முனியாண்டி கோவில்காடு – கொடிமங்கலம், மதுரை

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு துருப்பிடித்து போன ஈட்டியோ, சிலையே இல்லாத வெறும் பீடமோ, மஞ்ச துணி அணிவிக்கபட்ட ஒரு மரமோ, குவித்து வைத்த மணல் மேடோ, குவளை நீரோ இது எதுவாயினும் ஒன்று போதும்.

 

எளிய மக்கள் தெய்வம் என்று வணங்கி வழிபட. அவர்களின் தெய்வத்திற்கு பத்து கைகள், நாலு தலைகள் உருவம் கொண்ட தெய்வமோ, நான் தான் இந்த உலகத்தை படைத்தேன் என்று சொல்லுகிற கடவுளோ வேண்டியதில்லை.

 

நாட்டார் மக்கள் மிக எளிமையானவர்கள், அவர்களின் தெய்வமும் மிக எளிமையானது. அப்படியான உருவமற்ற, சிலையற்ற வெறும் பீடத்தை கொண்ட ஒரு காடுதான் இந்த முனியாண்டி கோவில்காடு.

 

மதுரை ஊமச்சிகுளத்தில் இருந்து நத்தம் செல்லும் வழியில் உள்ள கொடிமங்கலம் ஊரில் அமைந்துள்ளது இக்கோவில். மருதம், நாட்டு கருவேலம் உள்ளிட்ட மரங்கள் அடர்ந்த ஒரு ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட காடாக இது விளங்குகிறது.

 

காட்டின் எல்லையில் செருப்பை கழட்டி வைத்துவிட்டதுதான் கோவில்காட்டுக்குள் செல்ல வேண்டும். எப்படி ஆகம கோவிலுக்குள் உள்ள சிலைகளை சேதப்படுத்த கூடாதோ, அப்படி இந்த கோவில் காட்டிற்குள் உள்ள மரங்களுக்கு எந்த சேதாரமும் செய்துவிட கூடாது என்பதும் ஒரு கட்டுப்பாடு.

 

 

காட்டை காக்க வனத்துறையை உருவாக்க வேண்டியதில்லை. வன தேவதை, வன தெய்வம் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினால் போதும், ஊர் மக்கள் ஒவ்வருவரும் வனத்துறை காவலர் போல செய்லபடுவார்கள். இத்தனை ஆண்டுகளாக அவர்கள் காட்டை அப்படித்தான் பாதுகாத்து வந்து இருக்கிறார்கள்.

 

இந்த மரத்தை வெட்டினால் எவ்வளவு மதிப்பு என்று கணக்கிட்டு திட்டம் போடுவது அரசின் இயல்பு. இந்த மரத்தின் சின்ன கிளையை முறித்தாலும் சாமி தண்டிக்கும் என நம்புவது மக்களின் மரபு. உண்மையில் காட்டின் பாதுகாவலர் யார் என்ற கேள்வியை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader