IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

“பிளாஸ்டிக்” தடை சாத்தியமா?

Get real time updates directly on you device, subscribe now.

இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் அங்காடிகளுக்கு சென்றாலும், கிராமப்புறத்தில் சந்தைகளுக்கு சென்றாலும் சரி துணிப்பைகளும், மூங்கில் கூடைகளும் எடுத்துச் சென்ற காலம் போய் இப்போது “கைவீசம்மா கைவீசு கடைக்கு போகலாம் கைவீசு பாலிதீன் கவரில் வாங்கி வரலாம்” என்ற மக்கள் மன நிலைமை ஆகிவிட்டது! காரணம் நவநாகரிகம் என்ற மாயை. மஞ்சள்பை வைத்திருப்பவர்களை கிராமத்தார் என முத்திரை குத்தியதின் விளைவு இந்த பிளாஸ்டிக் வளர்ச்சி அசுரனாகிவிட்டது. ஒரு பொருள் கண்டுபிடிக்கும் போதே அதன் எதிர்கால ஆபத்தை உலக நாடுகள் உணர்ந்திருந்தால் முளையிலே கிள்ளியிருக்கலாம். இப்போது மரத்தையே வெட்டவேண்டியுள்ளது. பிளாஸ்டிக் கிரேக்க மொழியில் பிளாஸ்டிக்கோஸ் என்பதாகும். இது பெட்ரோலியம் வகையை சார்ந்தது. கடலில் கடல் தீவுகளை பார்த்திருப்போம். ஆனால் இப்போது கடலில் பிளாஸ்டிக் கழிவு தீவுகளை பார்க்க முடிகிறது. தொண்ணூறு சதவீதம் கடலை ஆக்கிரமித்திருப்பது பிளாஸ்டிக் கழிவுகளே. இப்படியே போனால் மனிதனுக்கு நாற்பது சதவீதம் ஆக்சிஜனை கொடுக்கும் கடலே காணாமல் போய்விடும். பிளாஸ்டிக் தடை சாத்தியமா! என்ற நவீன மூடநம்பிக்கை தோன்றலாம், அதற்காக அப்படியே விடலாமா வருங்கால மண்ணும் மனித சமூகமும் என்னாவது? ஒரு தடவை பிளாஸ்டிக் பையை மண்ணிற்குள் போட்டால் அது நூறாண்டு பாவத்திற்கு சமம்.

 

ஆம்! அது மக்குவதற்கு நூறாண்டுகள் ஆகும். இந்த கேரிபேக்குகள் மண்ணிற்கு சென்றால் விவசாயம் பாதிக்கிறது. அதுமட்டுமா? நிலத்தடி நீர் பாதிக்கிறது. சரி எரிக்கலாம் என எரித்தால் அதனால் தோன்றும் வாயுக்கள் காற்றை பாதித்து காற்றால் வானமும் சுவாசித்து பருவமழைக்கும் பாதிப்பு. இந்த ஐம்பூதங்களின் அபாய குரல் ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில் நாம் பிளாஸ்டிக் தடைக்கு ஆதரவு குரல் கொடுத்தாக வேண்டும். தமிழகத்தில் மட்டும் இருபத்து மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த எண்ணிக்கை பிரமிப்பாக உள்ளது. இவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து மாற்று பொருட்களை தயாரிக்க முன்வர வேண்டும். வணிகநோக்கத்துடன் இல்லாமல் மனித நேயத்துடன் வணிகம் செய்வதே கட்டாய கடமை. நம் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை சில ஆண்டுகளாகவே நடைமுறையில் இருந்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. இதையே முன்னுதாரணமாக வைத்து மக்கள் செயல் புரட்சி ஏற்படுத்த வேண்டும். இதற்கு அரசு மற்றும் அதிகாரிகளே முயன்றால் போதாது, மக்களும் இயக்கமாக மாற வேண்டும். மனிதன் இயற்கையை மறந்தான் நிம்மதியை தொலைத்தான் சுமார் இருபது வருடங்களுக்கு முன்புகூட உணவகங்களிலும், விழாக்களிலும் வாழை இலைகளில் தான் உணவு பரிமாறப்பட்டன. ஆனால் இன்று தட்டுகளின் மீது பாலிதீன் கவர்களில் சூடாக பரிமாறப்படுகின்றன. இதைவிட கொடுமை என்னவென்றால் சென்னை போன்ற பெரு நகரங்களில் தங்கும் விடுதிகள் உணவகங்களில் நம் பாரம்பரிய இட்லி சமைப்பதற்கு துணிக்கு பதிலாக பாலிதீன் கவரில் சமைப்பதுதான் வேதனை. ஒவ்வொரு முறையும் பிளாஸ்டிக் குவலையில் சூடான பாணத்தை அருந்தும்போதும் அது பல சிகரெட்டுகள் புகைத்ததற்கு சமம் என்பதை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. எங்கும் எப்போதும் ரெடிமேடாக பிளாஸ்டிக்கை பழகிய நாம் அடுத்து என்ன செய்வது என திகைக்க தேவையில்லை. அந்த மாற்று தான் பயோ பிளாஸ்டிக் இது மரவள்ளி, மக்காச்சோளம், சோயா இவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இவைகள் நீரிலும், நிலத்திலும் கரையக்கூடியது. அது மட்டுமல்ல இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மக்கும் தன்மை கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுமட்டும் மாற்றல்ல. துணிப்பைகள், பாக்குமட்டை, சணல் போன்ற பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் அவசர விழிப்புணர்வு தேவை. “குடி குடியை கெடுக்கும், பிளாஸ்டிக் பூமியை கெடுக்கும்” மக்கள் மனசு வைக்காமல் எதுவும் சாத்தியமாகாது. சட்டத்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியாது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புணர்வு இருந்தால்தான் இந்த பிளாஸ்டிக் தடை வெற்றிபெறும். ஏற்கனவே 2002-ம் ஆண்டு தமிழகத்தில் முன்னோடி திட்டமாக பிளாஸ்டிக் தடை கொண்டுவரப்பட்டது. ஆனால் ஏதோ சில காரணங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. தற்போது முழுமையாக முடியாவிட்டாலும் மறுசுழற்சி முறையும் சிறிதுகாலம் அமல்படுத்தலாம். பயன்பாட்டை குறைப்பதற்கு தயாராக வேண்டும் தண்ணீரை விலைக்கு வாங்கியது போய் தற்போது சில பெருநகரங்களில் காற்றும் வாங்கப்படுகிறது. நிலைமை இப்படியே போனால் சூரிய ஒளியையும் விலைக்கு வாங்கவேண்டி வரலாம். இனியும் பிளாஸ்டிக்கை நாம் பயன்படுத்தினால் “பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கொலைகாரர்களே” இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்பதை மறந்தால் இயற்கை பொங்கியெழும்!.
Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader