IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கேள்வி – பதில் தளமான ’Quora’ – தமிழ் மொழியில் சேவை தொடக்கம்

13

கேள்வி & பதில் தளமான Quora, தமிழ் மொழியில் தன் சேவையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தளத்தில் எவரும் கேள்விகள் கேட்கலாம். தங்கள் அறிவைப் பகிரலாம். மற்றவரிடமிருந்து கற்றுக்கொண்டு உலகை நன்றாகப் புரிந்துகொள்ளலாம். Quora, ஆங்கிலம் அல்லாது மேலும் 16 மொழிகளிலும் தற்போது உள்ளது.

 

உலகின் அறிவைப் பகிர்வதும் வளர்ப்பதுமே Quora-வின் இலட்சியம் ஆகும். உலகின் பெரும்பான்மையான அறிவுச் செல்வத்தைப் பொது மக்களால் இணையம் வழியாக அணுக முடியாது. எனவே தான், இலட்சக்கணக்கான தலைப்புகளில் தங்களுக்குத் தெரிந்ததை மக்கள் பகிர்ந்துகொள்ளும் தளம் ஒன்றை Quora உருவாக்கியுள்ளது.

 

2010ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்தத் தளம், வளர்ந்து, தற்போது மாதம்தோறும் 30 கோடி (300 மில்லியன்) தனிப்பட்ட பயனர்கள் பயன்பெறும் தளமாக உள்ளது. Quora தளத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களுள் 50 விழுக்காடுக்கும் மேற்பட்ட பயனர்கள், அமெரிக்காவுக்கு வெளியில் இருப்பவர்கள்.

Quora தொடங்கப்பட்டது முதலே இந்தத் தளம் முன்னணிப் பிரமுகர்களையும் நிபுணர்களையும் ஈர்த்து வருகிறது. இவர்கள், இத்தளத்தில் மக்கள் எழுப்பிய அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்கள். அத்துடன் தங்கள் அறிவையும் பகிர்ந்துள்ளார்கள். இவை, இதற்கு முன்பு இத்தனை எளிதாக கிடைத்ததில்லை.

 

முக்கியப் பிரமுகர்களான பாரக் ஒபாமா, கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இயக்குநர் அல்போன்சோ குரோன் ஆகியோர், Quora தளத்தில் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளனர்.

 

“உலகின் அறிவுச் செல்வத்தைப் பகிர்வதும் வளர்ப்பதுமே எங்கள் இலட்சியம் ஆகும். நாங்கள் உயர் தரமான உள்ளடக்கத் தளத்தை உருவாக்கி வருகிறோம். அமெரிக்காவுக்கு வெளியில், இதர பல நாடுகளிலிருந்து எல்லாத் தரப்பு மக்களும் பதிவு செய்வதையும் பங்களிப்பதையும் காண்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

 

தமிழ் மொழி பேசும் மக்கள் பலர், Quora-வை ஆங்கிலத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது நாங்கள் தமிழ் மொழியிலேயே Quora-வைத் தொடங்குகிறோம்.

 

இதன் மூலம், மேலும் பல தமிழர்கள் பங்கேற்பார்கள் என நம்புகிறோம்,” என Quora தளத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஆடம் டி’ஆஞ்சலோ கூறினார்.

 

டிசம்பர் மாதத்தில், சிறு குழுவினருடன் தமிழ் மொழியில், தனது சோதனைப் பதிப்பை Quora வெளியிட்டது.

 

மருத்துவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கிராஃபிக் டிசைனர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களால் வழங்கப்பட்ட தரமான உள்ளடக்கத்துடன், சில மாதங்களிலேயே இந்தத் தளம் சிறப்பாக வளர்ந்துள்ளது.

 

கடந்த சில மாதங்களில், பல பொருட்களுக்கு (திரைப்படங்கள், புத்தகங்கள், கேம்கள், இசை) பதிப்புரிமை ஏன் பெறப்படுகிறது என்கிற கேள்விக்கு தி நியூஸ் மினிட் பத்திரிக்கையாளர் மேகா ஸ்ரீராம் அவர்களும், தமிழகம் தற்போது இருப்பதை விட சிறந்த பொருளாதார மாநிலமாக மாற என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு இனவென்ட்டோ ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலமைச் செயல் அதிகாரியும்,

 

Quoraவின் பிரபல எழுத்தாளருமான பாலாஜி விஸ்வநாதன் அவர்களும், ஒளியின் வேகத்தை துல்லியமாக எவ்வாறு கண்டறிந்தார்கள் என்ற அறிவியல் சார்ந்த கேள்விக்கு ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரியின் துணைப் பேராசிரியர் விஜயநரசிம்ஹன் அவர்களும் விடைகளை எழுதியுள்ளனர். மேலும் இது போன்ற பல பரவலான கருப்பொருள்களிலும், சிந்தனைக்குரிய பதில்களை நாங்கள் கண்டுள்ளோம்.

 

Quora எப்படிச் செயல்படுகிறது?

 

Quora தளத்தில் எந்தத் தலைப்பிலும் மக்கள் கேள்விக் கேட்கலாம். பின்னர் அந்தக் கேள்விகளை, அவை தொடர்பான நிபுணத்துவமும் அனுபவமும் கொண்ட, பயனுள்ள மற்றும் உயர் தரமான பதில்களை அளிக்கக்கூடியவர்களுக்கு Quora பிரித்து அனுப்பும்.

பதில்களை எழுதுவது, தலைப்புகளைப் பின்தொடர்வது, மக்களைப் பின்தொடர்வது ஆகியவற்றின் மூலம் எவ்வளவு அதிகமாக ஒருவர் Quora-வைப் பயன்படுத்துகிறாரோ, அந்த அளவுக்கு Quora-வால் இந்தத் தளத்தில் அவரது அனுபவத்தைத் தனிப்பயனாக்க முடியும்.

 

இந்தத் தளத்தில் உள்ள எழுத்தாளர்களின் தரம், Quora சமூகத்தில் உள்ள பிறரிடமிருந்து எழுத்தாளர்கள் பெறும் பின்னூட்டம், நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான தயாரிப்பு அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் Quora-வால் கேள்விகளுக்கு நல்ல பதில்களை பெற முடிகிறது.

 

Quora-வில் உள்ளவர்களின் அடையாளங்கள், உண்மை உலகில் வாழும் மக்களின் நீட்டிப்பாகவே அமைகின்றன. Quora தளத்தில் உங்கள் உண்மையான பெயரைப் பயன்படுத்துவதன் மீதான கொள்கை, உங்களுடைய பதில்களின் மீதான நம்பிக்கையையும், நேர்மையையும் அதிகரிக்கும்.

 

“நற்பண்புடன் இருத்தல், மரியாதை அளித்தல்” என்ற கொள்கையையும் Quora கொண்டிருக்கிறது. இதன்மூலம், குறைந்தபட்ச நாகரிகத்துடன் பழகுவது, Quora-வில் அவசியமாகிறது. இயந்திரக் கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கம் மற்றும் ஒத்தமைப்புப் பொருத்தம் ஆகிய தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

 

இவற்றின் மூலம், உங்கள் அனுபவத்தை மோசமாக்கக் கூடிய ஸ்பாம், உள்ளடக்கத் திருட்டு, ட்ரோலிங் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்குகிறோம்.

 

மக்கள் இங்கே பதிவு செய்யலாம் https://ta.quora.com அல்லது Quora கைபேசி செயலியைப் பதிவிறக்கலாம்.

 

Quora பற்றி…

 

Quora, 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. Quora, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மவுண்டெய்ன் வியூ பகுதியில் அமைந்துள்ளது. முதல் தயாரிப்பாக 2010இல் ஆங்கிலத்தில் தொடங்கப்பட்ட தளம், அப்போது முதலே உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது.

 

ஆடம் டி’ஏஞ்சலோ, Quora-வின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் ஆவார். Quora-வைத் தொடங்குவதற்கு முன்னதாக இவர், 2006-2008 காலக்கட்டத்தில் Facebook நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியாற்றினார்.