IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஒற்றைக் குரலால் பில்லியன் இளைஞர்களைத் திரட்டிய தி கிரேட் கிரேட்டா தன்பெர்க்!

Get real time updates directly on you device, subscribe now.


நம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைக் கோரிக்கையோடு மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய ஒரு மாபெரும் போராட்டதைப் போல உலக அளவில் தனது ஒற்றைக் கோரிக்கைக்காக பல பில்லியன் இளைஞர்களை திரட்டியிருக்கிறார் 16 வயது சிறுமி ஒருவர்.


சர்வ சாதாரணமாக நாள்காட்டியில் வரும் ஒரு வெள்ளிக் கிழமையில் ஒரு சிறுமி சுவீடன் நாடாளுமன்றம் முன் கையில் பதாகையுடன் சில கோஷங்களை முன்வைக்கிறார். அதை கடந்து செல்லும் மக்கள் அவளை ஒரு நடை பாதசாரியாகத்தான் பார்த்து கடந்து சென்றார்கள். ஆனால் எதையும் கருத்தில் கொள்ளாது தனி ஆளாக போராட்டத்துக்கு பொறுப்பெடுத்துக் கொண்டாள் அந்த சிறுமி. பின்னர் ஒரு காலகட்டத்தில் தனது பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டுமுழு போராளியாக மாறிப்போனாள்.

இன்று அவள் பின்னால் பல பில்லியன் இளைஞர்கள், பொதுமக்கள் என ஒட்டுமொத்த உலகத்தின் ஒற்றைக்குரலாக மாற்றியிருக்கிறார் . இப்படிப்பட்ட பெருமைக்குரியவர் “கிரேட்டா தன்பெர்க்”. இந்த 16 வயது சிறுமி காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதலுக்கு எதிராகப் போராடி வருகிறார். இவரது போர்க்குரல் உலக தலைவர்களை பதற வைத்துள்ளது.


காலநிலை மாற்றங்களுக்கு எதிரான அந்த சிறுமியின் சிறுபொறி இன்று உலகின் மொத்த பரப்புக்கான தீப்பந்தமாக எரிகிறது. அமைதிக்கான நோபல் பரிந்துரை, காலநிலை பற்றி ஐ.நாவில் உரை போன்றவற்றை மிகச் சிறிய வயதில் செய்து சாதனை படைத்துள்ளார் கிரேட்டா தன்பெர்க். நாளை நியூயார்க்கில் நடக்கவுள்ள காலநிலை தொடர்பான ஐ.நா உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இதையொட்டி அதே நகரில் பல லட்சக்கணக்கான மாணவர்களைத் திரட்டி நேற்று முன் தினம் மிகப் பெரும் பேரணி நடத்தியுள்ளார் கிரேட்டா. இவரின் அழைப்பை ஏற்ற மாணவர்கள் வெள்ளிக்கிழமை தங்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். ஆம்! இவர் சொன்ன அந்த #fridaysforfuture தான் இன்று இணையத்தின் மூலம் மக்கள் சக்தியாக மாறியிருக்கிறது.


போராட்ட களத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிய கிரேட்டா ” இன்று நடக்கும் மாநாட்டில் உலக தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பதவியை தக்கவைக்க மட்டும்தான் கேட்பார்கள். இல்லையா ? என மக்கள் முன் கைகாட்டி கேட்கிறார். கூட்டம் முழுதும் ஒரே குரலாக ஆமாம் எனும் போராட்ட குரல் விண்ணை பிளக்கிறது. தொடர்ந்து, “நாம் அவர்களைக் கேட்க வைக்க வேண்டும். நம் கோரிக்கைகளைத் தலைவர்கள் ஏற்று, நடைமுறைப் படுத்துவதற்காகவே நாம் இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

பாதுகாப்பான எதிர்காலத்தில் வாழ நமக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. அந்த பாதுகாப்பான எதிர்காலத்தை மட்டுமே நாம் கேட்கிறோம். பள்ளி மற்றும் பணிகளை விடுத்து போராட்டம் நடத்த நாம் வெறும் சாதாரணமானவர்கள் கிடையாது நாம் மாற்றத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். நம்மை யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் மாற்றம் வந்துகொண்டிருக்கிறது” எனப் பேசியிருந்தார். இந்த சிறுமியின் சீற்றம் உலக அரங்கில் ஒலிக்கிறது.


கடந்த இரண்டு நாட்களாக 156 நாடுகளில் பல மில்லியன் இளைஞர்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து விட்டு காலத்தின் பருவநிலை மாற்றம் குறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் காலநிலை உச்சி மாநாட்டை முன்னிட்டு ஐ.நா 500 போராட்டக்காரர்களை அழைத்து பேசியது. அதில் அவர்கள், காலத்தின் பருவநிலை மாற்றம் தங்களது கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.


மேலும் கிரேட்டா தன்பெர்க், “நியூயார்க்கில் நடந்த போராட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம். இளைஞர்களைத் தடுக்க முடியாது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளோம்” எனக் கூறினார். கிரேட்டாவின் இந்த பேச்சு உலக அளவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. பருவநிலைக்கு எதிரானது குறித்த இந்த சிறுமியின் சீற்றம் நாளை நடைபெறவுள்ள காலநிலை தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் எதிரொலிக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
#fridaysforfuture #ClimateStrike #klimatstrejk #Swedan #In4Net

  • வே.ராஜபாண்டி
Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader