கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து நான்கு வீடுகளின் மீது விழுந்ததில் நான்கு குழந்தைகள் உட்பட 17பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேட்டுப் பாளையத்திற்கு நேரில் சென்று விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், வீட்டின் சுவர் பழுதடைந்து இருப்பதை அப்பகுதி மக்கள் முன்பே அரசுக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்காக விட்டுள்ளது. இதனால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. அரசின் அலட்சியமே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு அறிவித்துள்ள ரூ.4 லட்சம் போதாது என்றும், உயிரிழந்துள்ள குடும்பத்தினரின் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை சீரமைத்து தர வேண்டும், அப்பகுதி மக்களுக்கு தரமான வீடுகள் இலவசமாகக் கட்டித் தரப்பட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
#MKStalin #Mettupalayam #17PeopleDead #In4Net