புனித வளனார் ஆலயம் – ஞான ஒளிவு புரம்

Get real time updates directly on you device, subscribe now.

புனித வளனார் ஆலயம்..

வளனாரிடம் வாருங்கள் வளமுடன் வாழுங்கள்

ஞான ஒளிவுபுரம்,

 

மாவட்டம் : மதுரை

மறைமாவட்டம் : மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம் : மதுரை தெற்கு

 

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித அந்தோணியார் ஆலயம், கரிமேடு.

 

பங்குத்தந்தை : அருட்பணி. S. செபாஸ்டின்

 

உதவிப்பங்குத்தந்தை : அருட்பணி. இக்னேஷியஸ் ஸ்டாலின்

 

குடும்பங்கள் : 1100

அன்பியங்கள் : 40

 

வரலாறு :

புனித வளனாரின் 22 அடி உயர திரு உருவத்தை தாங்கி, ஆரப்பாளையம் அரசடி சாலையில் நிமிர்ந்து நிற்கும் கோபுரத்தையும், எழில்மிகு சூழலையும் கொண்ட புனித வளனார் ஆலயபங்கானது, தன்னகத்தே 60 ஆண்டுகால வரலாற்றை தாங்கி நிற்கிறது.

கி.பி 1930 களில் மதுரையின் மேற்கு பகுதியில் இயங்கி வந்த ஹார்விமில் என்ற தொழிற்சாலையில் பணிசெய்த பல கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், தொழிற்சாலையின் அருகாமையில் உள்ள மேடு பள்ளமான பகுதியில் குடியேறினர். அந்த மேடு பள்ளத்தை புகைவண்டியின் கரிசாம்பலைக் கொண்டு சமப்படுத்தியமையால் அப்பகுதிக்கு கரிமேடு என்று பெயரிட்டு, அங்கு வழிபடுவதெற்கென்று புனித அந்தோனியார் சிற்றாலயத்தைக் கட்டினர்.

 

1920-1941 வரை மதுரை புனித மரியன்னை பேராலயத்தின் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. கோமஸ்SJ அவர்கள், ஹார்விமில் மேலாளராக இருந்த திரு. டோக்துரையை அணுகி அம்மக்களுக்கென சிறிய இடத்தை வாங்கினார். அப்பகுதி அவரது பெயரால் கோமஸ்பாளையம் என்று அழைக்கப்படுகிறது. இம்மக்களின் குழந்தைகளின் கல்வியறிவினை வளர்க்க R. C மில்கூலி ஆரம்பப் பள்ளியை தொடங்கினார்.

 

இந்தப் பகுதியில் வளர்ச்சியைத் திட்டமிட்ட மக்கள், தற்போதைய ஆரப்பாளையம் பங்கிற்கு உட்பட்ட பகுதிகளை வாங்கியுள்ளனர். அப்போதைய நகராட்சி ஆணையாளராகப் பணியாற்றி திரு. ஞானஒளிவு என்ற அலுவலர் 60 அடி அகலமுள்ள ஆரப்பாளையம் அரசரடி ரோட்டினை இருபுறமும் இணைப்புச்சாலைகளோடு அமைத்து இப்பகுதியினைஉருவாக்கியதால், இந்தப் பகுதி ஞானஒளிவுபுரம் என்று அழைக்கப்படுகிறது.

 

ஞான ஒளிவுபுரம் பகுதியில் கத்தோலிக்கர்களை குடியமர்த்த விரும்பிய முன்னாள் கோவை ஆயராகிய C. M. விசுவாசம் அவர்கள், விசுவாசபுரி தெருக்களை வாங்கி அங்கு மக்களை குடியமர்த்தினார்.

 

இந்த மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்காக இங்கு ஒரு ஆலயம் அமைக்க எண்ணிய பேராயர் பீட்டர் லொயோனார்டு  அவர்கள் 07.01.1956 அன்று புதிய ஆலய கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார்.  06.08.1959 அன்று தனிப்பங்காக அறிவித்தார். 09.08.1959 அன்று முதல் பங்குத் தந்தையாக அருட்பணி. T. பிரிட்டோSJ அவர்கள் பொறுப்பேற்றார்.

