IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை

Get real time updates directly on you device, subscribe now.

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை என்பது இயற்கையின் இதயத்தை இம்சைப்படுத்தாமல் செய்வது, இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது. இயற்கையினுள் செயற்கையை புகுத்தாமல் இயற்கையை இதமாக அதன் போக்கில் விடுவது, இரசாயனத்தைப் புகுத்தி இயற்கையை ரணப்படுத்தாமல் இருப்பது.

இயற்கை வேளாண்மை என்பது உயிருக்கு தீங்கு விளைவிக்கின்ற இரசாயன உரங்களையோ, வேதியியல் பூச்சிக்கொல்லிகளையோ, களைகொள்ளிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதாகும். இயற்கை வேளாண்மைக்கு எனத் தனியாக எந்தவொரு கொள்கைகளும் வகுக்கப்படவில்லை.

இயற்கை வேளாண்மையில் முக்கியமானது பயிர் சுழற்சி முறை மற்றும் கலப்பு பயிர்கள் பயிருடுதலாகும்.

இயற்கை வேளாண்மை என்பது “இயற்கையின் சுழற்சிகளை மையமாக கொண்டு செயல்படும் வேளாண்மை முறை” இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது தான் இயற்கை வேளாண்மை. காட்டிலுள்ள மரங்களை பார்த்தாலே இயற்கை வேளாண்மையை கற்று கொள்ளலாம். காட்டில் யாரும் விதைகளை விதைப்பதும் இல்லை, உழுவதும் இல்லை, களை எடுப்பதும் இல்லை அவை தானாகவே வளருகின்றன. அதன் நல்வளர்ச்சிக்கு காரணம் நல்ல வளமான மண் அங்கு இருப்பதேயாகும். மேலும் மரங்களிலிருந்து விழும் இலை தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து மூடாக்காகி மண்ணிற்கு ஈரப்பதத்தை கொடுகின்றது, இது தான் இயற்கை வேளாண்மையின் அடிப்படை.

நாமும் இதே போல “ஏதும் செய்யாத வேளாண்மை”யை செய்யலாம், ஆனால் இன்றிருக்கும் நிலையில் நம் மண் வளம் தரமற்றதாகிவிட்டது, மலடாகிய மண்ணை நல்ல மகசூல் கிடைக்கும் மண்ணாக மாற்ற நாம் சில தொழில்நுட்பங்களை இயற்கை வேளாண்மையில் புகுத்த வேண்டும். அவை பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிருடுதல், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதாகும். மேலும் ஒற்றை நாற்று நடவு, மூடாக்கி போடுதல், உரக்குழிகள் வெட்டுதல், பயிர்களுக்கு இடையே காற்றோட்டத்தை பராமரிப்பது, நாட்டு விதைகளை பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்பங்களும் இயற்கை வேளாண்மையுடன் இணைந்ததாகும்.

பாரம்பரிய வேளாண்மை

இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான். அதன் புகழை தரணியில் உயர்த்தியதே அதன் தங்கப்புதல்வர்கள், தவப்புதல்வர்களாகிய விவசாயிகள் தான்.

இந்திய மக்கள் தொகையில் 64சதவீத மக்கள் விவசாயத்தை முழு நேரத்தொழிலாக செய்து வருகின்றனர்.

பசுமை புரட்சி பூச்சிக்கொல்லி மற்றும் கலப்பு நைட்ரஜன் போன்றவற்றை வளர்ந்த நாடுகளிடமிறந்து வளரும் நாடுகளுக்கு அளிக்க வழி செய்தது. இதன் விளைவாக வளர்ந்த நாடுகளின் நிறுவனங்கள் வளர்ந்ததே தவிர வளரும் நாடான நம் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக நாம் இன்று பல நோய்களை அனுபவிக்கின்றோம் நீரழிவு, புற்றுநோய், மலட்டுதன்மை, பிறவி ஊனம், கண் பார்வை குறைவு போன்ற பல நோய்கள் இன்று எங்கும் பரவியதற்கு காரணம் நம் மண்ணில் கலந்துள்ள ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி இவற்றின் எச்சங்களால் தான். இப்படி நச்சு தாக்கிய மண்ணில் விளைந்த காய் கறிகளை உண்ணும் பொழுது நம் உடம்பிற்குள்ளும் நச்சு நுழைந்து விடுகிறது.

இன்று விவசாயம் என்னும் பெயரில் பயிர்களுக்கு விஷச்சாயம் பூசும் பணி நடக்கின்றது. “சர்வதேச ஆய்வறிக்கையின்படி மகசூலும் மண் வளமும் நேர்விகிதத்தில் உள்ளது. மண் வளத்தை பொறுத்துதான் மகசூல் உள்ளது. இந்திய மண் வளத்தை ஆராய்ந்த சர்வேதேச ஆய்வுக்குழு நம் மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தை தவிர பிற சத்துக்களான பாஸ்பரஸ், மக்னீஷியம், போரான், துத்தநாகம் போன்றவை குறைவாக உள்ளதாக கூறிக்கின்றது.” வளமான மண் இன்று வளம் குன்றி கலங்கமானதற்கு விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதே காரணம்.

“சென்றதினி மீளாது மூடரே” எனும் பாரதியின் வாக்கிற்கு ஏற்ப கடந்தததை நினைத்து வருந்தாமல், நாம் செய்த தவற்றை திருத்த இதுவே உகந்த நேரம். நம் வருங்கால சந்ததியினர் வளமுடன் வாழ வேண்டுமென்றால், வளம் குன்றிய மண்ணை அவர்கள் வசமாக்காமாலிருக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே தீர்வு, நிரந்தரதீர்வு நாம் அனைவரும் இயற்கை வேளாண்மையை கடைப்பிடிப்பதாகும்.

தற்கால நவீன விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக முதலில் மகசூல் அதிகமானாலும், பின்னால் மண்ணின் வளம் குன்றி விவசாயத்தின் வளர்ச்சி குன்றி விட்டது. சுற்றுசூழல் சீர்கேட்டையும், மனித ஆரோகியத்தையும் கெடுத்து விட்டன.

இயற்கை வேளாண்மை முறையில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்றவை கிடைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கலப்பு பயிர் முறை. ரைசோபியம் எனும் பாக்டீரியா தான் தழைச்சத்தை வளிமண்டலத்திலிருந்து கிரகித்து செடிகளுக்கு கொடுக்கிறது. கலப்பு பயிராக நாம் துவரை, அவரை போன்ற இரு வித்திலை தாவரங்களை பயிரிடும்போது ரைசோபியம் எனும் பாக்டீரியாக்கள் அத்தாவரங்களின் வேர் முடிச்சுககளில் பல்கி பெருகுகின்றது. இதனால் மண்ணிற்கு தழைச்சத்து கூடுகிறது மண்ணும் வளமடைகிறது.

பயிர் சுழற்சிமுறை

நிலத்தில் ஒரே வகையான பயிர்களை பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்

இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சமான பயிர் சுழற்சி முறையை நம் முன்னோர்கள் முறையாக செய்தனர். முதல் பருவத்தில் நெல், அடுத்த பருவத்தில் உளுந்து, அதற்கடுத்து பயறுவகைகள் என மாறி மாறி பயிரிட்டனர். பயிர் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடும் என நன்கு தெரிந்திருந்தனர்.

இயற்கை வேளாண்மையில் சம்பா நெல்லுக்கு பிறகு உளுந்து, குறுவை நெல்லுக்கு பிறகு தாளடி நெல், அதற்கு பிறகு சம்பா நெல் அதனூடே சணப்பு இப்படித்தான் மாற்றி மாற்றி பயிர் செய்ய வேண்டும். முதலில் சணப்பு விளைந்த பின் அதன் விதையை நீக்கி மூடாக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறும். இன்று நம் விவசாயிகள் இதே முறையை பின்பற்றுகின்றனர்.

பயிரின் வளத்தை தீர்மானிப்பது மேல் மண்ணாகும், மேலும் நிலத்தை சில நாட்கள் தரிசாக போட்டு வைத்தோமென்றால், களைத்துபோன நிலம் புத்துயிர் பெறுகிறது. பல்லாயிரம் வருடங்களாகவே இந்த யுக்தியை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர், இப்படி மண்ணை தரிசாக போட்டு வைக்கும் போது அம்மண்ணில் கொழிஞ்சி, அவுரி, கரந்தை உள்ளிட்ட செடிகள் முளைத்து ஈரத்தை தக்க வைக்கின்றன, மேலும் பயிர் விளைவிக்க அந்த மண்ணை உழும் பொழுது அச்செடிகளை மடக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறுகின்றது.

கலப்பு பயிர்களின் நன்மை

பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பலதரப்பட்ட பயிர் வகைகளை கலந்து பயிரிட்டு வந்தனர், இப்படி கலந்து பயிரிடுவதால் ஒரு செடியின் தேவையை மற்றொரு செடி நிறைவேற்றும். எடுத்துக்காட்டாக தக்காளி மற்றும் சணப்பு கலந்து பயிரிட்டனர். இதன் மூலம் தக்காளி மகசூல் கூடியது, சோளத்துடன் தட்டை பயிரை கலந்து பயிரிடும் போது தட்டை பயிரின் நெடி சோளத்தைத் தாக்கும் தண்டு தாக்குதல் நோயைத் தடுக்கும்.

பருத்தியை தாக்கும் காய் புழுக்கள் பருத்தியை தாக்கிவிட்டு ஒரு செடியிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுகின்றது. அடுத்த செடியில் அவை வேறு வித சுவையையும் தன்மையயும் உணருகின்றன, இதனால் அதற்கடுத்த செடிக்கு தாவுகின்றன. அங்கும் அவை வேறு சுவையை உணர்வதால் ஒவ்வாமை நோய் ஏற்பட்டு வயல்களை விட்டே ஓடிவிடுகிறது, மேலும் கலப்பு பயிரான பாசிப்பயிறு, மொச்சை போன்றவற்றை அறுவடை செய்தபின் அவற்றை மூடாக்கி போட்டால் மண்ணிற்கு வளமும் கூடுகின்றது,

தென்னை மரத்திற்கு நடுவே பப்பாளி, பாக்கு ஆகியவற்றை கலப்பு பாயிராக நடலாம். இன்று மரபணு மாற்றப்பட்ட பருத்தி, கத்திரியைப்பற்றி பல சர்ச்சைகள் கிளம்பும் இந்நேரத்தில் நம் விவசாயிகள் இயற்கை முறையில் பருத்தியை விளைவிப்பதும், அதன் காய் புழுக்களை கட்டுப்படுத்துவதும் நம் இயற்கை வேளாண்மை முறையால் தான் சாத்தியமாயிற்று. இதுபோல் கலப்புப்பயிர் முறையில் பல நன்மைகள் உள்ளன.

இயற்கை பூச்சிவிரட்டி

பூச்சிகளில் நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் உள்ளன, சிலந்தி, ஊசித்தட்டான், மண்புழு, நண்டு, நத்தை ஆகியவை நன்மை செயும் பூச்சிகள் ஆகும். பச்சைக்காய் புழுக்கள், தரை வண்டுகள், காண்டாமிருக வண்டுகள், அசுவினி, வெள்ளை ஈ, கத்தாழை பூச்சி, குருத்துப்புழு, இடைக்கணு புழு ஆகியவை தீமை செய்யும் பூச்சிகள் ஆகும்.

நம் முன்னோர்கள் பூச்சிகளில் நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளைப்பற்றி அறிந்து இருந்தனர். ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது பூச்சிகளில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்து விடுகின்றன. எனவே இயற்கை மூலிகைகளை வைத்தே பூச்சிகளை விரட்டினார்கள். அவர்கள் பயறுகளில் உள்ள பூச்சிகளைய் நீக்க மிளகாய்வற்றல், மிளகு, காய்ந்த வேப்பிலை போன்ற பொருட்களை உபயோகப்படுத்தினர்.

இன்று இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறவர்கள் இப்பூச்சிகளின் தன்மையை அறிந்திருக்கின்றனர். அதனால் சில மகளிர் குழுக்கள் கூட தங்கள் குழுக்களுக்கு சிலந்தி, ஊசித்தட்டான் என நன்மை செயும் பூச்சிகளின் பெயர்களை வைத்துள்ளனர். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் இன்றைய விவசாயிகள் மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்துகின்றனர்.

மூலிகை பூச்சிவிரட்டி என்பது எருக்கு, நொச்சி, வேம்பு, புங்கன், முருங்கை, ஆடதொடை ஆகியவற்றின் இலைகளை கைப்பிடி அளவு இடித்து 10 லிட்டர் மாடு கோமியம் கலந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் நன்கு ஊறவைத்து தயாரிப்பதாகும். மேலும் கத்திரிச்செடிகளுக்கு வேப்பங்கோட்டை கசாயம், பூண்டு கசாயம், வசம்பு கசாயம் போன்றவற்றை பூச்சி விரட்டியாக பயன்படுத்துகின்றனர்.

கத்திரி விளைச்சலுக்கு காய்ப்புழு, அசுவினி, இழை சுருட்டு புழு போன்ற பிரச்சனைகள் வரும், இவற்றையெல்லாம் நீக்க வேம்பு எண்ணெய், புங்கன் எண்ணெய், காதி சோப்பு கரைசால் ஆகியவற்றால் தயாரான “பொன்னீம்” என்ற பூச்சிவிரட்டியை பயன்படுத்துகின்றனர்.

Intellectual Property Protection | Trade Marks

மூடாக்கு போடுதல்

இயற்கை விவசாயத்தின் முக்கியமான ஒன்று மூடாக்கு போடுதல். வைக்கோலை நெல் போன்ற பயிர்களின் மீது மூடாக்கு போடுவதன் மூலம் மண்ணில் உள்ள மண்புழுக்கள் பெருகுகின்றன, மண் அரிப்பு மற்றும் நீர் ஆவியாவததை தடுக்கின்றது. மண்ணில் ஈரப்பதம் அதிகமாகின்றது.

பயிருக்கு தேவையான சதுக்களை அதிக மடங்கு கிடைக்க செய்கின்றது, மூடாக்கி போடுவதன் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. தென்னந்தோப்பில் விழும் மட்டைகள், ஓழைகள் போன்றவற்றை எரிக்காமல் அவற்றை மரத்தை சுற்றி மூடாக்கி போட்டால் களைகள் கட்டுப்படும்.

நவீன விவசாய முறையை பின்பற்றும் விவசாயிகள் கரும்பு வெட்டும் பொழுது சோகைகளை அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் அந்த சோகைகளை முடக்கு போட்டு தண்ணீர் பாய்ச்சிடுவார்கள், இதனால் மொத்த சோகைகளும் மட்கி நல்லதோர் உரமாகும். மூடாக்கி போடுவதால் மகசூல் கூடுகிறது, தண்ணீர் செலவு குறைகிறது.

ஜீவாமிர்தம்

இயற்கை வேளாண்மையில் நம் விவசாயிகள் அதிகளவு ஜீவாமிர்தம் பயன்படுத்துகின்றனர்.

ஜீவாமிர்தம் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளை பெருக்கும் ஊடகம், இது ஊட்டச்சத்துகளை செடிகள் எடுத்துகொள்ளும் வேலையைச் செய்கிறது.

ஜீவாமிர்தம் எனப்படுவது நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுமூத்திரம், கருப்புநிற வெல்லம், தானிய மாவு, மண் போன்றவற்றின் கலவையால் தயாரிக்கப்படும் நுண்ணுயிர் ஊக்கியாகும்.

“ஜீவாமிர்தம் போன்ற நுண்ணுயிர் ஊக்கிகள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை வேகமாக செயல்பட வைத்து, மண்ணை வளப்படுத்தி எல்லாவித சத்துகளையும் மண்ணிற்கு தருகின்றது”. ஜீவாமிர்தத்தை மிகக்குறைந்த செலவில் தயாரித்து, பயிர் வளர்ச்சியில் நிறைந்த லாபத்தை நம் இயற்கை விவசாயிகள் அடைந்துள்ளனர். இயற்கை வேளாண்மையில் பஞ்சகவ்யா, அமுதக்கரைசலின் பயன்பாடும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் முளைப்புத்திறன் கூடுகிறது, வளமான நாற்றுகள் உருவாகின்றன, இன்று பல விவசாயிகள் இதனை பயன்படுத்துகின்றனர்.

மேலும் இயற்கை வேளாண்மையில் யூரியாவிற்கு நல்லதொரு மாற்று பொருளாக நெய்வேலி காட்டாமணக்கு அமைந்துள்ளது. ”1962ம் ஆண்டிலிருந்தே தமிழக உழவர்கள் தழைச்சத்துக்காகவும், பூச்சி விரட்டியாகவும் இதனை பயன்படுத்துகின்றனர்”.

மேலும் மண்ணை வளப்படுத்த இயற்கை வேளாண்முறையில் பல தொழில்நுட்பங்கள் உள்ளன

ஆழமாக வேர் விடும் தாவரங்களை பயிரிட்டால் அவை ஆழத்தில் உள்ள சத்துகளை உறிஞ்சுகின்றன. மேலும் அவற்றை மடக்கி உழும் பொழுது தனது தாவரப்பாகங்களை பூமிக்குத் தருகின்றன, இதனால் மண்ணின் வளம் கூடுகின்றது.

இயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களுக்குப் பதிலாக நம் மக்கள் தொழுவுரம், கோழி எரு, ஆட்டுப்புழுக்கை போன்றவற்றை அடியுரமாக போடுகின்றனர். இதனால் மண் புழுக்களின் எண்ணிக்கையும் பெருகுகின்றது. வயல் வெளிகளில் ஆட்டுக்கிடை போடும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே உள்ளது. கிராமப்புறங்களில் கருக்கலில் எழுந்து பெண்கள் மாட்டு சாணத்தை அள்ளிக்கொண்டு வயல் வெளிகளில் போடுவர், இவையெல்லாம் நல்ல இயற்கை உரமாகும்.

ஈரோடு மாவட்டத்தில் ஆட்டு ஓட்டம் நல்லதொரு பயிர் வளர்ச்சி ஊக்கியாக உள்ளது.

ஆட்டு ஓட்டம் என்பது வெள்ளாடு கோமியம், வெள்ளாடு எரு, பால், தயிர், பசு நெய், இளநீர் ஆகியவற்றின் கலவையால் செய்யும் இயற்கை பொருளாகும்.

Intellectual Property Protection | Trade Marks

பாரம்பரிய விதைகள்

பாரம்பரிய விதைகள் உணவுக்காக மட்டும் இன்றி மருந்தாகவும் பயன்பட்டது. பாரம்பரிய விதைகளை பயன்படுத்துவதால் இரசாயன உரம் போடத்தேவை இல்லை. பூச்சிகளை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்தி பாரம்பரிய விதைகளுக்கு உண்டு. தமிழ்நாட்டில் மட்டும் 2 இலட்சம் பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்துள்ளன. குழியடிச்சான் சம்பா, மாப்பிள்ளை சம்பா, குடவாலை சம்பா, கல்லுண்டை சம்பா, கவுனி அரிசி போன்றவை பாரம்பரிய நெல் ரகங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

நம் முன்னோர்கள் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க பல யுக்திகளை கையாண்டனர். தொடர்ந்து மூன்று அமாவாசை நாட்களுக்கு விதைகளை காய வைத்தனர் இதனால் விதைகளில் பூச்சி வராமல் இருந்தது. பஞ்சாங்கம் போன்றவை உருவாக்கி அதன் மூலம் கால நிலைகளை அறிந்து இயற்கைக்கு ஏதுவாக விதைகளை நட்டனர். பருவத்தே பயிர் செய்தனர். இவையெல்லாம் இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் தான். நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாய் பொக்கிஷமாய் சேர்த்து வைத்த பாரம்பரிய விதைகளை நாம் இன்று தொலைத்து கொண்டிருக்கிறோம்.

கண் இருந்தும் குருடராய் அயலான் காட்டிய தவறான வழியில் சென்று தரமற்ற விதைகளை நட்டதால் நாம் நம் நிலத்தை மாசு படுத்தினோம், மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளை அழித்தோம். ஆனால் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் பாரம்பரிய விதைகளின் அருமையை உணர்ந்து அதனை சேகரித்து பயிர் இடுகின்றனர். மேலும் பாரம்பரிய விதைகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துகின்றனர். இவையெல்லாம் நன்மைக்கான மாற்றங்கள் ஆகும்.

தொழில்நுட்ப கருவிகள்

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் இன்று விஞ்ஞானிகள் போல திகழ்கின்றனர், விவசாயத்தை எளிமைப்படுத்த பலவித கருவிகளை தாயாரிக்கின்றனர்.

கரும்பு தோகைகளை மூடாக்கு போடும் வகையில் பொடி பொடியாக வெட்டி தரும் இயந்திரம் ஸ்ரீநாட். இதன் மூலம் மூடாக்கு போடும் வேலை எளிமையாகிறது.

முடிவுரை

இயற்கை விவசாயத்தின் மகிமை பற்றி மக்களிடம் விளக்க இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர், பசுமை விகடன் இதழ் போன்றோர் பெரும் முயற்சி மேற்கொள்கின்றனர்.

அவர்களின் வழிகாட்டுதல் மூலமாக இன்று நம் நாட்டில் பல விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர், மறுமலர்ச்சியை உருவாக்கி வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசுப்பட்டதின் விளைவாக இன்று தாய்ப்பாலில் கூட விஷம் என்ற நிலைமை உருவாகி விட்டது,

உலகில் வளரும் நாடுகளில் தான் மக்கள் தொகை அதிகம், எனவே அந்நாடுகளில் வேளாண்மை வெற்றியடைந்தால் உலகம் வெற்றியடையும். எனவே இயற்கை வளம் பேணும், மண் வளம் காக்கும், தரமான சத்துக்கள் கொண்ட காய்கறிகளை விளைவித்துத் தரும் இயற்கை வழி விவசாயத்தை இனிதே வரவேற்போம்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader