IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சோனி மேன் அகியோ மொரிட்டோவின் வெற்றிக்கதை

Get real time updates directly on you device, subscribe now.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சுக்கு ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மட்டும் நாசமாகவில்லை.

ஒட்டு மொத்த ஜப்பானிய பொருளாதாரமும் சின்னாபின்னமானது. ஜப்பானியர் எழுந்து நடக்கவே மிகவும் துன்பப்பட்டார்கள்.

கீழே விழுந்த யானை மறுபடியும் எழ அவகாசம் தேவை தான். ஆனால், இது குதிரைக்கு பொருந்தாது. அப்படித்தான், ஜப்பான் எழுந்தது. குதிரையைப் போல !
மொத்த ஜப்பானும், உலகமே திரும்பிப் பார்க்கும் படி ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த வேலையில், தன் குடும்ப தொழிலான மதுபான உற்பத்தியை மறுபடியும் எடுத்து நடத்த யோசித்தார் மொரிட்டா.

எலக்ட்ரானிக் மீது அதிக ஆர்வம் மொரிட்டாவுக்கு இருக்க, தன் போர்கால நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து டோக்கியோ துஷின் கோக்யோ(டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்) எனும் எலக்ட்ரானிக் கடையை 1946ஆம் ஆண்டு மே 7ம் தேதி ஆரம்பித்தனர்.

இந்த கடை ஆரம்பித்த சமயம் வெறும் ஏழு ஊழியர்கள் மட்டுமே, மொத்த முதலீடு வெறும் 530 டாலர்கள்.

முதலாளிகள் இரண்டு நண்பர்கள் மஸாரு இபுகா, அகியோ மொரிடா. இருவரும் பணத்தில் குசேலர்கள், ஐடியாவில் குபேரர்கள்.

ரேடியோ கருவிகள் செய்யலாமா, ராடார் பாகங்கள் தயாரிக்கலாமா, அரிசி சமைக்கும் குக்கர் பண்ணலாமா என்று ஆயிரம் ஆயிரம் கனவுகள் இவர்களின் எண்ண ஓட்டத்தில் இருந்தன.

அந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை.

உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார்.

அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது.

சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார்.

சோனி என பெயர் வந்ததன் பின்னணி

அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.

இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவனம் செலுத்தினார்.

வாக்மேன் உருவான கதை

அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.

அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர்.

ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும்.

1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம்.

மொரிட்டாவின் தலைமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி.

அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது.

அறுபதில் டென்னிஸ் கற்றுக்கொண்ட மொரிட்டா

நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார்.

ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.

சோனி நிறுவனத்தின் அடுத்த தலைமை பொறுப்பாளர் 

மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர்.

குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.

தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார்.

அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது.

அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர்.  டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader