IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அன்னை தெரசா ஏன் அவ்வாறு கூறினார் ?

11


தேசபக்தி என்பது மக்களுக்குத் தொண்டாற்றுவது என விவேகானந்தர் குறிப்பிட்டார். அவர் ஒரு புறம் மதத் தலைவராக காணப்பட்டார். மறுபுறம் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். அவரை அரசியல்வாதியாகவும் உயர்ந்த தலைவராகவும் மதிப்பிட்டார், ஜவஹர்லால்நேரு. விவேகானந் தர் இந்து மதத்தை நேசித்தவர். அவரைப் போன்றே மதத்தலைவராக அன்னை தெரசாவைக் குறிப்பிடலாம்.


ராமகிருஷ்ண மடத்தை விவேகானந்தர் தோற்றுவித்தார். அன்னை தெரசாவும் 1950, அக்டோபர் 7-இல் அன்பின் பணியாளர் சபையைத் தோற்றுவித்தார். போப் ஆண்டவரும் அங்கீககாரம் அளித்தார். பின்னர் 1952, ஆகஸ்ட் 22-இல் இறப்போர் நல இல்லத்தைத் தோற்றுவித்தார். அது இப்போது 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை பரப்பி செயல்படுகிறது.


1963-இல் சகோதரர்கள் சபையை உருவாக்கினார். 1964-இல் உடன் உழைப்போர் சபை உருவானது. அன்னை தெரசாவின் தலைமையில் அவர் உருவாக்கிய அமைப்புகள் உலகெங்கும் சிறப்பான மனிதநேயத் தொண்டாற்றி வருகின்றன.


அன்னை தெரசாவின் பணி விலை மதிக்க முடியாதது. அவர் யூகோஸ்லாவின் ஸ்காட்ஜே நகரில் நிக்கோலா – திரானா எனும் அல்பேனிய தம்பதியருக்குப் பிறந்த மூன்றாவது குழந்தை.


பெற்றோர் இட்ட பெயர் ஆக்னஸ் கொன்சகா பொஜாக்கியு!சிறுவயதிலேயே இந்திய மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று யூகோஸ்லாவியாவிலிருந்து கனவு கண்ட சின்னஞ்சிறுமலர் இவர்!1928, செப்டம்பர் 26-இல் அவர் இந்தியாவுக்குப் புறப்பட்டபோது அவருக்கு வயது 18. அன்னையை, தன் குடும்பத்தினரைப் பிரிந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார்.


பின்னர் வாழ்நாள் எல்லாம் அன்னையை அவர் சந்திக்க முடியாமல் போனது. 1929-ஆம் ஆண்டு ஜனவரி 6-இல் கல்கத்தா வந்து சேர்ந்தார். தன் பெற்றோர் இட்டப் பெயரைக் கைவிட்டு, தெரசா என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார். பின்னர் இரண்டாண்டு இறையியல் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி முடித்து சகோதரி தெரசா ஆனார்.


1946, செப்டம்பர் 10-ல் சேரிகளுக்கு சென்று சேவை செய்ய வேண்டம் என அவர் மனம் துடித்தது. இதற்குள் சுமார் 17ஆண்டுகாலம் ஆசிரியர் பணி செய்து முடித்து விட்டார்!


பின்னர் 1948 டிசம்பர் 15-இல் மூன்றுமாத மருத்துவ படிப்பை அவர் முடித்தபோது அவருக்கு வயது 38. 1948, டிசம்பர் 21அன்று வெறும் ஐந்து ரூபாய் மூலதனத்துடன் போட்டிஜில் சேரிக்கு சேவை செய்யச் சென்றார்.1949 தெரசாவின் தூய தொண்டுக்குத் துணையாக அவரது முன்னாள் மாணவி சுபாஷினி உடன் வந்தார்.


1949 மார்ச் 19 அன்று சூசையப்பரின் பெருநாள். அந்த தினத்திலிருந்து அவர் அன்னை தெரசா என்று அழைக்கப்பட்டார். பின்னர் இறப்போர் நல இல்லம், தொழுநோய் மருத்துவமனை, குழந்தைகள் காப்பகம், சகோதரர் சபை, உடல் உழைப்பாளர் சபை என அவரது அமைப்பு விரிவடைந்தது. அவரது குழு பெருகியது. அவரைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்தது.இந்தியாவின் பல இடங்களில் அவரது அன்பின் பணியாளர் சபை உருவானது.


1965 ஜூலை 26-ல் வெனிசூலா நாட்டில் அன்பின் பணியாளர் கிளை உருவானபோது அன்னை தெரசாவின் சகோதரி நிர்மலா உடன் சென்றார்.


1972-ல் அன்னை தெரசாவின் தாய் திரானா அப்பேனியாவில் மரணம் அடைந்தார். 18 வயதில் பிரிந்த தாயை 62 வயதான அன்னை தெரசாவால் பார்க்க முடியவில்லை. அல்பேனியா அரசு அன்னை தெரசாவை அனுமதிக்கவில்லை. 1975-ல் அவரது அக்காவும் 1981-ல் அண்ணனும் மரணம் அடைந்தனர். 1989-ல் செப்டம்பர் 3-ல் அவருக்கு இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டது.


அன்னை தெரசாவின் அண்ணன் மகள் ஆஜு உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் உடனிருந்து அன்னையைக் கவனித்துக் கொண்டார். பின்னர் அடிக்கடி உடல் நலம் குன்றியது.1997-ல் ஜனவரி அன்பின் பணியாளர் சபையின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.


1997 மார்ச், 3 அன்று சகோதரி நிர்மலாவை தனக்குப் பின்னர் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்தார்.1997 செப்டெம்பர் 5 வெள்ளிக்கிழமை அன்று அன்னை தெரேசா மரணம் அடைந்தார்.ஒரு குழுவை உருவாக்கி மாபெரும் ஸ்தாபனமாக, கட்டுக்கோப்புடன் வழி நடத்துவது எப்படி என்பதை அவரது வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.


ஓர் அமைப்பைப் பலப்படுத்துவதற்குள் அவர் சந்திக்க நேர்ந்த சங்கடங்கள் கண்ணீரை வரவழைக்கும். ஒருமுறை கல்கத்தாவின் தெருக்களில் கையேந்தி நிதி வசூல் செய்து கொண்டிருந்தார் அன்னை தெரசா. ஒரு பெரிய பணக்காரர் வீட்டின் முன்பு நின்றிருந்தார். அவன் அன்னையை ஏளனமாகப் பார்த்தான்.


அழுக்கு மனிதர்களுக்கு வெளிச்ச நீருற்றும் அந்த வெள்ளை தேவதையின் கரங்களில் பொற்காசுகளை இடாவிட்டாலும் ஒருசில இந்திய நாணயங்களை தந்திருக்கலாமே! ஆனால் அந்த பணக்காரன் என்ன செய்தான் தெரியுமா? அன்னை தெரேசாவின் கரங்களில் காறி உமிழ்ந்தான்.


அதனைக்கண்டு அருகில் நின்றிருந்த கன்னியர்கள் மனம் பதறினார். அன்னையின் மனஉறுதி கம்பீரமாக உயர்ந்து நின்றது. சற்றும் மனம் கலங்கவில்லை. முகமலர்ச்சியோடு அவன் எச்சில் உமிழ்ந்த கரங்களை மூடிக்கொண்ட அன்னை தெரசா “”இந்த எச்சில் எனக்குப் போதும். என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள்” என்றார்.


அன்னையின் சொற்கள் அவன் இதயத்தில் விழுந்தன. ஏளனப் பார்வை மாறியது. அவனுக்குள் புதிய வெளிச்சம். சட்டென காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். தன் தவறுகளை உணர்ந்தார். வேண்டும் உதவிகளை வாரி வழங்கினார்!


இன்னொரு சம்பவம் -இறப்போர் நல இல்லம் தொடங்கியதும் சில வாரங்களில் எதிர்ப்பு கிளம்பியது. “காளிக்கோவில் அருகில் கர்த்தரின் ஆட்களா’ என்று மதவெறியர்கள் கூச்சலிட்டனர். கோயில் பூசாரியுடன் சேர்ந்து அன்னையின்மீது கற்களைவீசி கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். அன்னை வெளியில் வந்து தைரியமாக நின்றார். “என்னைக் கொல்லுங்கள். ஆனால், இறந்துகொண்டிருப்போரை நிம்மதியாக சாக விடுங்கள்’ என்றார்.


பின்னர் கூட்டம் அமைதியாகச் கலைந்து சென்றது. இதில் ஒரு திருப்பம் என்னவென்றால் அன்னையை மிரட்டிய கோயில் பூசாரியே சாகும் தறுவாயில் அன்னையிடம் அடைக்கலம் வேண்டி நின்றார். நாம் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அன்பும்,உதவி செய்தலும் என்றுமே நம்மளை ஒற்றுமையாக இருக்க வைக்கும்.