IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிங்கம் கூண்டிலிருப்பதால் பயம் விட்டுப் போச்சா..? சீறிய டிடிவி தினகரன்

0 28

எங்களை விட்டு பிரிந்து வேறு கட்சியினருடன் இணைந்த துரோகிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, விரைவில் ஒரே சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிடுவோம். அமமுக கட்சி சின்னம் பெறுவது தொடர்பான விசாரணை நாளை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் நடைபெறுகிறது.

இரட்டை இலை சின்னத்தை வைத்து கொண்டாடும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரின் மனுக்களையும் நிராகரித்து எங்கள் கட்சிக்கென தனி சின்னம் பெறுவோம். ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது சின்னம் பெற்று மக்களை குழப்ப எண்ணமில்லை. ஆகையால் விரைவில் ஒரு சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெல்வோம் என்றார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை குறித்து தேவையில்லாத சர்ச்சை கருத்துக்களை பேசக் கூடாது. ஒரு நாட்டின் பிரதமரின் இறப்பு பற்றி இப்படி பேசுவது சரியல்ல. அவர் பேசிய கருத்தை திரும்ப பெறுவது நல்லது.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுக கட்சியை ஆதரிப்பார் என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதற்கு பதிலளித்த தினகரன், யார் யாரோ உளறுவதற்கெல்லாம் என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். வேடிக்கையாக பேசுவதை கேள்வியாக கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். வேறு கேள்வி கேளுங்கள் என்றார்.

எங்களை விட்டு பிரிந்த துரோகிகளுடன் ஒருபோதும் இணைய வாய்ப்பு கிடையாது. கூடிய விரைவில் ஒருசில துரோகிகளை நீக்கிவிட்டு மற்ற அனைவரும் மீண்டும் அமமுகவில் இணைவார்கள். சசிகலா சிறையில் இருப்பதால் அவரால் பேச முடியாத காரணத்தால் வெளியே இருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.