5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் – ஐஏஎஸ் தேர்வில் வென்று சாதித்த மதுரை மாணவி

Get real time updates directly on you device, subscribe now.

தன்னால் எதுவும் சாதிக்க முடியாது, தனக்குள் திறமை ஒன்றும் இல்லை என புலம்புவர்கள் மத்தியில் கடினமாக முயன்றால் அந்த உலகத்தையும் தமது கைக்குள் அடக்கலாம் என நிரூபித்து வென்றிருக்கிறார், மதுரையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவி பூரண சுந்தரி.

வங்கியில் பணியாற்றிக் கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தொடர்ந்து படித்து வந்தார். 4-வது முறையாக 2019-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய நிலையில்தான் 286-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பூர்ணசுந்தரிக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. இதைத் தங்களது வெற்றியாக தமிழக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மதுரை சிம்மக்கல் மணி நகரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி ஆவுடைதேவி. முருகேசன் மார்க்கெட்டிங் பணி செய்து வரும் நிலையில், இந்த தம்பதியரின் மகள் பூரண சுந்தரி. 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை இழந்த பூரண சுந்தரி, வாழ்க்கையே முடங்கி விட்டது எனச் சோர்ந்து இருக்காமல், தன்னம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தனது பணிகளைத் தொடர ஆரம்பித்தார். படிப்பில் படு சுட்டியான பூரண சுந்தரி, 10ம் வகுப்பில் 471 மதிப்பெண்ணும் 12ம் வகுப்பில் 1092 மதிப்பெண்ணும் பெற்றும் சாதனை படைத்தார். பள்ளிப் படிப்பை முடித்த அவர், கல்லூரியில் ஆங்கில இளங்கலை இலக்கியம் படிப்பையும் முடித்தார்.

வீட்டில் வறுமை சூழ்ந்த நிலையிலும், தந்தை கஷ்டப்பட்டு தன்னை படிக்கவைப்பதை மனதில் நிலையாக நிறுத்திக்கொண்ட அவர், கடினமாகப் படித்து அரசு வேலை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் பூரண சுந்தரியின் மனதில் ஓடிக்கொண்டே இருந்துள்ளது. அவரது தந்தை முருகேசனும் மகள் ஆசைப்பட்டதை போல பூரண சுந்தரியை அரசு வேலையில் அமர்த்தி விட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்துள்ளார். கடந்த 2016 முதல் குரூப் தேர்வு, வங்கி போட்டி தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை எழுதியுள்ளார்.

ஆனால் தான் எழுதிய பல தேர்வுகளில் பூரண சுந்தரி தோல்வி அடைந்த நிலையில், தன்னால் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாமல் 4-வது முறையாகக் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, நேற்று வெளிவந்த தேர்வு முடிவில் 296 இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற வங்கி தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் நிலையில், தற்போது ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

இத்தத் தகவல் கேள்விப்பட்டு பூரண சுந்தரியை நேரிலும் போனிலும் பலர் பாராட்டி வருகிறார்கள். செய்தியாளர்களிடம் பேசியவர், “பார்வை மாற்றுத்திறனாளியாக இருந்துகொண்டு இந்த வெற்றியை அடைய பல சவால்களை சந்தித்தாலும், என் பெற்றோர் எனக்களித்த நம்பிக்கையாலும், எனக்காகக் கஷ்டப்பட்டதாலும் இந்த நிலையை அடைய முடிந்தது. அது மட்டுமல்லாமல் போட்டி தேர்வுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பயின்றபோது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகமும் ஆதரவும் சில நல்ல உள்ளங்கள் செய்த உதவியும் என்னை வெற்றி பெற வைத்துள்ளது. என்னைப் போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

வாழ்த்துகள் பூரண சுந்தரி..!

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader