இட்லி காலத்தால் மிகவும் பிந்தையது. இந்தோனிஷியாவில் “கெட்லி” என்று ஒரு உணவு இருந்திருக்கிறது. தோல் உரிக்காத உளுந்தம்பருப்பை மோரில் ஊறவைத்து, எடுத்து அரைத்து வடை மாதிரி தட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்து சாப்பிட்டார்கள்.
இம்மாதிரி உணவுடன், அரிசியும் கலக்கப்பட்டு தற்போதைய இட்லி, பின்னர் தமிழ்நாட்டில் வழக்கத்திற்கு வந்திருக்கலாம்.
ஊரில் இடித்த அரிசிமாவு கொண்டு ஆப்பம், பனையோலை ,பூவரசு இலைக்கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, ஆகியவற்றை கண்டறிந்து தமிழன் அதன் தொடர்ச்சியாகவே இட்லியை கண்டறிந்தான் என்கிறார்கள் – பேராசிரியர் தோ.பரமசிவன் போன்ற தமிழ் ஆய்வாளர்கள்.

“இட்டரிக” என்று 7ம் நூற்றாண்டிலும் “இட்டு அவி” என 12ம் நூற்றாண்டிலும் அழைக்கப்பட்ட பின்பு, “இட்டலி” என ஒரு சொல்லாய் திரிபு பெற்று பின்னர், “இட்லி” ஆனதாக குறிப்பிடுகிறார்கள்.
தற்போது இட்லியில் சம்பா ரவா இட்லி, இட்லி டிக்கா, இட்லி பிரியாணி, இட்லி மஞ்சூரியன் என்று பல்வேறு விதவிதமான இட்லிகள் உணவகங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பண்டங்களின் பட்டியலில் இட்லிக்கு , முக்கிய இடம் அளித்துள்ளது. அதன்படி கடந்த, 2015ம் ஆண்டு முதல் உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.