IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வணிக முத்திரையில் பயன்படுத்தப்படும் மூன்று வகையான குறியீடுகள்

Get real time updates directly on you device, subscribe now.

பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரையின் கடைசி பகுதியில் “TM” , “SM” அல்லது “®” என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். வணிக முத்திரை பதிவு செய்யப்பட்ட முறையின் அடிப்படையிலேயே “TM”, “SM” அல்லது “®” என மூன்று விதமான குறியீடுகள் இடம்பெற்றிருப்பதையும் அதன் பொருளையும் நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

1) “TM” (trademark)

1 முதல் 34 வரையிலான வகுப்புகளில் அடங்கும் பொருள்களின்-products (பெயர், சொல், சின்னம், சாதனம் அல்லது இவற்றின் கலவைகள்) TM எனும் இவ்வகை வணிக முத்திரையின்கீழ் பதிவு செய்யப்படுகின்றன. முழுமையாக பதிவு செய்யப்படாத பொருளுக்கான வணிக முத்திரைக்கு TM எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இது தற்காலிக பயன்பாட்டிற்கான குறியீடு மட்டுமே. அதாவது ஒரு பெயர், சொல், சின்னம், சாதனம்–device அல்லது இவற்றின் கலவைகள் வணிக முத்திரைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை பொதுவில் காட்டவே TM எனும் குறியீடு தற்காலிகமாகப் பயன்படுத்தப்படுவதாக கொள்ளலாம்.

மேலும், இதன் முழுமையான பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும்; இன்னும் முடிவு பெறவில்லை அல்லது நிலுவையில் இருப்பதையும் இக்குறியீடு உணர்த்துகிறது. ஆக, TM என்பது தற்காலிகமான குறியீடு என்றும், முழுமையான அங்கிகாரத்தை பெறாத நிலையில் நாம் அதன் எந்த பாதுகாப்பு வசதிகளையும் பயன்படுத்த முடியாது என்பதையும் இவ்விடம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

2) “SM” (Service Mark)

35 முதல் 45 வரையிலான வகுப்புகளில் அடங்கும் சேவைகளின்-services (பெயர், சொல், சின்னம், சாதனம் அல்லது இவற்றின் கலவைகள்) SM எனும் இவ்வகை வணிக முத்திரையின்கீழ் பதிவு செய்யப்படுகின்றன. முழுமையாக பதிவு செய்யப்படாத சேவையின் வணிக முத்திரைக்கு SM எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

அதாவது ஒரு பெயர், சொல், சின்னம், சாதனம்–device அல்லது இவற்றின் கலவைகள் வணிக முத்திரைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை பொதுவில் காட்டவே SM எனும் குறியீடு தற்காலிகமாக உதவுவதாகக் கொள்ளலாம். மேலும், இதன் முழுமையான பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும்; இன்னும் முடிவு பெறவில்லை அல்லது நிலுவையில் இருப்பதையும் இக்குறியீடு உணர்த்துகிறது. ஆக, முழுமையான அங்கிகாரத்தை பெறாத நிலையில் நாம் அதன் எந்த பாதுகாப்பு வசதிகளையும் பயன்படுத்த முடியாது என்பதையும் இவ்விடம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

3) “®” (registered)

ஒரு பொருளின் (product) முத்திரை அல்லது சேவையின் (service) முத்திரை அந்நாட்டின் அதிகார பீடத்திலுள்ள முத்திரை பதிவு அமைப்பால் ஒப்புதல் வழங்கப்பட்டு / அங்கீகரிக்கப்பட்டு சட்டபூர்வமாக பதிவுச் செய்யப்பட்டுவிட்டதை கட்டுவதே ® எனும் முத்திரையின் பொருளாகும். இதனை பெற்றுவிடும் நிலையில் ஒரு பொருளின் முத்திரை அல்லது சேவையின் முத்திரை தனது பொருளை/சேவையை சட்டபூர்வமாக பாதுகாக்க முடியும்.

சுருங்கக்கூறின் முழுமையாக பதிவு பெறாத அல்லது நிலுவையில் இருக்கும் பொருளின் முத்திரைக்கு TM எனும் குறியீடும், சேவையின் முத்திரைக்கு SM எனும் குறியீடும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விரண்டும் முழு பதிவிற்குட்பட்டு சான்றிதழைப் பெற்றுவிடும் நிலையில் ® எனும் குறியீடு பயன்படுத்தப்படும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader