தரச்சான்று நிறுவனங்கள் சரிவர இயங்கவில்லை – ஆர்.பி.ஐ. விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.


அரசு அனுமதியுடன் தரச்சான்று பெற்ற நிறுவனங்கள் தங்களது பணியை சரிவர செய்யவில்லை என்று ரிசர்வ் வங்கி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.


நாட்டின் முன்னணி தரச்சான்று நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் சந்தித்தார். அப்போது ஆர்பிஐ துணை கவர்னரும் உடனிருந்தனர்.


இந்தக் கூட்டத்தில் தரச்சான்று நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் ஆய்வுகளை நடத்துவதில்லை என்றும், முதலீட்டாளர்களின் நலனுக்கேற்ப தகவல்களை வெளியிடுவதில்லை என்றும் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.


பங்குச் சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள், அவற்றிற்கு உள்ள கடன் பொறுப்புகள் உள்ளிட்ட விவரங்கள் தரச்சான்று நிறுவனங்களுக்கு தெரியும். ஆனால் உரிய காலத்தில் இதுபற்றிய தகவலை வெளிப்படுத்துவதில்லை.


இதனால் நலிவடையும் நிறுவனங்களின் பங்குகளை அப்பாவி முதலீட்டாளர்கள் வாங்கி ஏமாறுகின்றனர் என்று சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்துக்குள்ள கடன் பொறுப்புகள் குறித்து தரச்சான்று நிறுவனங்கள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக இதில் முதலீடு செய்த வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி போன்ற நிதி நிறுவனங்களின் முதலீடுகள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.


ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டம் பிற வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு பரவி பெரும் நிதிநெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வீடுகட்ட கடன் அளிக்கும் நிதி நிறுவனங்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக இந்தக் கூட்டத்தில் ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்தத் துறையில் வாராக் கடன் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமே தரச்சான்று நிறுவனங்கள் அளிக்கும் தர நிர்ணய புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டவைதான்.


ரியல் எஸ்டேட் துறை மூலமாக வங்கிகளின் வாராக் கடன் ரூ. 12 லட்சம் கோடியாகும். இதில் தரச்சான்று நிறுவனங்கள் அளிக்கத் தவறிய தரச்சான்றும் முக்கிய காரணம் என்று சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார்.


சர்வதேச அளவில் தரச்சான்று நிறுவனங்கள் பெரும்பாலும் ஆய்வு அடிப்படையில் கடன் குறித்த சான்றை அளிக்கும். சந்தை ஆய்வு, பயிற்சி, முதலீட்டில் உள்ள பிரச்சினை உள்ளிட்டவற்றை தனியே வேறு நிறுவனங்கள்தான் கவனிக்கும்.


ஆனால் இந்தியாவில் ஒரே நிறுவனம் மதிப்பீடு செய்யும், உரிய சான்றுகளையும் அளிக்கும். அதே நிறுவனம்தான் பரஸ்பர நிதி குறித்து முதலீட்டாளர்களுக்கு ஆலோசனைகளையும் அளிக்கும்.


இவை அனைத்துமே நிதி சார்ந்த விஷயம் என்றாலும் ஒன்றிலிருந்து ஒன்று ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவையாக இருக்கின்றன. இதனால் இந்த பிரச்சினையை உரியவகையில் கையாள ரிசர்வ் வங்கி விரும்புவதாக சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


ஒரு நிறுவனம் சிறந்த தரச்சான்று கிடைக்கும் என்பதற்காக மற்றொரு தரச்சான்று நிறுவனத்துக்கு மாறும் ரேடிங் ஷாப்பிங் முறைக்கு ஆர்பிஐ அனுமதி மறுத்துள்ளது.


அதேசமயம் தரச்சான்று நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியே தரச்சான்று அளிக்கும் குழுவின் தலைவராக இருப்பது மற்றும் தரச்சான்று ஆலோசகராக இருப்பதால், சில நிறுவனங்களுக்கு அவர்களுக்குள்ள நெருங்கிய நட்பு காரணமாக உயர் மதிப்பீடு அளிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ரிசர்வ் வங்கி தனது கவலையை வெளியிட்டுள்ளது.


இதைத் தடுப்பதற்காக செபி-யுடன் இணைந்து, அதில் பதிவு செய்துள்ள தரச்சான்று நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராய்வது குறித்தும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் வங்கிகள் வழங்கும் 70 சதவீத கடனுக்கான தரச்சான்று குறித்து ஆராயவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader