IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பூம் பூம் மாட்டிடம் ஆசிர்வாதம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்

0 19


கீழடி அகழ்வராய்ச்சிகளை பாதுகாப்பது போல் பூம் பூம் மாட்டுக்காரர்களையும் பாதுகாக்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


சென்னை பட்டிணப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வீடு அமைந்துள்ளது. அவர் வசிக்கும் வீட்டின் அருகே பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவர் சென்றிருக்கிறார். அவரை கண்டவுடன், அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்தி ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார்.

அதில், மாட்டுக்காரர் “அய்யா நல்ல இருக்கணும்னு அவர் தலையில் ஆசிர்வாதம் பண்ணு” என மாட்டிடம் கூறுகிறார். அதன்பின் மாடும் தலையை ஆட்டியபடி அமைச்சர் ஜெயக்குமாரின் தலையை நாவால் தடவி ஆசிர்வாதம் செய்கிறது.


இந்த நிகழ்வு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, இன்றைய சமுதாயத்தில் நமது நாகரீகம், பண்பாட்டு கூறுகள் பாரம்பரிய அம்சங்களை கேலி கிண்டலாக பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால் எனக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மாட்டுக்காரரின் பேச்சும், மாடு தலையசைத்து ஆசிர்வாதம் செய்ததும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தோண்டி எடுத்த கீழடி நாகரீகத்தை பார்த்து பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், அதே வேளையில் பூம் பூம் மாட்டுக்காரர் போன்றவர்களையும் மறந்து விடக்கூடாது என்றார். பூம் பூம் மாட்டினரை காப்பதும் நமது நாகரீகத்தை பாதுகாப்பதும் ஒன்று தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.