IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கருவறை இருட்டுதான் என நினைத்தோம், ஆனால் கல்லறை இருட்டாய் மாறும் என நினைக்கவில்லை – விஜயபாஸ்கர்

0 133

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2வயது குழந்தை சுஜித் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு படையினரால் சடலமாக மீட்கப்பட்டான். கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம்.. ஆனால் கல்லறை இருட்டாய் மாறும் என எண்ணவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 25ம் தேதி மாலை 5.40 மணியளவில் வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த 2வயது சுஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.

27 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 100 அடி ஆழத்திற்கு சென்றவுடன் குழந்தையை மீட்பதில் மீட்பு படையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. குழந்தை மீட்பில் ஆரம்பம் முதலே தடங்கல் தான் ஏற்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி மாலை 5.40 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித், 4 நாட்களாக கடும் போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை 4.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டான்.

ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் குழந்தை சுஜித்தின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் சுஜித் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எப்படியும் நீ வந்துவிடுவாய் என எண்ணிதான் உணவின்றி, உறக்கமின்றி இமை மூடாமல் உழைத்தோம். கிணற்றில் இருந்த உன் மூச்சுக்காற்று தான் என்னை தந்தைபோல் இயக்க வைத்தது. கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம்.. ஆனால் கல்லறை இருட்டாய் மாறும் என எண்ணவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் குமுறியபடி தெரிவித்துள்ளார்.

நீ எப்படியும் வெளியே வந்துவிடுவாய், மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் கொடுத்து உன்னை காப்பாற்றி விடுவோம் என நினைத்து காத்திருந்தேன். இப்படி என்னை புலம்பி அழ விடுவாய் என நினைக்கவில்லை. மனதை தேற்றிக் கொள்கிறேன் ஏனென்றால் நீ கடவுள் குழந்தை என அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.