IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கடிகாரம் முதல் கார் வரை – இயந்திரன் ரத்தன் டாடாவின் வெற்றிக்கதை

39

பிரிட்டிஷ் இந்தியாவில் 1937ல் சூரத் நகரில் நாவல் டாடா – சுனூ தன்மதியருக்குப் பிறந்தார் ரத்தன் டாடா.

தனது நிர்வாக மேல்படிப்பை ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் 1975ல் முடித்தார். அவர் அங்கு மேற்படிப்பை முடித்தவுடனேயே மிகப்பெரிய நிறுவமான IBMல் அவருக்கு வேலை கிடைத்தது. ஆனால் இந்தியாவில் தான் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தாய்நாட்டிற்கே திரும்பினார்.

தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் பணியிலமர்ந்தார் ரத்தன் டாடா. சொந்த நிறுவனமாய் இருந்தாலும் அடிப்படையான சிறிய பொறுப்புகளையே செய்து வந்தார் அவர். அதனால் உழைப்பின் அருமையை அறிந்திருந்தார்.

30 வருடம் டாடா குழுமத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு பங்காற்றிய ரத்தன் டாடா, 1991ல் டாடா குழுமங்களின் தலைவராக, நிறுவனரும் அன்றைய தலைவருமான ஜே.ஆர்.டி டாடாவால் நியமிக்கப்பட்டார்.

உலகமே வியந்த அசுர வளர்ச்சி

அதுவரை இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக இருந்த டாடா குழுமத்தை உலகின் பார்வைக்கு எடுத்துச் சென்றார். “சிறிய முன்னேற்றங்கள் பற்றி யோசிப்பது எனக்குப் பிடிக்காது” என்பார் டாடா. “எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகப்பெரிதாய் அனைவரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்று கூறுவார்.
அப்படித்தான் மிகப்பெரிய அடிகளை உலக மார்க்கெட்டில் எடுத்து வைத்தது டாடா குழுமம். உலகின் ஒவ்வொரு நாட்டிலும்,ஒவ்வொரு சந்தையிலும் தனக்கான வாய்ப்புகளை கண்டறிந்தார்.

இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என அனைத்துத் துறையிலும் அசுர வளர்ச்சி கண்டது இந்நிறுவனம். இவர் பொறுப்பேற்ற பின் டாடா குழுமம் கால் வைக்காத துறை இல்லை என்றே சொல்லலாம்.

ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது டாடா குழுமம். சொகுசுக் கார்களைத் தயாரிப்பதில் வல்லுநர்களான லேன்ட்ரோவர், ஜாக்குவார் ஆகிய கம்பெனிகளின் இந்திய உரிமையை 2008ல் வாங்கினார் டாடா. இது
ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

இந்திய கார்களுக்கு வெளிநாட்டில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்தினார். கோரஸ் என்ற உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனத்தை டாடா வாங்க, உலகின் முன்னனி இரும்பு உற்பத்தியாளராய் உருப்பெற்றது டாடா ஸ்டீல்ஸ். உலகமயமாக்கலால் பல நிறுவனங்கள் இந்தியாவிற்குள் காலடியை எடுத்து வைக்க, உலக சந்தையில் சத்தமின்றி தன்னிகரற்ற ஒரு இடத்தைப் பெற்றது டாடா குழுமம்.

தற்போது இந்நிறுவனத்தின் வருவாயில் 65% வெளிநாடுகளிலிருந்துதான் ஈட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பொருளாதார வளர்ச்சியில் இவரது பங்கீட்டைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருதும், பத்ம விபூஷண் விருதும் வழங்கி கௌரவித்தது.

நானோ திட்டம்

அனைத்து முன்னனி கார் நிறுவனங்களும் கோடிகளில் கார்களைத் தயாரித்துக்கொண்டிருக்க, மாற்றுத் திசையில் பயணித்தார் டாடா.

சாமானிய மனிதனும் நான்கு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று கருதினார். அதனால் உதித்ததுதான் ‘டாடா நானோ’ திட்டம். வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார்கள் வெளிவரும் என்று டாடா நிறுவனம் அறிவித்தபோது உலகமே கேலி செய்தது.

தரம் குறைவாயிருக்கும், சிறு அடிபட்டாலும் கார் நொறுங்கிவிடும் என பழித்தனர். இது நிச்சயம் சாத்தியமில்லை என்று அனைவரும் சொல்ல, அனைத்தையும் பொய்யாக்கி இந்திய சாலைகளில் நானோவை கம்பீரமாய் வலம்வர வைத்தது டாடா நிறுவனம்.

விலை முன்பு சொல்லப்பட்டதை விட சற்றுக் கூட இருந்தாலும் (1.25 லட்சம்) , உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையை தனதாக்கியது நானோ.

விலை குறைவு என்றாலும் தரத்தில் எந்தக் குறையும் இல்லாமல் வெற்றிகரமான மாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது நானோ. உலகின் அனைத்து கார் கம்பெனிகளும் டாடாவிற்கு தலை வணங்கின.

சொந்த வாழ்க்கை

ரத்தன் டாடா தனது பழைய மாதிரி மெர்சடிஸ் செடானை தானாக ஓட்டிச் செல்வதையே விரும்புகிறார். அவர் சில சமயங்களில் தனது சொந்த ஜெட் விமானத்தில் பறப்பதை விரும்புகிறார்.

வணிக விமானப் போக்குவரத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத, வழக்கில் இல்லாத பால்கன் ஜெட் விமானம் ஒன்று அவரிடம் உள்ளது.

ரத்தன் டாடா பெரும்பாலும் குழுமத்தின் பணி வழித் தலைவர் அல்லது முதன்மைச் செயல் அலுவலராக உள்ளார். குழுமத்தின் பங்குதாரர் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் உள்ள அவரது மூலதனப் பங்குகளில் பெரும்பாலானவை, குடும்ப வழியில் பெற்ற பங்குகளே ஆகும். அவரது பங்கு ஒரு சதவீதம் அல்லது அதற்கும் குறைவானதே.

அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு, தோராயமாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேறும்.
டாடா சன்ஸின் மூலதனப் பங்குகளில் ஏறக்குறைய 66 சதவீதம், அசல் ஜாம்செட்ஜி குடும்ப உறுப்பினர்கள் நிறுவிய, பொதுநல அறக்கட்டளைகளிடம் உள்ளன.

இதில் மிக அதிகமான பங்கு, ஜாம்செட்ஜியின் மைத்துனரான ஷபூர்ஜி பல்லோஞ்சி மிஸ்த்ரி வழியிலான குடும்பத்தினரிடம் உள்ளது.

பங்குதாரர்களான அறக்கட்டளைகளிலேயே பெரியவை, சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை (இது ரத்தன் டாடாவிலிருந்து வேறுபட்டது) ஆகிய இரண்டும் ஆகும்.

இவை ஜாம்செட்ஜி டாடாவின் மகன்களின் குடும்பத்தாரால் தோற்றுவித்தவை.

ரத்தன் டாடா, சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும், சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடையாள முகமாக அறியப்படும் ரத்தன் டாடா திருமணம் செய்துகொள்ளவில்லை.

கடிகார தயாரிப்பிலும் முன்னணியில் இருக்கும் இவருக்கு இதற்கு நேரம் ஒதுக்க விருப்பமில்லையோ என்னவோ !!!