IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கேம் விளையாடுவதற்கு தடை சொன்னதால் கல்லூரி மாணவி தற்கொலை

126


பாடம் படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த மாணவியை தாய் கண்டித்ததால், மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. இவர் அருகில் உள்ள பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் வித்யாஸ்ரீ(18). இவர் திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2ம் ஆண்டு படித்து வந்தார். வித்யாஸ்ரீ நேற்று காலை தனது செல்போனில் யாருடனோ சேர்ந்து பப்ஜி கேம்ஸ் விளையாடியதாக கூறப்படுகிறது.

இதனைப்பார்த்த அவரது தாய், காலையில் எழுந்தவுடன் படிக்காமல் இப்படி செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறாயா..? என்று மகளை திட்டிவிட்டு கடைக்கு சென்று விட்டார். செல்போனில் விளையாடியதை தனது தாய் திட்டியதால் மனமுடைந்த வித்யாஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவருடைய தாய், வெகுநேரமாக கதவை தட்டியும் வித்யாஸ்ரீ கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, தனது மகள் வித்யாஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்கிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது மகள் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுத அவரது தாயை பார்க்கும் பொழுது பரிதாபமாக இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் போலீசார் தூக்கில் தொங்கிய மாணவி வித்யாஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் தற்கொலை செய்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.