IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வீட்டின் மேற்கூரை இடிந்து 2 சிறுவர்கள் பலி – பரமக்குடியில் பயங்கரம்

Get real time updates directly on you device, subscribe now.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன், மனைவி ரேகா தம்பதியருக்கு ஜெகதீசுவரன்(10), விகாஷ்(8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரேகா தனது 2 மகன்களுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து மொத்தமாக வந்து விழுந்தது.

இதில் தூங்கிக்கொண்டிருந்த 3 பேரும் இடிபாடுகளுக்குள் புதைந்து உயிருக்கு போராடினர்.

வீடு இடிந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்க முயன்று தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு ஜெகதீசுவரன், விகாஷ் ஆகிய இருவரையும் உயிருடன் மீட்க முடியவில்லை.

இருப்பினும் தாய் ரேகா, படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து எமனேசுவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில், அந்த வீட்டின் கூரை மிகவும் பழுதடைந்து இருந்ததால் இடிந்து விழுந்து இருக்கலாம் என தெரியவருகிறது.

மேலும் இதுதொடர்பாக பரமக்குடி தாசில்தார் விஜயகுமாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

அப்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசின் நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader