IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொலையான பணிப்பெண் மகள்களின் கல்விச்செலவை ஏற்குமா திமுக?

14


நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் கொலையான சம்பவத்தில், அவர்களது வீட்டு பணிப்பெண் மாரியம்மாளும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மாரியம்மாளின் மகள்கள் படிப்புக்கு திமுக உதவி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகத்தில் பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி படுகொலை சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நெல்லை சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உமா மகேஸ்வரியின் உறவினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர் பணிப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்லவில்லை என்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


இதற்கிடையில் கொலையுண்ட மாரியம்மாள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்க மு.க.ஸ்டாலின் உத்தவிட்டார். இன்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் மாரியம்மளின் வீட்டுக்கு நேரில் சென்று உதவித் தொகையை வழங்கினார். அப்போது அவரிடம் மாரியம்மாளின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், பிள்ளைகள் தொடர்ந்து படிக்க உதவி செய்யும்படி கோரிக்கை வைத்தனர்.


மாரியம்மாளின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். மாரியம்மாள் வீட்டு வேலைகள் செய்து தனது மகள்களை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படிக்க வைத்தார். மூத்த மகள் வீரலட்சுமி 11ம் வகுப்பும், அடுத்த மகள் ஜோதிலட்சுமி 9ம் வகுப்பும், கடைசி மகள் ராஜேஸ்வரி 8ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், இப்போது தாயும் கொலை செய்யப்பட்டு விட்டதால் நிர்கதியாக நிற்கும் இவர்கள் தொடர்ந்து கல்விச் செல்வை திமுக ஏற்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

  • செந்தில் பாலாஜி