 

1964 ல் பொறுப்பேற்ற அருட்பணி. மோத்தா அவர்கள் லூர்து அன்னை கெபியினை கட்டி, சகாயமாதா நவநாளினை அறிமுகம் செய்தார். தினமும் மாலை திருப்பலியினையும் தொடங்கி வைத்தார்.

 

1981 இல் பொறுப்பேற்ற அருட்பணி. திவ்யானந்தம் அவர்கள் 1984 ஆம் ஆண்டு பங்கின் வெள்ளி விழாவை அனைவரும் வியக்கும் வண்ணம் கொண்டாடினார்.

 

அருட்பணி. ஜெரோம் எரோணிமூஸ் அவர்கள் 2008 ஆம் ஆண்டு பங்கின் பொன்விழாவைத் தொடங்கி வைத்தார்.

 

அவரைத் தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. லூயிஸ் அவர்கள் 2010 ஆம் ஆண்டு பொன்விழா நினைவாக மக்களின் முழு ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவியுடன் ஆலயத்தை புதுப்பித்தார்.

 

அருட்பணி. எட்வின் சகாயராஜ் அவர்கள் 2013 ஆம் ஆண்டு புதிய பீடத்தையும், 2014 ஆம் ஆண்டு புதிய கொடிமரத்தினையும், 2015 ஆம் ஆண்டு 22 அடி உயர புனித வளனாரின் திரு உருவத்தையும்,  2016 உம் ஆண்டு எழில்மிகு அன்னையின் கெபியையும், நற்கருணை சிற்றாலயத்தையும் அமைத்தார்.

 

2017 மே மாதத்தில் பொறுப்பேற்ற அருட்பணி. செபாஸ்டின் அடிகளார், புனித வளனார் பள்ளியின் விரிவாக்க கட்டிடத்தையும், பங்குத்தந்தை இல்லத்தை புதுப்பிக்கும் பணிகளைச் செய்தார். பங்கு தோற்றமாகிய (1959-2019) வைரவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. வைரவிழா நினைவாக கனவுகாணும் யோசேப்புகெபி மற்றும் புனித லூர்து அன்னை கெபி அமைக்கப்பட்டது.

 

ஒவ்வொரு புதன்கிழமையும் புனித வளனாருக்கான சிறப்பு நவநாள் நடைபெறுகிறது. மாதத்தின் முதல் புதன்கிழமை புனித வளனாரின் தேர் பவனியும் நடைபெறுகிறது. மாதத்தின் முதல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கல்வாரி கெபியிலும் மாதா கெபியிலும் திருப்பலிகள் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் திருவிழா ஏப்ரல் முதல் 22 ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மே 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 30 ஆம் தேதியன்று புனித வளனாரின் திருவுருவம் தாங்கிய தேர்பவனி நடைபெறும்.

 

கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு மற்றும் புனித வாரநாட்களில் புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் திருப்பலிகள் நடைபெறுகிறது. இத்திருப்பலியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்கின்றனர்.

 

நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் ஆலயம் வந்து திருமணவரம், வேலைவாய்ப்பு, குழந்தைவரம் வேண்டி பெற்றுக் கொள்கின்றனர். பங்கின் வளர்ச்சியிலும், சமூகத்தின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு பங்குத்தந்தையோடு இணைந்து செயல்படும் விதமாக 15க்கும் மேற்பட்ட இயக்கங்கள், பக்தசபை அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பங்கிலிருந்து ஏழை மக்களுக்கென்று புனித வளனார் கல்வி உதவித்திட்டம் மற்றும் திருமண உதவித்திட்டம் வழியாக உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. பங்கில் திருமண தகவல் மையம் ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader