசி மூலிகைகள் தோராயமாக 10,000 கிலோ கிடைக்கும்.
 • துளசி 0.1 முதல் 0.23 சதவீதம் எண்ணெய் கொண்டது, ஹெக்டேருக்கு 10 – 20 கிலோ எண்ணெய் கிடைக்கிறது.

 

(error 705) No access to the API. Invalid Id Param.
Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader