IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்தியா ஒரு நாடு அல்ல… இந்தி ஒரு மொழி அல்ல! ராஜ்யசபாவில் கர்ஜித்த அண்ணா

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியா ஒரே நாடும் அல்ல… இந்தியா பொதுமொழியும் அல்ல என்று ராஜ்யசபாவில் சண்டமாருதமாய் முழங்கிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று. இன்றைக்கும் அண்ணாவின் பேச்சு எத்தனை பொருத்தமாக அமைந்திருக்கிறது.

தமிழக முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று. தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் தளபதியாக ஆதிக்க எதிர்ப்பு களங்களில் களமாடியவர்.

தனிக்கட்சியாக திமுகவை தொடங்கிய போதும் தலைவர் பதவி, அய்யா பெரியாருக்குத்தான் என வாழ்ந்த கொள்கையாளர். பெரியாருடன் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் திமுகவின் முதலாவது அரசாங்கத்தை தந்தை பெரியாருக்கு சமர்பித்த சாமானியர்களின் திருமகன்.

திராவிட நிலப்பரப்பை தனி தேசமாக்க வேண்டும் என்கிற கோட்பாடுடன் திமுகவை தொடங்கினார்.. காலச்சூழலுக்கு ஏற்ப பிரிவினை கோரிக்கையை கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் உயிரோடு இருக்கின்றன எச்சரிக்கையை ஆதிக்கவாதிகளுக்கு அன்றே சொன்னவர் அண்ணா. இந்திதான் இந்தியாவை ஒருங்கிணைக்கிறது என்கிற அமித்ஷாக்களுக்கு அன்றே 1963-ம் ஆண்டு ராஜ்யசபாவில் அண்ணா தந்த பதில் இது:

இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து உணர்ச்சிப்பூர்வமாக தெரிவிக்கப்படும் எதிர்ப்பை இந்த மசோதா கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. இந்த எதிர்ப்பு இந்தியாவின் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது.

“இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழி வேண்டும் என்று பலரும் பல விதங்களில் வாதாடினர். அது ஏற்கப்பட்டால் இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் ஒன்றைத்தான் பொதுமொழியாக ஏற்க வேண்டும். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா ‘ஒற்றை நாடு’ என்று ஏற்றுக்கொள்வோமானால், இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், இந்தியா ‘கூட்டாட்சி நாடு’ இந்தியச் சமூகம் பன்மைத்துவம் கொண்டது. ஆகையால் ஒரே ஒரு மொழியைப் பொதுமொழியாக ஏற்பது ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதி இழைப்பது போன்றதாகிவிடும். அது மட்டுமல்ல சமூகத்தின் பெரும் பகுதி மக்களால் அம்மொழியைப் படிக்க முடியாமல் குறைகள் ஏற்படும். இந்தியா ஒரே நாடல்ல. இந்தியா பல்வேறு இனக் குழுக்களையும் மொழிக் குடும்பங்களையும் கொண்ட நாடு.

இதனாலேயே இந்தியாவை ‘துணை கண்டம்’ என்று அழைக்கிறோம். இதனால்தான், ஒரே மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக நம்மால் ஏற்க முடியவில்லை. தேசிய கீதமான ‘ஜனகண மன’ பாடலும், தேசத் தாய் வாழ்த்தாக பாடப்படும் ‘வந்தே மாதரம்’ பாடலும் இந்தியில் இயற்றப்பட்டவை அல்ல.

இந்தி மொழி முன்னேறிவிட்டது என்று உள்துறை அமைச்சர் எவ்வளவுதான் பேசினாலும் இந்தியின் நிலை இதுதான். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான மொழி என்னுடையதாக இருக்கும் போது, அதை பொது மொழியாக என்னால் ஏற்கச் செய்ய முடியாத நிலையில், “நன்றாக முன்னேறிவிட்டது; இந்தியைப் பொது மொழியாக வைத்துக்கொள்ளலாம்” என்று உள்துறை அமைச்சர் பேசுவதால் எனக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்வது எப்படி?

இந்தியாவில் 100க்கு 40 பேர் இந்தி பேசுவதால், இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என அவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் 40 சதவீதம் அல்ல; 20 சதவீதம் பேர் இந்தி பேசுபவர்களாக இருந்து, அந்த 20 சதவீத மக்களும் இந்தியா முழுவதும் பரவலாக இருந்தால், இந்தியைப் பொதுமொழியாகவோ அல்லது ஆட்சி மொழியாகவோ கொண்டு வருவதில் ஓரளவு அர்த்தமிருக்க முடியும். ஆனால், ஒரு வாதத்திற்கு இவர்கள் கூறும் 40 சதவீத கணக்கை எடுத்துக் கொண்டால் கூட, இந்த எண்ணிக்கை உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் அடங்கிவிடுகிறது.

உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழி என்னுடைய தாய் மொழி என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது. எங்கள் உயிருடன், வாழ்வுடன் கலந்த மொழி தமிழ் மொழி, அந்த தமிழ் மொழி மற்றெதற்கும் தாழாத வகையில் ஆட்சி மொழி என்ற தகுதி தரப்படும்வரை நான் அமைதி பெறமாட்டேன், திருப்தி அடைய மாட்டேன். நான் தமிழுக்காக வாதாடுகிறேன். அதற்காக இந்திக்காக வாதாடுபவர்களின் தாய்மொழிப் பற்றை நான் மறுக்கவில்லை. அவர்கள் இந்திக்காகப் பாடுபடட்டும்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader