IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரை தமிழ்ச்சங்கமும்; தலைமை தபால் நிலையமும்!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழால் மதுரையும், மதுரையால் தமிழும் சிறப்புற்றன. மதுரையை ஆண்ட பாண்டியர்களுக்கும், தமிழுக்கும் உள்ள தொடர்பு பிரிவு அறியாப் பெருமை கொண்டது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மூன்று முறை இடம் மாறியிருக்கிறது. அதைக் கொண்டே முதற்ச் சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என்று குறிக்கப்படுகிறது. வரலாற்றில் இடம் பெற்ற இந்த மூன்று சங்கங்களைப் பேல மதுரையில் நான்காவது தமிழ்ச்சங்கம் ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது. இதைத் தொடங்க முழு முதற்காரணமாக இருந்தவர் இராமநாதபுரம் மன்னர் பாண்டித்துறைத் தேவர் ஆவார்.

மதுரையை ஆண்ட நாயக்கர்களின் ஆட்சியில் கர்நாடகாவில் இருந்து படையெடுத்து வந்தவர்கள், படை வீரர்களின் காது, மூக்குகளை அரிந்து சாக்குப்பையில் கட்டி, மதுரை அரண்மனையில் கொண்டு வந்து கொண்டியது. அதன் பிறகு முகவை மன்னர் மதுரை அரசுக்குக் கப்பம் கட்ட வேண்டியதில்லை என்றானது.

ஆரம்ப காலத்தில் சத்திரக்குடிக்கு அருகே போகலூரில்தான் தலைநகர் இருந்தது. சேது சமுத்திரக் காவலர்களாக விளங்கிய இந்த குறுநில மன்னர்கட்கு சேதுபதி என்ற சிறப்புப் பெயர் உண்டு. போகலூரில் இருந்து தலைநகர் இப்போதுள்ள இராமநாதபுரத்திற்கு மாறியது. சடைக்கத் தேவர் என்ற உடையான சேதுபதி (கி.பி. 1605 & 1621) தொடங்கி, தற்போதுள்ள குமரன் சேதுபதி உள்பட முகவைச் சீமைக்கு மன்னராக இருந்துள்ளனர்.

இதில் அரச பதவியில் இருந்தவருக்கு வாரிசு இல்லாது போனால் அவரது வழியில் உள்ள பங்காளிகள், உறவினர்களில் இருந்து ஒருவரை மன்னராக்கும் மரபு இருந்தது. அப்படித்தான் பாலவநத்தம் ஜமீனைச் சேர்ந்த முத்துராமலிங்க சேதுபதி முகவையின் 22வது மன்னராக (1862 & 1873) பொறுப்பேற்றார். அவரது அண்ணன் பொன்னுச்சாமித் தேவர் முதலமைச்சர் ஆனார். இருவருமே தமிழ் மீது அளவற்ற பற்றுடையவர்கள். புலவர்களை ஆதரித்தவர்கள். சுயமாக கவி இயற்றும் திறன் படைத்தவர்கள்.

பொன்னுச்சாமிக்கு 21.03.1867ல் பாண்டித்துரைச் சாமி பிறந்தார். தம்பி முத்து ராமலிங்கத்துக்கு 03.11.1868ல் பாஸ்கரன் பிறந்தார்.

பாண்டித்துரைக்கு 5 வயது இருக்கும்போது தந்தை பொன்னுச்சாமி இறந்து போனார். அதேபோல பாஸ்கரனுக்கு 5 வயதான போது, முத்துராமலிங்க சேதுபதி மரணமுற்றார். பண்டித்துரை கல்விமானாக வளர்ந்தார். அதேபோல பாஸ்கரனும் தமிழ் கல்வியோடு, சென்னையில் தங்கி ஆங்கிலத்திலும் புலமை பெற்றார். தக்க பருவம் வந்ததும், மன்னரின் மகன் அமைச்சர் ஆனார். இருவரும் சகோதரர்கள் உரிமையுடன் பாசத்துடன் ஒன்றி, தமிழ் முகவை மண்ணை ஆண்டனர்.

மதுரையிலும், முகவையிலும் மன்னர்களுக்கு பங்களா இருந்தது. தமிழ்ப் பற்றில் தலைச்சிறந்த பாண்டித்துரை அடிக்கடி மதுரை வருவார். அப்போதுதான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. தமிழறிஞர்கள், ஆன்றோர், சன்றோர்கள் அனைவரும் பாண்டித்துரைக்கு ஆதரவுக்கரம் நீட்டினர். மதுரை வடக்கு வெளி வீதியில் உள்ள (சேதுபதி பள்ளி உள்ள இடம்) பாளையம்பட்டி ஜமீனுக்கு உரியது. அதை விலைக்குப் பெற்று, 14.09.1901 ஞாயிறன்று 4வது தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது.

அதேநாளில் பள்ளிக்கு அருகில் உள்ள கட்டிடங்களில் சேதுபதி செந்தமிழ் கலாச்சாலை, பாண்டியன் புத்தகச் சாலை, நூல் ஆராய்ச்சி சாலை போன்ற அமைப்புகளும் தொடங்கப்பட்டது.

சேதுபதி பள்ளிக்கு மேற்குப் பக்கம் தமிழ்ச் சங்கத்துக்கு சொந்தமான காலியிடம் இருந்தது. அதை அப்போதுள்ள ஆங்கிலேயே அரசு ஆர்ஜிதம் செய்து, அந்த இடத்தில் தலைமை அஞ்சலக கட்ட முயன்றது. தமிழ்ச்சங்க கட்டிடத்தை விலைபேச ஆரம்பித்தனர். அரசை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில், தமிழ்ச்சங்க நிர்வாகம் அரசிடம் ஒப்படைக்க முன்வந்தது.

ஆனால் அன்றைய அரசு, சதுர அடிக்கு ஒரு ரூபாய் விதமே தர முடியும் என்று கூறியது. ஒருவழியாக அரசிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு தமிழ்ச்சங்க கட்டிடத்தை விற்றனர். அந்த இடத்தில்தான் தலைமை அஞ்சலகம் கட்டப்பபட்டது. இன்றும் அதே இடத்தில்தான் அஞ்சலகம் இருக்கிறது. இது கட்டப்பட்ட ஆண்டு 1920 ஆகும். இடத்தை விற்றத் தொகை ரூ.50 ஆயிரமும் மதுரை & இராமநாதபுரம் மையக் கூட்டுறவு வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக போடப்பட்டது.

இது நடந்த சில நாட்களில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டு அரிய பல ஓலைச்சுவடிகள் எரிந்து நாசமாயின. அதன் பிறகே தற்போதுள்ள கட்டிடத்திற்கு தமிழ்ச்சங்கம் மாற்றப்பட்டு, அந்த சங்கம் உள்ள சாலை, தமிழ்ச்சங்கம் சாலை என பெயரானது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader