IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

லைவ் கிச்சன்..நூடுல்ஸுக்குப் பதிலா சேவை , பீட்சாவுக்குப் பதிலா ஊத்தப்பம்

Get real time updates directly on you device, subscribe now.

ஹோட்டல் தொழில் என்பது ரிஸ்க் நிறைந்தது. அதிகளவில் ஆரம்பிக்கப்படுவதும், அதே வேகத்தில் மூடப்படுவதும் ஹோட்டல் பிசினஸ்தான். சென்னையைச் சேர்ந்த நளினா கண்ணன் மாற்றி யோசித்திருக்கிறார். பாட்டனிஸ்ட், ஆர்க்கியாலஜிஸ்ட், இன்டீரியர் டிசைனர்… இப்படிப் பன்முகங்கள் இருந்தும் தன் நீண்டகாலத் தேடலுக்கு விடைகாணும் வகையில் ஹோட்டல் பிசினஸில் இறங்கியிருக்கிறார்.

சென்னை, மயிலாப்பூரில் ‘தளிகை’ ரெஸ்டாரன்ட் நடத்தும்  நளினாவின் கனவுகளும் கொள்கைகளும் அவரின் மெனுகார்டு போலவே ஆரோக்கியமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன.

அக்கார அடிசில், அசோகா அல்வா, கோசுமல்லி என இந்தத் தலைமுறையினர் கேள்விப்பட்டிராத பாரம்பர்ய உணவுகள்தான் இந்த ரெஸ்டாரன்ட்டின் ஸ்பெஷல். எந்த உணவிலும் வெங்காயம், பூண்டுக்கு இடமில்லை. கரம் மசாலா மணக்காது. பீட்சா, பர்கர், நான், நூடுல்ஸ் எனக் கூட்டம் ஈர்க்கும் மெனு கிடையாது. ஆனாலும், துணிந்து இப்படியொரு முயற்சிக்கு வித்திட்டிருக்கிறார் நளினா.

‘`எனக்குப் பூர்வீகம் ஸ்ரீவில்லிப்புத்தூர். பாரம்பர்யச் சாப்பாடுன்னா என்னன்னே மறந்துபோன இந்தக் காலத்துலயும், இப்பவும் என் வீட்டுல அதையெல்லாம் மறக்காம செய்றேன். அதே அனுபவத்தை மத்தவங்களுக்கும் கொடுக்கலாமேங்கிற எண்ணம் ரொம்ப நாளா இருந்தது. இப்போ நாங்க ஹோட்டல் வெச்சிருக்கிற இதே இடத்துல என் கணவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட் நடத்திட்டிருந்தார். அந்த இடத்தையே நான் கற்பனை பண்ணி வெச்சிருந்தது மாதிரியான ஹோட்டலா மாத்த முடியுமானு ரொம்ப நாளா யோசிச்சிட்டிருந்தேன். பல வருஷங்கள் கழிச்சுதான் அந்தக் கனவு நனவாகியிருக்கு’’ என்பவர் தன் உணவகம் பற்றி விவரித்தார்…

‘`எங்க ஹோட்டலுக்கு ‘தளிகை’னு பேர் வெச்சோம். தளிகைன்னா சமையல். தமிழ்நாட்டுல வைணவ மக்கள் மத்தியில புழங்கற வார்த்தை இது. பேர்வரைக்கும் செலக்ட் பண்ணிட்டாலும் நான் நினைச்சதுபோல மெனுவை எப்படிக் கொண்டுவர்றதுனு குழப்பமாவே இருந்தது. கல்யாணங்களுக்குச் சமைக்கிற பெஸ்ட் சமையல்காரங்களை வரவழைச்சோம். அவங்களுக்கு சவுத் இந்தியன் சாப்பாடு பண்ணத் தெரியும். ஆனா, கமர்ஷியலா பண்ணியே பழகியிருந்தவங்க. செயற்கையான கலர், மணம் சேர்க்கிறதெல்லாம் கூடாதுங்கிற கண்டிஷனோடு, ஆயிரம் பேருக்குச் சமைச்சிட்டிருந்தவங்களை நூறு பேருக்குச் சமைக்கப் பழக்கினோம். பாரம்பரிய  உணவுகளோட செய்முறைகளையும் நானே கத்துக்கொடுத்து செய்ய வெச்சேன். வழக்கமா ஹோட்டல் சென்ட்ரல் கிச்சன்ல அதிகாலை இரண்டு மணிக்கே மொத்தமா சமைச்சு அனுப்ப வேண்டிய இடங்களுக்கெல்லாம் அனுப்பிடுவாங்க. எங்க ஹோட்டல்ல அதிகபட்சமா 50 பேருக்குத் தேவையானதை மட்டும்தான் சமைப்போம். அது காலியானதும் மறுபடி ஃப்ரெஷ்ஷா சமைக்கணும்கிற கண்டிஷனோட ஆரம்பிச்சோம்…’’ என்கிறார்  நளினா, பெயரில் மட்டுமின்றி, மெனுவிலும் வித்தியாசங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

 

‘`நார்த் இந்தியன் சாப்பாடு இங்கே கிடைக்காது. சப்பாத்தி மட்டும் கிடைக்கும். அதுக்கும் சைட் டிஷ் கூட்டுதான்… ‘சப்பாத்திக்குக் குருமாவோ, பனீர் பட்டர் மசாலாவோ கிடையாதா’னு தயக்கத்தோடவே வருவாங்க. ஆனா, சப்பாத்திக்குக் கீரைக்கூட்டையும் பருப்பையும் தொட்டுச் சாப்பிட்டதும் இந்த டேஸ்ட் அவங்களுக்குப் பிடிச்சிடும்.

வெங்காயம், பூண்டு இல்லாத சமையல்தான் எங்க ஸ்பெஷல். ஆனாலும், அது ஒரு குறையாகவே யாருக்கும் தெரியாது. வெங்காயம் சேர்க்காம சமைக்கிறபோதுதான் அந்தந்த உணவோட ஒரிஜினல் ருசியை அனுபவிக்கமுடியும். உதாரணத்துக்கு பீன்ஸ் கறி… அதுக்கு வெங்காயம் தேவையில்லை. அப்போதான் அதன் அசல் டேஸ்ட்டை ஃபீல் பண்ண முடியும்.

வாழ்க்கையில ஹோட்டல் வாசலே ஏறாத வயசானவங்ககூட இங்கே வர்றாங்க. சாப்பிட்டு முடிச்சுட்டு என்னைத் தேடிவந்து தலையில கை வெச்சு ஆசீர்வாதம் பண்ணிட்டு, ‘திருப்தியா சாப்பிட்டேன்’னு நெகிழ்ந்து போய்ச் சொல்லிட்டுப் போவாங்க…” என்கிறவரின் அடுத்தடுத்த திட்டங்கள் இன்னும் ருசி கூட்டுகின்றன.

‘`வெங்காயம், பூண்டு சேர்க்காத சாப்பாடு சுவையா இருக்காதுங்கிற எண்ணத்தை உடைச்சிருக்கோம். நார்த் இந்தியன் சாப்பிடப் போகும்போது ரொட்டிக்கும் நாணுக்கும் ஏகப்பட்ட சைட் டிஷ் மெனுகார்டுல இருக்கும். `சவுத் இந்தியன்லயும் ஏன் அப்படிப் பண்ணக் கூடாது’னு யோசிச்சிட்டிருக்கோம். இட்லியோ, தோசையோ ஆர்டர் பண்ணினீங்கன்னா, அதுக்கு சட்னி, சாம்பார்தான் தொட்டுக்கணுமா…. ரசவாங்கியோ, மோர்க்குழம்போ தொட்டுக்கலாமேன்னு ஆப்ஷன்ஸ் கொடுக்கிற ஐடியா இருக்கு.

நம்ம பாட்டி, அம்மாவெல்லாம் கூழ் வடாம் போட்டுப் பார்த்திருப்போம். அந்தக் கூழ் அப்படியே சாப்பிடறதுக்கு அவ்வளவு டேஸ்ட்டியா இருக்கும். ஆனா, இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு அதெல்லாம் தெரியாது. அதைக்கூட எங்க ரெஸ்டாரன்ட்டுல கொண்டு வரப்போறோம். அதேமாதிரி மோர்க்களி. அதையும் அப்படியே கண் எதிர்ல சுடச்சுடத் தயார்செய்து கொடுப்பாங்க. அதுக்குத் தொட்டுக்க வத்தக்குழம்பு. அதுலயும் நிறைய வெரைட்டி.

லைவ் கிச்சன்… அதுதான் என் அடுத்த பிளான். சாம்பார்லேருந்து பருப்புசிலி வரை எல்லா உணவுகளையும் கஸ்டமர் கண் எதிர்லயே அவங்க சாய்ஸுக்கு ஏத்தபடி செய்து கொடுக்கிறது. உதாரணத்துக்கு பருப்புசிலின்னா… வாழைப்பூவா, அவரைக்காயா, பீன்ஸா… அவங்கவங்க விருப்பத்துக்கேத்த காயை வெச்சு செய்து கொடுப்பாங்க.

அதேமாதிரி அம்மாவோ, பாட்டியோ சாதம் பிசைஞ்சு கையில போடற காலமெல்லாம் போயிடுச்சு. அந்தச் சுகத்தை எல்லாம் இந்தத் தலைமுறைக் குழந்தைங்க மிஸ் பண்றாங்க. வயசானவங்களை வெச்சு சாதம் பிசைஞ்சு, வரிசையா குழந்தைங்களை உட்காரவெச்சு. கையில உருட்டிப்போட்டு, சாப்பிட வைக்கிற ஐடியாவும் இருக்கு.

இளைய தலைமுறையை ஆரோக்கியமான உணவுப்பழக்கத்துக்குத் திருப்பறதுதான் எங்க லட்சியம். நூடுல்ஸுக்குப் பதிலா சேவை, பீட்சாவுக்குப் பதிலா ஊத்தப்பம்னு நம்மகிட்டயே ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு. சுவையிலயும் கொடுக்கிற விதத்துலயும் சின்னச்சின்ன மாறுதல்கள் பண்ணினாலே போதும். மாற்றத்தைக் கொண்டுவந்துடலாம்…’’

– பிளாஸ்டிக் அரிசி பீதியிலிருக்கும் மக்களின் வயிற்றில் பால் பாயசம் வார்க்கின்றன நளினாவின் வார்த்தைகள்

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader