காந்தி தாத்தா

Get real time updates directly on you device, subscribe now.

தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

&பிறந்தவர்கள் எல்லாம் புகழுடன் வாழ வேண்டும்; அப்படி இல்லையென்றால் பிறந்ததை விட பிறவாதிருப்பதே நல்லது என்பது வள்ளுவர் வாக்கு. மழைத்துளிகள் எல்லாம் முத்துக்கள் ஆகி விடுவதில்லை. பிறக்கும் மனிதர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் ஆகி விடுவதில்லை. சாதாரண மனிதராகப் பிறந்து, மகாத்மாவாக தன்னை உயர்த்திக் கொண்டவர் மகாத்மா காந்தி.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869, அக்டோபர் 2ல் குஜராத்தில், போர்பந்தர் என்ற கிராமத்தில் பிறந்தார்.

தனது 13 வயதில் கஸ்தூரி பாயுடன் திருமணம். 1888ல் இங்கிலாந்துக்கு சட்டம் பயிலச் சென்றார். அப்போது தாய் மது, மாது, மாமிசம் மூன்றையும் தொடக்கூடாது என சத்தியம் வாங்கி அனுப்பி வைத்தாராம். அதன்படி வாழ்ந்து காட்டினார் காந்தி. தாயின் சொற்படி நடந்தால் மேன்மையே என்பதை இந்த உண்மைச்சம்பவம் உணர்த்துகிறது.

சத்தியம், அகிம்சை, சமாதானத்தை தன் வாழ்நாள் முழுவதும் தவம் போன்று கடைபிடித்து வாழ்ந்தார். தன்னுடைய மெல்லிய தேகத்தில் அன்பு எனும் வலிமையை தாங்கி வாழ்ந்தார்.

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் & மாந்தா
குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்
&மூதுரை ஔவையார்

ஒருவன் தன்னை வெட்டும்போதும் அவனுக்கு நிழல் தந்து வெயிலை மறைக்கும் மரம். அதுபோல அறிவுடையோர் தமக்குத் தீங்கு செய்பவருக்கும் தம்மால் ஆன உதவியைச் செய்வர் என்பதுதான் இதன் கருத்து. காந்தியடிகள் தன் சுதந்திரப் போராட்ட ஆயுதமாக சத்தியம், அகிம்சை, சமாதானத்தை மனோ திடத்துடன் பின்பற்றி, மக்களையும் ஈர்த்து, வெற்றி கண்டார். தன்னை சுட்டு மாய்த்தவனையும் மன்னிக்கவே செய்தார். பகை உணர்வை அன்பால் வெல்ல முடியும் என வாழ்ந்து காட்டியவர்.

தன்னுடைய மகத்தான வாழ்க்கை பயணத்தில் தன் எதிர்ப்பை உண்ணாவிரதம், நடைபயணங்கள், சிறைவாசம் மூலம் மட்டுமே வெளிப்படுத்திய சேவகராக திகழ்ந்தார். கால்நடையாக ஒவ்வொரு கிராமம் நோக்கிய அவர் பயணங்கள் மகத்தானவை; மாற்றத்தை எதிர்நோக்கியவை.

“வாழும் தொடர்பு” என்ற நூலை எழுதிய ராய்சன் பாய், “உனக்குள்ளே கடவுளின் சாம்ராஜ்யம் உள்ளது” என்ற நூலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், “கடையனுக்கும் கடைத்தோற்றம்” நூலை எழுதிய ரஸ்கின் ஆகிய மூவர்தான் என் வாழ்வைச் செதுக்கியவர்கள் என்று கூறியிருக்கிறார் காந்தியடிகள்.

திருக்குறள் நூலை டால்ஸ்டாய் கேள்விப்பட்டு, அதிலுள்ள குறட்பாக்கள் சிலவற்றை அறிந்து, தம்மைக் கவர்ந்த சில குறட்பாக்களை மேற்கோள்காட்டி, தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்திக்கு கடிதம் எழுதிய பின்னரே, காந்தியடிகளுக்கு திருக்குறள் பற்றி தெரிய வந்ததாகவும் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித சமூகம் முழுமைக்கும் சேவகராக பணி செய்த மகாத்மாவைப் போல் பொது வாழ்க்கையில் பங்கெடுக்க, பிறர் துன்பத்தை தன் துன்பமாக பார்க்க, நாட்டுப் பற்றை வளர்க்க, செய்யும் சிறு செயல்கூட வன்முறை இல்லாததாக & உயரிய சிந்தனை, மனோதிடம், செம்மையான வாழ்க்கை முறை, மெய் சொல்லல், தூய்மை போன்ற அறப்பண்புகளை வளர்த்துக் கொள்ள இளைஞர் சமுதாயம் உறுதி ஏற்க வேண்டும்.

மதமோ, ஜாதியோ நம்மை உயர்வான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமே ஒழிய, மனிதனை மிருகமாக்குவதாக இருக்கக் கூடாது. பிறப்பால் அனைவரும் இந்தியர் என்ற எண்ணம் வர வேண்டும். நாம் ஒவ்வொருவரும், நம் அண்டை & அயலார் அதை வாங்கி விட்டார்கள், இதை வாங்கி விட்டார்கள், நாமும் அதனை வாங்க வேண்டும் என்ற நிலையிலேயே இன்று இருக்கிறோம். இதனை அறவே தவிர்க்க வேண்டும்.

காந்தியைப் பற்றி காந்தி எப்படி கூறுகிறார் தெரியுமா? இந்த உலகிற்கு நான் சொல்லித் தருவதற்கு புதிதாக ஒன்றும் இல்லை. சத்தியமும், அகிம்சையும் மலைகளைப் போல பழமையானவை. என்னுடை நடைமுறை வாழ்க்கையை அடியோடு மாற்றி புத்தகம் ரஷ்யன் எழுதிய அன் டூ திஸ் லாஸ்ட். என்னுடைய திடமான நம்பிக்கைகள் பல அந்த சிறந்த புத்தகத்தில் விளக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன், என்று காந்தி தாத்தா தன்னைச் செதுக்கிய உளிகளைப் பற்றி கூறியிருக்கிறார்.

மகாத்மாவை கவுரவிக்கும் விதமாக, இன்றைய வாழ்க்கைச் சூழலில் போக்குவரத்து இடையூறு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் என போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என அவர் பிறந்த நன்னாளில் உறுதி எடுக்க வேண்டும். தேசப்பிதாவைப் போல் இல்லாவிட்டாலும், அவரவர் ஊர் என்ற அளவில் காந்தி தாத்தாவின் உயரிய குணங்களை பின்பற்றி நம் ஆன்மாவை உயர்த்திக் கொள்ள உறுதி ஏற்போம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More