மகாராஷ்டிராவில் கடந்த ஒருவாரமாக பல்வேறு குழப்பங்கள் நிலவிவந்த சூழ்நிலையில் திடீர் திருப்பமாக கடந்த சனிக்கிழமையன்று மகாராஷ்டிரா மாநில முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாஸ் பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டனர்.
ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிருபிக்க முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அரசிற்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இன்று மாலை 5 மணிக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடக்கக்கூடாது என்றும், அதனை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.