IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காலம் மாறிடுச்சி; களவு பயமும் போயிடுச்சி!அத்திவரதருக்கென தனி சன்னதி அமைக்கலாமே? – மு.ஆதவன்

4


அந்த காலத்தில் களவு பயம் இருந்தது. அத்திவரதரை மறைத்து வைத்தார்கள். இன்று காலம் மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்ப மக்களின் வசதிக்காக மாற்றங்கள் கொண்டு வருவதில் தவறில்லை. காஞ்சிபுரத்தில் அத்திவரதருக்கென தனி சன்னதி அமைத்தால் பக்தர்கள் பயனடைவார்கள். அரசுக்கும் நன்மை கிடைக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் மு.ஆதவன் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக மு.ஆதவன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:


கி.பி., 1306 ஆம் ஆண்டு. மாலிக் கபூர் என்னும் படைத்தளபதி தலைமையிலான படையினர் தென்னிந்தியாவில் உள்ள கோயில்களை எல்லாம் சூறையாடி, கொள்ளையடித்தபடி வந்தனர். தேவகிரி, தற்போதைய ஆந்திரா, தெலங்கானா, ஹொய்சாள மன்னர்களின் தலைநகரம் துவாரசமுத்திரத்தில் இருந்த கோட்டைகளை கொள்ளையடித்த அவர்களின் அடுத்த குறி பாண்டியர்களின் கலைப் பொக்கிஷமான மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயம்.


1311ல் மதுரை வந்தது அப்படை. அவர்களை எதிர்க்கும் வலு இல்லாததும், திடீர் படையைச் சமாளிக்க போதிய அவகாசமும் இல்லாத கையறு நிலை. மதுரை ஆலயத்தின் தொன்மையான சுவாமி சிலையையாவது காப்பாற்ற துடித்தனர் கோயில் சிவாச்சாரியார்கள்.

சரி என்ன செய்வது..? சொக்கநாதர் கர்ப்பகிரகத்தை பாதியாக மறைத்து, கல்லால் ஆன திரையை எழுப்பினர். ஓர் தீபத்தை மட்டும் அங்கு ஏற்றிவிட்டு, கல்திரைக்கு முன் தற்காலிகமாக ஓர் லிங்கம் வைத்து, வெளியேறி விட்டனர்.


கோயிலுக்கு வந்த அந்நியர்கள், பல சிலைகளையும் சேதப்படுத்தினர். கர்ப்பகிரகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையையும் முடிந்த மட்டும் சேதப்படுத்திச் சென்றனர்.


48 ஆண்டுகள் கழித்து, விஜய நகரப் பேரரசு காலத்தில், அந்நியர்கள் விரட்டப்பட்டு, கோயில்களை பழையபடி வழிபாட்டிற்குக் கொண்டு வந்தனர். அதன்பின்னர் கல் திரை நீக்கப்பட்டு பழையபடி வழிபாடு தொடங்கியது.


தற்காலிகமாக வைக்கப்பட்ட அந்தச் சிலை, இப்போதும் கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் எல்லம் வல்ல சித்தர் சன்னதி அருகில் வைக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன வரலாறும் அங்கே பொறிக்கப்பட்டுள்ளது.


சிவன், பெருமாள் ஆலயங்கள் என பாரபட்சமின்றி அனைத்துக் கோயில்களும் பாதிப்பிற்கு ஆளாகின. அது, கோயில் வழிபாட்டில் இருண்ட காலம் என்றே சொல்லலாம்.


14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்த அந்நியப் படையினர், ஶ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் ஆலயத்தைச் சிதைக்க வந்தனர். அதை அறிந்த பிள்ளை லோகாச்சாரியர், சிஷ்யர்களுடன் உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு தென்திசைக்குக் கிளம்பி விட்டார். அவ்வாறு வந்தவர், மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே, கொடிக்குளம் என்னும் கிராமத்தில் மலைக் குன்றுகளுக்கு நடுவே ஒளிந்து கொண்டார். அந்நியப்படை அந்த இடத்தை நெருங்கியபோது, சுவாமியைக் காக்க குன்றின் உச்சியில் ஏறி மறைந்து கொண்டார்.


சில நாட்களுக்குப் பின்னர் அங்கிருந்து இறங்கியபோது, தவறி விழுந்து அரங்கனை மார்பில் தாங்கியபடியே உயிர் விட்டார். அவரது சீடர்கள் சுவாமியைச் சுமந்தபடி, பல தலங்களுக்கும் சென்று பல காலம் கழித்து, ஶ்ரீரங்கம் திரும்பினர். கொடிக்குளத்தில் உள்ள வேதநாராயணப் பெருமாள், பிள்ளை லோகாச்சாரியார் சன்னதிகள் இன்றும் அந்த வரலாற்றுக்குச் சான்றாக உள்ளன.


மேலக்கோட்டை திருநாராயணபுரம் செல்வப்பிள்ளை உட்பட பல சுவாமி விக்கிரகங்கள் இதேபோல், கோயிலுக்குத் திரும்பி வழிபாட்டிற்கு வந்துள்ளன.


தவிர்க்க முடியாத, அசாதாரணமான காலகட்டங்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டும், கோயிலை விட்டு வெளியே பாதுகாப்பிற்காக கொண்டு செல்லப்பட்டு, பின் வழிபாடுகள் தொடரப்பட்டதுமான வரலாறுகள் பல உள்ளன. இப்போதும் திருடு போய் மீட்கப்பட்ட சிலைகள், வழிபடப் படுகின்றன.


சுவாமி வழிபாட்டில் இடையூறுகள் உண்டாவதும், தற்காலிகமாக அந்த வழிபாடு நிறுத்தப்பட்டு, சாதகமான காலம் வந்தபின்னர் மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டதும் வழக்கத்தில் இருந்துள்ளன.


“காஞ்சிபுரம் அத்தி வரதர் வழிபாட்டில் நிகழ்ந்ததும் இத்தகையதொரு நிகழ்வே. மற்றபடி, அதற்கு ஐதீகங்கள் ஏதுமில்லை. கி.பி. 1017, 1063 மற்றும்1310 ஆம் ஆண்டுகளில் அந்நியர்களால் வரதராஜர் கோயில் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது.


இந்தக் காலகட்டங்களில் அத்தி வரதர் சிலை பாதுகாப்பு கருதி, நீருக்கடியில் வைக்கப்பட்டது. பின்னர், குளத்தின் நடுவிலேயே சன்னிதி எழுப்பி வழிபாடுகள் நடந்துள்ளது. கோயிலில் முதல் பூஜை இவருக்குத்தான் நடத்துள்ளது என்பதையும்” கோயில் வரலாறு கூறுகிறது.


தலபுராணப்படி, அத்திவரதர் உஷ்ணம் குறைக்க குளத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே தலபுராணத்தில், உஷ்ணம் தணிக்க, தினசரி திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்பட்ட தகவலும் அதே தலபுராணத்தில்தான் உள்ளது.


“ஓர் ஆசிரமத்தில் யாகம் நடத்தும் போதெல்லாம், சில பூனைகளை ஓர் கூண்டுக்குள் அடைத்து வைத்து யாகத்தைத் தொடர்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பல்லாண்டுகளாக தொடர்ந்த அந்த வழக்கத்திற்கான காரணம் தெரியவில்லை.


விஷயம் இதுதான்… தொடக்க காலங்களில் யாகம் நடத்தும் போதும், ஆசிரமத்தில் இருந்த பூனைகள் அங்குமிங்கும் ஓடி, யாகசாலை பொருட்களை சேதப்படுத்தின. அதைக் கட்டுப்படுத்த குரு, யாகம் நடத்தும் போதெல்லாம் பூனைகளை அடைத்து வைத்துள்ளார். சீடர்களிடம் காரணத்தைச் சொல்லவுமில்லை. அவர்களும் கேட்கவுமில்லை.


இந்த வழக்கம் அப்படியே தொடர்ந்து, ஆசிரமத்தில் பூனைகள் இல்லாத போதும், வெளியில் இருந்து தேடிப்பிடித்து வந்தாவது அதனை அடைத்து வைத்து யாகத்தைத் தொடர்ந்தனராம். இந்தக் கதை உணர்த்துவது, எதையும் ஆராய்ந்து செய்ய வேண்டும், காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.


அத்தி வரதர் நீருக்குள் மறைத்து வைக்கப்பட்டது, அந்நியர்களிடம் இருந்து அதனைக் காக்க வேண்டும் என்ற நோக்கம்தானே தவிர, வேறு வலுவான காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை, ”காஞ்சி பேசுகிறது” இதழில், அத்திகிரி வரதர் வரலாற்று நூலில், 1978ல் புலவர் பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.


1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருக்கச்சி நம்பி, ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றில் ,அத்தி வரதர் நீருக்குள் இருந்த குறிப்புகள் ஏதும் இல்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.


காலங்காலமாக தொடர்ந்து வரும் பழக்கமென்றாலும், அன்றைக்கும் இன்றைக்கும் நிலைமை தலைகீழ். பாதுகாக்க முடியாத நிலை இன்றில்லை. காலங்காலமாக இருந்த வழக்கம் என்பதைத் தாண்டி, ஆகமம், ஐதீகம் என்று எந்த வலுவான காரணமும் இல்லை. அது, சிலையைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட ஓர் மரபு மட்டுமே.


இரவில், திருடர்களிடமிருந்து காக்க கதவுகளை அடைத்துவிட்டு, சாவியை பத்திரப்படுத்தி வைப்பது போன்ற நடைமுறைதான் இது. கதவைப் பூட்டுவது தினசரி நிகழ்வு, நீருக்குள் வைப்பது, நிலவறைக்குள் மறைத்து வைப்பது அசாதாரண சூழல்களில் நடக்கும் நிகழ்வு.


40 ஆண்டுகளுக்கு முன்னர் இன்று போல சமுக வலை தளங்களின் வளர்ச்சி இல்லை. அப்போது, மதுரையிலோ, கன்னியாகுமரியிலோ வசித்தோருக்கு சென்னையும், திருப்பதியுமே வெகு தொலைவுதான். திருப்பதிக்குப் போய் வந்தாலே, பெரிய சாதனை.


இன்றைக்கு நிலைமை வேறு. இமயமலை, பத்ரிநாத், கேதார்நாத் புண்ணிய தலங்களுக்கு நினைத்த நேரத்தில் செல்லலாம். வெளிநாடுகளுக்குச் சென்று வருவதும் விஷயமே அல்ல.


இன்றைய யதார்த்தம் இப்படியிருக்கையில், அத்தி வரதரை காலத்திற்கு ஏற்றார்போல மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப வைப்பதில் தவறில்லை. காலத்திற்கு ஏற்ப மாற்றிகொள்வதில் தயக்கமிருப்பின், 48 நாட்கள் நடைமுறையையாவது மாற்றலாம்.


தரிசன நாட்களை அதிகப்படுத்துதல், 40 ஆண்டுகள் என்ற வரையறையை 5 அல்லது 10 ஆண்டுகள் என மாற்றுதல் போன்ற மாற்றங்களையாவது கொண்டு வரலாம்.


அரசின் வருமானம் என்ற வகையில் பார்த்தாலும், 108 திவ்ய தேசங்களில், 18 தலங்களை ஒரே ஊரில் கொண்ட காஞ்சிபுரத்தின் வருமானம் சொற்பமே. பக்தர்களின் காணிக்கைகளை கணக்கில் கொண்டாலும், கோயிலுக்கும் வருமானம். அது, இன்னும் பல கோயில்களின் திருப்பணிக்கும், மற்ற செலவுகளுக்கும் நிச்சயம் உதவும். ஆன்மிகத்தையும் வளர்க்கும்.


அத்தி வரதருக்கென தனிச்சன்னதி வைக்கலாம். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திருப்பதி கோயிலைப் போன்றே மக்கள் பெருவெள்ளத்தைச் சந்தித்துள்ளது காஞ்சிபுரம். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநில மக்களெல்லாம் வந்து தரிசித்துச் செல்வது, அதன் சாந்தியத்தையும், புகழையும் என்றைக்கும் குறைக்காது.


40 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியொன்று இருந்ததே தெரியாது, இப்போதுதான் தெரிகிறது எனச் சொல்லும் 60, 70 வயது தாண்டிய முதியவர்களும் இங்கே அதிகம். கோயிலுக்கு வரும் கூட்டத்தில் சென்று திரும்ப முடியாதது, தங்கள் வாழ்நாளில் கிடைக்காத பாக்கியம், புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று பக்தர்கள் மனக்குறை அடைவதையும் தவிர்க்கலாம்.


கிருஷ்ண பிரேமி சுவாமிகள், மைலம்பாடி சுதர்சன மடம் ஜீயர் ஶ்ரீநம்பி ராமானுஜர் உட்பட ஆன்மீகவாதிகள், பல்வேறு அமைப்பினர் பழைய நடைமுறையை மாற்ற பரிந்துரையும், கோரிக்கையும் வைப்பதும் இத்தகைய காரணங்களால்தான்.


2019 ஜுலை 1ம் தேதி முதல் நேற்றுவரை மட்டும் காஞ்சிபுரம் அத்திவரதரை சுமார் 1 கோடி பேருக்குமேல் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து சென்றதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அத்திவரதருக்கென தனி கோவில் அமைத்தால் பக்தர்கள் வரும் முழுவதும் தரிசித்து செல்லலாம். இப்படி எந்த வகையில் பார்த்தாலும், மக்களுக்கும், அரசுக்கும் நன்மையே.