IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அவசியமாகும் அறிவுசார் சொத்துரிமை மற்றும் அதன் பயன்பாடுகள்

Get real time updates directly on you device, subscribe now.

திருப்பதி தேவஸ்தானம், சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கள் பெயரில் திருப்பதி லட்டுவை விற்பதாக வழக்குத் தொடர்ந்துள்ளது. திருப்பதி லட்டுவை யாரும் போலியாகத் தயாரித்து விற்காமல் இருக்க வணிகக் குறியீட்டுக்காகவும், புவிசார் குறியீட்டுக்காகவும் விண்ணப் பித்துள்ளது.

லட்டுவையெல்லாம் வணிகக் குறியீட்டுக்காகப் பதிவு செய்ய வேண்டுமா என்று நீங்கள் நினைக்கலாம். தனித்தன்மை கொண்ட அத்தனை விஷயங்களுக்கும் காப்புரிமை பெறவேண்டிய அவசியம் வந்துவிட்டது. வணிகக் குறியீடு மற்றும் புவிசார் குறியீடு என்றால் என்ன? இதனால் என்னென்ன நன்மை கிடைக்கும்; ஏன் இவை அவசியம் என்கிற கேள்விகளுக்கு சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் கேட்டோம். விளக்கமான பதிலைச் சொன்னார்கள் அவர்கள்.

”அறிவுசார் சொத்துரிமையில் காப்புரிமை (Patent), வடிவமைப்பு (Design), வணிகக் குறியீடு(Trademark) மற்றும் புவிசார் குறியீடு (Geographical Identification) எனப் பல துறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு தனிநபர் அல்லது ஒரு குழுவின் அறிவுசார்ந்த கண்டுபிடிப்புகளையோ அல்லது ஒருபகுதியில் மட்டும் சிறப்பாக இருக்கும் ஒரு விஷயத்தையோ பதிவு செய்ய உதவுகிறவை. ஒரு கண்டுபிடிப்பை அதைக் கண்டுபிடித்தவரே உரிமை கொண்டாடவும், அதை யாரும் போலியாகத் தயாரிக்காமல் இருக்கவும் காப்புரிமை பதிவு உதவுகிறது.

காப்புரிமை, வடிவமைப்பு, வணிகக் குறியீடு மற்றும் புவிசார் குறியீடு ஆகியவை அறிவுசார் சொத்துரிமையின் கீழ் வந்தாலும் அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. இவற்றைத் தனித் தனியாகப் பார்ப்போம்.

முதலாவதாக, காப்புரிமை என்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் உரிமை சான்று ஆகும். இதற்கு அந்தக் கண்டுபிடிப்பை வெளியிடுவதற்கு முன்பே காப்புரிமைக்காக இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் தனது கண்டுபிடிப்பை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு கண்டுபிடிப்பு வேறு யாராலும் பதிவு செய்யப்படாத புதிய கண்டுபிடிப்பாக அங்கீகரிப்பதற்காக இதனைப் பெறவேண்டியது அவசியம். இது சம்பந்தப்பட்ட தகவல்கள் பிறர் அறியாதவண்ணம் பாதுகாக்கப்படும்.

Intellectual Property Protection | Trade Marks

ஒருவர் தன் கண்டுபிடிப்பை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதுகுறித்த விளக்கங்களுடன் காப்புரிமைக்காக விண்ணப்பித்தபின், வேறு யாரேனும் இதேபோன்ற கண்டுபிடிப்பை பதிவு செய்துள்ளனரா என்று விசாரித்து, காப்புரிமை தரப்படும்.

ஒருவர் காப்புரிமை பெற்றுவிட்டால் 20 வருடம் அது அவருக்குச் சொந்தமாக இருக்கும். அதன்பிறகு அதற்கான முழுஉரிமையை அவர் மட்டுமே கொண்டாட முடியாது. தவிர, காப்புரிமை பெற்றவரே அவர் கண்டுபிடித்த பொருளை தயார் செய்து விற்கலாம். அவருடைய அனுமதி பெற்றபிறகே மற்றவர்கள் அந்தப் பொருளையோ அல்லது தொழில்நுட்பத்தையோ விற்க முடியும்.

இரண்டாவது, வடிவமைப்பு. ஒரு குறிப்பிட்ட பொருளின் வடிவத்துக்கு வழங்கப்படும் சான்று இது. ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ தங்களது நிறுவனத்தின் பெயரில் வெளியாகும் பொருட்களுக்கு ஒரு பிரத்யேக வடிவமைப்பை வழங்கி இருக்கும். அதனைப் பதிவு செய்துவிட்டால், அதே வடிவத்தில் அதேபோன்ற பொருளை வேறு எந்த நிறுவனமும் வெளியிட முடியாது.

இதில் வடிவம், வண்ணம் மற்றும் அமைப்பு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, இதனை யாராவது பதிவு செய்திருக்கிறார்களா என ஆராய்ந்த பின்னரே அதற்கு சான்றளிக்கப்படும். உதாரணமாக, ஃபேன்டா குளிர்பான பாட்டிலின் வடிவமைப்பு.

மூன்றாவதாக, வணிகக் குறியீடு. இது, ஒரு குறிப்பிட்ட தனிநபரோ அல்லது நிறுவனமோ அவர்களது பொருளையோ அல்லது சேவையையோ, மற்ற போட்டியாளர்களிடமிருந்து தனித்துக்காட்ட பயன்படுத்தும் ஓர் அடையாளம் அல்லது குறியீடு ஆகும். பொதுவாக ஒரு சொல், வார்த்தை, வடிவம், எழுத்து ஆகியவைக்காக இது பெறப்படும். சில நேரங்களில் வண்ணம், மனம், ஓசை ஆகியவற்றுக்கும் பெறப்படும். உதாரணமாக, ஏர்டெல் நிறுவனத்தின் கருப்பாடலுக்கு

(Theme song) வணிகக் குறியீடு பெறப்பட்டுள்ளது. அதேபோன்றுதான் தற்போது திருப்பதி லட்டுக்கும் வணிகக் குறியீட்டுக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

நான்காவதாக, புவிசார் குறியீடு. இது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சிறப்பையோ அல்லது அந்த இடம் அல்லது தோற்றத்தையோ சிறப்பாகக் குறிக்கப் பயன்படுவதாகும். இதுவரை தமிழ்நாட்டில் மதுரை மல்லி,

Intellectual Property Protection | Trade Marks

தஞ்சாவூர் பொம்மை, காஞ்சிப் பட்டு போன்ற இருபதுக்கும் மேற்பட்டவற்றுக்கு புவிசார் குறியீடு தரப்பட்டுள்ளன” என்றார்கள் அறிவுசார் சொத்துரிமை அலுவலக அதிகாரிகள்.

இந்த உரிமைகளைப் பெற எவ்வாறு பதிவு செய்யலாம், எங்கு பதிவு செய்யலாம் என்றுதானே கேட்கிறீர்கள்? அதற்கான பதிலையும் அவர்களே சொன்னார்கள்.

”அறிவுசார் சொத்துரிமைக்காகப் பதிவு செய்ய காப்புரிமைக்கு டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள அலுவலகங்களிலும், வணிகக் குறியீட்டுக்கு இந்த நகரங்களுடன் சேர்த்து அஹமதாபாத்திலும், புவிசார் குறியீட்டுக்குப் பிரத்யேகமாகச் சென்னையில் தனி அறிவுசார் சொத்துரிமை அலுவலகமும் உள்ளன. நேரடியாகவும் அல்லது ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இந்த உரிமை பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த இணையதளத்தைப் பார்க்கலாம்: https://www.ipindia.gov.in

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader