IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தமிழர்கள் கொண்டாடும் தமிழ்நாடு தினம் – உருவான வரலாற்று உண்மை

95

1956 நவம்பர் 1ம் தேதி ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டன. எஞ்சியுள்ள தமிழ் மாநிலத்துடன் அதே நாளில் கன்னியாகுமரி முனை மீட்கப்பட்டு தாய்த் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. சேர, சோழ, பாண்டிய மண்டலங்களை ஒன்றாக்கி, ஒருமைப்பட்ட தமிழ் மாநிலம் கண்ட நவம்பர் 1ம் தேதி தமிழகம் உருவான நாளாக அறிவிக்கப்பட்டது.

மற்ற மாநில அரசுகள் அரசு விழாவாகக் கொண்டாடிய இந்த நாளை தமிழக அரசோ, மற்ற தமிழ் இயக்கங்களோ கண்டு கொள்ளாமல் விட்டது வேதனைக்குரியது. இந்த நாளை தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்கள் ராஜ உத்சவ திருவிழாக கொண்டாடி மகிழ்கின்றனர். கர்நாடகாவில் ஒரு மாதம் வரை கொண்டாடுகின்றனர் . இந்த நாளில் கன்னட கொடி ஏற்றி , கன்னட தாய்க்கு மரியாதை செலுத்தி கன்னட தேசிய எழுச்சி திருநாளாக கொண்டாடுகின்றனர் கன்னடர்கள். அதே போல் தெலுங்கர்களும் கொண்டாடுகின்றனர்.

தமிழர்கள் அனைவரும் ஒரே ஆட்சியின் கீழ், தமிழ்நாடு என்ற அரசின் கீழ் , தமிழ்நாடு என்ற நிலப்பரப்பின் கீழ், தமிழ்நாடு என்ற அடையாளத்தின் கீழ் வந்த தினம் நவம்பர் 1 ஆம் நாள் தான் . அதுவரை தமிழர்கள் தமிழ்நாடு என்ற ஒரு நாட்டின் கீழ் எப்போதும் வாழ்ந்ததில்லை. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தினம் அல்லவா! தமிழர்கள் அனைவரும் இந்திய சுதந்திர தினத்தை விட அதிமாக நாம் போற்ற வேண்டிய தினம் அல்லவா ?

நம்முடைய தமிழர் நாட்டை பேணிப் பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தில் எல்லையை, இயற்கை வளங்களை, பண்பாட்டை , மொழியை, உரிமைகளை பாதுக்காக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது. அதை நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூற நமக்கான ஒரு நாள் வேண்டும்.

அந்த வகையில் தமிழர்கள் அனைவரும் தமிழர் கொடியேற்றி கொண்டாடும் விதமாகவும், தமிழ்நாட்டின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் தமிழக அரசு நவம்பர் 1 ஆம் நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அதை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் . அன்று தமிழகம் முழுவதும் தமிழர் வரலாறு , பண்பாடு குறித்த கண்காட்சி இடம்பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தினர்.

தமிழ்மொழி பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், பல தமிழ் அமைப்புகளும், தமிழக தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் தமிழ் மாநிலம் உருவான நவம்பர் 1-ந் தேதியை அரசே விழா எடுத்துக்கொண்டாட வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததோடு, அந்த கொண்டாட்டங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்.

தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் தனியாக உருவாகுவதற்கு ஒரு நீண்ட நெடிய போராட்டமும், சில உயிரிழப்புகளும் தியாகங்களும் தேவைப்பட்டன என்பதே வரலாறு நமக்கு எடுத்துரைக்கும் பாடமாகும். இந்திய சுதந்திரத்திற்காக நாம் ஒன்றுபட்டு போராடினோம். அப்படி ஒன்றுபட்ட நாம் மொழிவாரியாக நம்மை ஏன் பிரித்துக் கொள்ளவேண்டும். மொழி உணர்வும், பிராந்திய உணர்வும் நம் ஒற்றுமையை குலைத்துவிடக்கூடாது. ஆகவே, இந்தியாவை நிர்வாக வசதி கருதி பிரித்து, அனைத்து பிரிவினரும் சமஉரிமை பெறும் வகையில் மாநிலங்களை உருவாக்கலாம்” என்றார் ஜவகர்லால் நேரு.

1938ல் சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தந்தை பெரியார், மறைமலை அடிகள், சோமசுந்தர பாதிரியார் ஆகியோர் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற முழக்கத்தை எழுப்பினர். அது காலகட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தமிழ் மாநிலம் வேண்டும் என்று மாநாடுகள் நடத்தி வலியுறுத்தி வந்தார்.

ஆந்திரா உருவானதையடுத்து தமிழ்நாடு கோரிக்கையோடு சென்னையை காப்பாற்ற வேண்டிய அவசரகால அவசியமும் உண்டானது. “தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” என்ற முழக்கத்தை ம.பொ.சி. பிரபலப்படுத்தினார். ராஜாஜியோ, “சென்னையை ஆந்திராவிற்கு தந்துவிட்டால், அதற்கு ஒத்துழைப்பு தரும் சக்தி எனக்கில்லை. நான் ராஜினாமா செய்துவிடுவேன். நீங்கள் வேறு முதல்வரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று நேருவிடம் கூறிவிட்டார். இதையடுத்து “சென்னையை ஆந்திராவிற்கு தரப்போவதில்லை” என நேரு பகிரங்கமாக அறிவித்தார்.

மொழிவாரி மாநில போராட்டத்தில் தெலுங்கு மக்கள் ‘விசால ஆந்திரா’ என்றும், கன்னட மக்கள் ‘அகண்ட கர்நாடகம்’ என்றும், மலையாளிகள் ‘ஐக்கிய கேரளா’ என்றும், மராட்டிய மக்கள் ‘சம்யுக்த மகாராஷ்டிரம்’ என்றும், குஜராத்தியினர் ‘மகா குஜராத்’ என்றும் கேட்டுப் போராடினர். மொழிவாரி மாநில அறிவிப்பு 1956 நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவானது.

தமிழ்நாட்டிற்கு ‘மதராஸ்’ என்ற பெயர் மாற்றமின்றி தொடரும் என்றானது. ஆனால், தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையும், போராட்டங்களும் தொடர்ந்து தமிழகத்தில் நடந்தது. தமிழ்நாடு பெயர் கோரிக்கைக்காக விருதுநகரில் சங்கரலிங்கம் என்ற 76 வயது தமிழ் போராளி 78 நாட்கள் தொடர்ந்து மனஉறுதியுடன் உண்ணாவிரதமிருந்து தன் இன்னுயிரை நீத்தார். அவரது தியாகம் வீண்போகவில்லை. அறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக பதவியேற்று 1967-ம் ஆண்டு ஜூலை 18-ல் மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்.

தமிழ்பேசும் மக்களுக்கான தமிழகம் உருவானாலும் தமிழக எல்லைப் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைப்பதில் சில பிரச்சனைகள் எழுந்தன. திருவாங்கூர் ராஜ்ஜியத்தின் அங்கமாகவிருந்த கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று மார்ஷல் நேசமணி தலைமையில் தெற்கு எல்லை போராட்டம் வெகு உக்கிரமாக நடைபெற்றது. அவருடன் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, தாணுலிங்க நாடார், காந்திராமன், குஞ்சன் நாடார், நத்தானியேல் போன்றோரும் களத்தில் இறங்கி போராடினர். இந்த போராட்டத்தில் 11 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிற்கு செல்லாமல் தடுக்கப்பட்டது.

இந்நிலையில் எல்லைப் பிரிப்பதில் மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க படாஸ்கர் எல்லை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆணையத்தினால் தமிழகத்திற்கு சேரவேண்டிய திருப்பதி, சித்தூர், நெல்லூர் மாவட்டங்களை ஆந்திராவிற்கு உறுதிபடுத்தியது. மற்றும் பீர்மேடு, நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு ஆகிய பகுதிகளை கேரளாவிற்கு தாரை வார்த்தது. ஓசூரின் சில பகுதிகள், கொள்ளேகால், கோலார் தங்கவயல் ஆகியவை கர்நாடகத்திற்கு உறுதிபடுத்தியது.

தமிழகத்திலிருந்து இந்த பகுதிகள் அண்டை மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டதால் , இதுதொடர்பாக அதிருப்திகளும் பிரச்சனைகளும் எல்லைப்பகுதிகளில் அவ்வப்போது அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இருப்பினும் தமிழ் மாநிலம் உருவான நாள் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக தமிழக அரசு கொண்டாட அறவிக்கப்பட்டிருப்பது வரவேற்க கூடிய செயலாகும்.
#தமிழ்நாடுநாள் #TamilNaduDay #தமிழ்நாடு64