சூரரைப் போற்று கோபிநாத்தின் சுவாரஸ்யக் கதை !

Get real time updates directly on you device, subscribe now.

கொருர் ராமசாமி கோபிநாத்  (G R Gopinath) என சுருக்கமாக அழைக்கப்படும் கேப்டன் கோபிநாத் கர்நாடகத்தின் ஹசன் மாவட்டத்தில் உள்ள கொருர் என்ற கிராமத்தில் பிறந்தார்.

தனது பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு, இந்திய ராணுவ அகாடமியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.

இந்திய ராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற பின், ராணுவத்திலேயே உயர் அதிகாரியாக பணியாற்றத் தொடங்கினார்.

இந்தியா தலையிட்டு வங்க தேசம் என தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்த 1971 வங்க தேசப் போரில் நம் கேப்டன் கோபிநாத்தும் போர் செய்து இருக்கிறார்.

சுமார் எட்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு 30 வயதுக்குள்ளேயே ராணுவத்துக்கு டாட்டா சொல்லிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்திய ராணுவத்தில் இருந்து வெளியேறிய கோபிநாத், அடுத்தடுத்து சில பல வியாபாரங்களைச் செய்துள்ளார்.

அதில் குறிப்பிடத்தக்கவை, கால் நடை வளர்ப்பு, பால் விற்பது, கோழிப் பண்ணை, பட்டுப் புழு வளர்ப்பு, மோட்டார் சைக்கிள் டீலர், உடுப்பி ஹோட்டல் ஓனர், பங்கு தரகர் (Stock Broker), விவசாய நீர் பாசன சாதனங்களை விற்பவர், அரசியல்வாதி அதாவது சில முறை தேர்தலில் நின்று தோற்று இருக்கிறார்.

கடைசியில், எந்த ஒரு சாதாரண தனி மனிதரும் தொட யோசிக்கும் விமான சேவைத் துறையைக் கையில் எடுத்தார்.

ஜே ஆர் டி டாடா போன்ற, இந்தியாவின் பிசினஸ் பிரம்மாக்களாலேயே, நிம்மதியாக தொழில் செய்ய முடியாத சிக்கலான துறை, இந்த விமான சேவைத் துறை.

1932-ல் தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸ் 1953-ல் முழு அரசு நிறுவனமானது என்றால், அரசின் தலையீடுகளும், கெடுபிடிகளும் புரியும்.

ஆனால் இந்த விமான சேவைத் துறை தான் இவர் பெயரை நிலைத்து நிற்க வைத்தது. ஆனால் இந்த பயணத்தில் மூஞ்சி முகரை எல்லாம் பெயரும் அளவுக்கு பலமான அடியும் விழுந்தது.

டெக்கன் ஏவியேஷன்

அப்போது தான் தன் பழைய ராணுவ நண்பர் சாமுவேல் உடன் இணைந்து ஒரு தனியார் ஏவியேஷன் நிறுவனத்தை 1997-ல் தொடங்கினார். அது தான் டெக்கன் ஏவியேஷன். அடித்துப் பிடித்து பணத்தை தயார் செய்து ஒரு விமானத்தில் தொடங்கியது டெக்கன் ஏவியேஷனின் பயணம். டெக்கன் ஏவியேஷன் மெல்ல இந்தியா முழுக்க பிரபலமடைந்தது.

குறிப்பாக அரசியல்வாதிகள் மத்தியில் அநியாயத்துக்கு பிரபலமானார் கோபிநாத்.

அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சார பயணங்களுக்கு டெக்கன் ஏவியேஷனின் சார்டர்ட் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினர். இன்று வரை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அன்று டெக்கன் ஏவியேஷன் என்கிற பெயரில் தொடங்கிய சார்ட்டர் சேவையை, இன்று டெக்கன் சார்ட்டர்ஸ் என்கிற பெயரில் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார் கோபிநாத்.

இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் பெருந் தலைகளான அம்பானி, எஸ்ஸார் குழுமங்களின் ஹெலிகாப்டர்கள் எல்லாம், நம் கோபிநாத்தின் டெக்கன் சார்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தான் இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டெக்கன் ஏவியேஷன் நிறுவனத்தின் வழியாக, சார்ட்டர் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை, பெரிய மனிதர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கு மட்டும் இயக்கிக் கொண்டு இருப்பதில் பயன் இல்லை.

புதிய யோசனையை தேடிய கோபிநாத்

வேறு என்ன செய்யலாம் என யோசித்தார் கோபிநாத். பயணிகள் விமான சேவையை வழங்கினால் என்ன..? என யோசனையை அடுத்த கியருக்கு தட்டிவிட்டார்.

2000-ம் ஆண்டுகளில், இந்திய விமான சேவையை, ஒட்டு மொத்த இந்தியர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

இந்த குறைவான விமான பயணிகளையும் ஏர் இந்தியாவும், சஹாராவும், ஜெட் ஏர்வேஸும் வளைத்துப் போட்டு வைத்திருந்தார்கள்.

இவர்களைத் தாண்டி பயணிகள் விமான சேவையில் கால் பதிப்பது எல்லாம் கிட்ட தட்ட நடக்காத காரியம் என கோபிநாத்தின் மண்டையைக் கழுவினார்கள் சுற்றி இருந்தவர்கள்.

அசராத கோபிநாத்

எத்தனை பேர் பயமுறுத்தினாலும் கோபிநாத் அசருவதாகத் தெரியவில்லை. “2002-ம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 1.3 கோடி பேர் மட்டுமே விமான சேவையை பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். மீதமுள்ள 99 கோடி இந்தியர்களுக்கு விமான சேவையை வழங்கினால் என்ன..?” என பாயிண்ட் பிடித்தார்.

அதே நேரத்தில் “வெறுமனே விமான சேவையைக் கையில் எடுத்தால் வேலைக்கு ஆகாது. ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் போன்ற, (அன்றைய காலத்து) விமான சேவை தாதாக்களோடும் மோதக் கூடாது. அவர்கள் வாடிக்கையாளர்களைப் பிடிப்பதும் என் நோக்கம் அல்ல. ஆனால் வியாபாரம் வளர வேண்டும்” என யோசித்தார். அதற்கு கோபிநாத் எடுத்த முடிவு தான் சிறு நகரங்கள்.

21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய விமான சேவைத் துறையின் ராஜா ராணியாக இருந்த ஏர் இந்தியாவும், ஜெட் ஏர்வேஸும் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களையும், அதன் வாடிக்கையாளர்களையுமே குறி வைத்து வியாபாரம் செய்து வந்தார்கள்.மற்ற நகரங்களில் கடை விரிப்பதைப் பற்றி அதிகம் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் நம் கேப்டன் கோபிநாத்தோ தன் வியாபாரத்தை குலு மணாலி, தரம் சாலா, பெல்லாரி, ஜபல்பூர், ராஜமுந்திரி, விஜயவாடா போன்ற இந்தியாவின் டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்கள் பக்கம் வண்டியைத் திருப்பினார். அந்த காலத்தில், இந்த நகரங்களுக்கு எல்லாம் விமான சேவையே கிடையாது.

“ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட்” என ஒரு அதிரடி சலுகை கொடுத்து, குறைந்த விலையில் விமானத்தில் பறக்கலாம் என ஒட்டு மொத்த இந்தியாவையும் அன்னாந்து

மலிவு விலை கட்டணங்கள்

கோபிநாத்தின் முன் இருந்த அடுத்த சிக்கல் மலிவு விலையில் விமான கட்டணங்களை வசூலிப்பது. சுருக்கமாக செலவை எப்படி குறைப்பது என யோசித்தார். LCC என்று சொல்லப்படும் Low Cost Carrier ரக சேவைகளை வழங்கத் தயாரானார். கணிசமான அளவுக்கு விமான கட்டணங்கள் செலவு குறைந்தது.

விமானத்தில் Full Service Carrier என்றால் விமானத்திலேயே பொழுது போக்கு, உணவு, மது பானங்கள் போன்ற பல வசதிகளைச் செய்து தருவார்கள். LCC என்றால் இந்த வசதிகள் எல்லாம் இருக்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். நம் கேப்டன் கோபிநாத் இந்த இரண்டாவது ரக விமானங்களை களம் இறக்கினார். செலவு தானாக குறைந்தது.

இன்று ஒட்டு மொத்த இந்தியாவின் விமான சேவைகளைப் பார்த்தால் சுமார் 65 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் கோபிநாத்தின் ஐடியாவில் இந்தியாவுக்குள் வந்த LCC விமானங்கள் தான். 2003-ல் டெக்கன் ஏவியேஷன் LCC விமானங்களை களம் இறக்கி காசு பார்க்கத் தொடங்கிய பின் தான், ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், இண்டிகோ போன்ற விமான சேவை நிறுவனங்கள் அதே LCC ஃபார்முலாவை வைத்து வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். அந்த அளவுக்கு கேப்டன் கோபிநாத்தின் தாக்கம் இன்று வரை இந்திய விமான சேவைகளில் பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறது.

சரி இந்த ஊர்களுக்கு எல்லாம் விமான சேவையைத் தொடங்கலாம், 

செலவுகளை குறைக்க LCC ரக விமான சேவைகளும் ரெடி. ஆனால் வாடிக்கையாளர்களை எப்படிக் கவர்வது… போட்றா ஆஃபர… “ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட்” என ஒரு அதிரடி சலுகை கொடுத்து, குறைந்த விலையில் விமானத்தில் பறக்கலாம் என ஒட்டு மொத்த இந்தியாவையும் அன்னாந்து தன் டெக்கன் ஏவியேஷன் விமானத்தைப் பார்க்க வைத்தார். அந்த காலத்து ஜாம்பவான்களான ஏர் இந்தியா, சஹாரா, ஜெட் ஏர்வேஸ் எல்லாம் வாய் அடைத்துப் போனார்கள்.

2003-ல் தொடங்கப்பட்ட கேப்டன் கோபிநாத்தின் ஏர் டெக்கன் நிறுவனம், அடுத்த 3 – 4 ஆண்டு காலத்தில், இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸை தூக்கிச் சாப்பிட்டது. அந்த நேரத்தில் இந்தியாவில் சுமார் 67 நகரங்களுக்கு, தன் விமானங்களை இயக்கிக் கொண்டு இருந்தது ஏர் டெக்கன். ஒரு கட்டத்தில் ஏர் டெக்கன் நிறுவனத்தில் ஒரு ரூபாய் டிக்கெட் பெறுவது எப்படி என சாதாரண வெகு ஜன மக்கள் கேட்கும் அளவுக்கு பிரபலமாக வளர்ந்தது. இதெல்லாம் ஓகே தான் ஆனால் லாபம்..?

ஒரு ரூபாய்க்கு விமான சேவை

ஒரு ரூபாய்க்கு விமான சேவை, அதிரடியாக 3 – 4 ஆண்டுகளில் இந்தியாவின் 67 நகரங்களில் விமான சேவை தொடக்கம் என ஒரு போருக்கு நிகராக அதி வேகமாக, தன் டெக்கன் ஏவியேஷன் வியாபாரத்தை நடத்திக் கொண்டு இருந்தார் கேப்டன் கோபிநாத். டெக்கன் ஏவியேஷன் இயக்குநர் குழுவும், நிறுவனத்தின் நிதி நிலையும் கேப்டன் கோபிநாத்தின் அதிரடிக்கு முட்டுக் கட்டைப் போட்டார்கள். குறிப்பாக கடன் கொடுத்தவர்கள், முதலீடு செய்தவர்கள் எல்லாம் லாபம் இல்லை என கடுப்பாகத் தொடங்கினார்கள்.

அதே நேரத்தில், மேற்கொண்டு டெக்கன் ஏவியேஷன் நிறுவனத்தில் முதலீடு செய்ய, பங்குச் சந்தை வழியாக நிதி திரட்டினார்கள். டெக்கன் ஏவியேஷன் என்கிற பெயரில் பங்குகள் வெளியிடப்பட்டது. இப்படி பங்குச் சந்தை வழியாக நிதி திரட்டியவர்கள், தங்கள் நிதி நிலையை ஒவ்வொரு காலாண்டுக்கும் முறையாக பங்குச் சந்தைகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். இந்த விதியினால் டெக்கன் ஏவியேஷன் நிறுவனத்தின் நஷ்டங்கள் அப்பட்டமாக பொது மக்களுக்குத் தெரிய வந்தது.

கோபி நாத்துக்கு உதவிய விஜய் மல்லையா

என்ன செய்ய என யோசித்துக் கொண்டு இருந்த போது தான், 2007-ம் ஆண்டில் நம் கிங் ஃபிஷ்ஷர் புகழ் விஜய் மல்லையா டெக்கன் ஏவியேஷனின் 26 சதவிகித பங்குகளை வாங்கினார். 2007 – 08-ம் ஆண்டு வாக்கில் டெக்கன் ஏவியேஷன் மற்றும் கிங் ஃபிஷ்ஷர் ஏர்லைன்ஸ், முழுமையாக இணைக்கப்பட்டது.

டெக்கன் ஏவியேஷனை, கிங் ஃபிஷ்ஷருக்கு விற்கும் போது, சார்ட்டர் சேவைகளை மட்டும் பிரித்து, டெக்கன் சார்ட்டர்ஸ் லிமிடெட் என்கிற பெயரில் தனி நிறுவனமாக தொடங்கிவிட்டார். அன்றில் இருந்து இன்று வரை டெக்கன் சார்ட்டர்ஸ் சிறப்பாக செயல்பட்டு ஓரளவுக்கு லாபமும் ஈட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

டெக்கன் ஏவியேஷனை விற்று வந்த பணத்தில் டெக்கன் 360 என ஒரு சரக்கு விமான சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனமும் நிதி நிலை மோசமாகி நொடிந்து போனது. அதன் பிறகு டெக்கன் ஷட்டில் என்கிற பெயரில் குஜராத்தின் அஹமதாபாத், சூரத், ஜாம்நகர், பாவ்நகர் கந்த்லா போன்ற நகரங்களுக்கு சார்ட்டர் விமானம் இயக்கினார். அந்த வியாபாரமும் ஊத்தி முழுகியது.

இந்த சோதனைகள் எல்லாம் தாண்டி, கடந்த 2017-ம் ஆண்டு, மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், இந்திய நகரங்களை, விமான வழித் தடங்கள் வழியாக இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் 34 வழித் தடங்களில் விமானங்களை இயக்க அனுமதி பெற்று, மீண்டும் கபாலியாய் களத்தில் இறங்கி இருக்கிறார் கேப்டன் கோபிநாத். இந்த முறை ஏர் டெக்கன் என்கிற பெயரில் செயல்படத் துவங்கி இருக்கிறார்கள்.

இன்று வரை, கோடீஸ்வரர்கள் & பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே புழங்கும், இந்திய விமான சேவை வியாபாரத்தில், ஒரு குக்கிராம வாசியாக வந்து, தன் கால் தடத்தை அழுத்தமாக பதித்துக் கொண்டு இருக்கும் நம் கேப்டன் கோபிநாத்-க்கு ஒரு ராயல் சல்யூட்.

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More