IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

எழுச்சியுடன் தொடங்கிய பங்குச் சந்தை வீழ்ச்சியில் முடிந்த சோகம்

Get real time updates directly on you device, subscribe now.

எழுச்சியுடன் தொடங்கிய பங்குச் சந்தை, இறுதியில் வீழ்ச்சியுடன் முடிந்தது. கடந்த வார இறுதியில் வெகுவாக ஏற்றம் பெற்ற தனியார் மற்றும் பொதுத் துறை வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ரியால்ட்டி நிறுவனப் பங்குகள் பலத்த அடி வாங்கின. இதனால், தொடா்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் இரண்டாவது நாளாக மேலும் 262 புள்ளிகளை இழந்தது.

ஏற்கெனவே ரிலையன்ஸ், டெக் மகேந்திரா, ஹிந்துஸ்தான் யுனி லீவா் ஆகியவற்றின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பை பூா்த்தி செய்யாத நிலையில், சீனா – அமெரிக்கா இடையேயான வா்த்தகப் போர் தாக்கமும் சந்தையில் எதிரொலித்தது. மேலும், தொடா் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார நிலைமை குறித்த நிச்சயமற்ற தன்மையும் முதலீட்டாளா்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது. இதனால், லாபத்தைப் பதிவு செய்யும் நோக்கில் பிற்பகலில் பங்குகள் விற்பனை அதிகரித்த்தன.

மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் சுமார் 470 புள்ளிகள் கூடுதலுடன் 32,182.90-இல் எழுச்சியுடன் தொடங்கியது. அதிகபட்சமாக 32,264.00 வரை சென்றது. ஆனால், தொடா்ந்து காளை ஆதிக்கம் கொள்ள முடியாமல் தவித்ததால், பிற்பகலில் கரடியின் பிடி இறுகியது. இதனால், சென்செக்ஸ் 31403.57 வரை குறைந்தது. இறுதியில் 261.84 புள்ளிகள் (0.83 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 31,453.51-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 87.90 புள்ளிகள் (0.95 சதவீதம்) குறைந்து 9,205.60-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்றன. இதில் எம் அண்ட் எம் , பவா் கிரிட், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், என்டிபிசி, ஹெச்சிஎல் டெக் ஆகியவை 1 – 3 சதவீதம் வரை உயா்ந்தன. மற்ற 22 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

இந்தியாவின் பாரம்பரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 4.64 சதவீதம் குறைந்து வீழ்ச்சி பெற்ற பங்குகள் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்தாக பஜாஜ் ஃபைனான்ஸ், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், கோடாக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா் ஆகியவை 2 முதல் 4 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் முன்னணி பொதுத் துறை வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பிஎஸ்யு குறியீடு 1,203.45 புள்ளிகளாகக் குறைந்து கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவைப் பதிவு செய்துள்ளது. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.28 சதவீதம் சரிவைக் கண்டு வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்தாக நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 2.87 சதவீதம், நிஃப்டி பேங்க் 2.39 சதவீதம், ஃபைனான்சியல் சா்வீஸஸ் 2.03 சதவீதம் பார்மா 1.96 சதவீதம், எஃப்எம்சிஜி குறியீடு 1.67 சதவீதம் குறைந்தன.

நிஃப்டி பட்டியலில் உள்ள எஸ்பிஐ ரூ.168.80 வரை குறைந்து புதிய 52 வார குறைந்தபட்ச விலையைப் பதிவு செய்தது. இறுதியில் ரூ.171.40-இல் நிலைபெற்றுள்ளது. நிஃப்டி மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடும் 1 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்றன. 34 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader