IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

டிக்டிடாக் போதையால் குடும்பத்தை இழந்து தவிக்கும் குடும்ப பெண்கள் – வீடியோ இணைப்பு

297


மதுரையில் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாக சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டிக்டாக் ஒரு ஸ்வீட் பாய்சன்..! என்று பலமுறையை தலைபாடாக அடித்தாலும் கேட்காமல், டிக்டாக் மிகவும் பாதுகாப்பான பொழுதுபோக்கு செயலி என்று நம்பி வீடியோ பதிவிட்ட சில பெண்கள், தங்கள் குடும்பத்தினரை பிரிந்து அவமானத்துடன் வீதியில் தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த தோழிகளான மீனாட்சியும் கயலும் பாரம்பரிய உடையான சேலையுடன் டிக்டாக்கில் தோன்றி தாயும் பிள்ளையுமாக நடிப்புத்திறமையை வெளிக்காட்டுவது வழக்கம்.

இருவருக்கும் திருமணமான நிலையில் டிக்டாக் செயலிக்கு அடிமையானதால் அவ்வப்போது ஆன்மீகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற வீடியோக்களையும் டிக்டாக் செயலியில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளியதாக கூறப்படுகிறது.

சல்லி காசுக்கு பிரயோசனமில்லாத லைக்குகளுக்கு ஆசைப்பட்டு மீனாட்சியும் கயலும் தங்களுடைய டிக்டாக் பிரைவேட் கணக்கில் பதிவிட்ட வீடியோக்களே, தங்களை சந்திசிரிக்க வைக்க போகிறது என்பதை உணரவில்லை.

இந்நிலையில், மீனாட்சிக்கு டிக்டாக் மூலம் தேனியைச் சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. அந்த பெண் ஒருபடி மேலே போய், லைக்கிற்காக தனது ஆண் நண்பருடன் செய்யும் காதல் சேட்டைகளை எல்லாம் டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் சுகந்திக்கும் மீனாட்சிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு டிக்டாக் செயலியில் நட்பை துண்டித்து கொண்டனர்.

மீனாட்சியுடனான நட்பு துண்டானதும் ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது ஆண் நண்பர் செல்வா என்பவருடன் சேர்ந்து மீனாட்சி மற்றும் தோழி கயல் ஆகியோரின் டிக்டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும் விலை மாதர்களாக சித்தரித்து டிக்டாக் செயலியில் பதிவிட்டதால் இருவரது குடும்பத்திலும் புயல்வீசத் தொடங்கியது.

கயலின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் வீட்டைவிட்டு துரத்தியதால் தற்போது காப்பகத்தில் தவித்து வருகிறார்.

இதே சம்பவத்தைப் போன்று மற்றொரு பெண் தன்னுடைய செல்போன் உடைந்துவிட்டதால் டிக்டாக் நண்பர்களை சந்திக்க முடியாமல் போனதால் ஐ மிஸ் யூ பிரண்ட்ஸ் என்று டிக்டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மூலைமுடுக்கெல்லாம் பரவி தனது குடும்பத்தை விட்டு பிரியும் அளிவிற்கு சென்றுள்ளது. அதையும் வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார் அந்த குடும்பப் பெண்.

தமிழர் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை மறந்து அற்பத்தனமான லைக்ஸிற்கு ஆசைப்பட்டு சந்தோஷமான குடும்ப உறவுகளை பிரிந்து தனிமையில் வாடும் பெண்களை கண்டாவது இனிமேல் டிக்டாக்கில் மூழ்கி குடும்பத்தை தொலைக்க வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#Tiktok #Video #Family #In4Net