IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தமிழகத்தில் முதன் முறையாக சில்லறை எண்ணெய் விற்பனைக்கு தடை

0 146

தமிழகத்திலேயே முதன்முறையாக சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்கு தடைவிதித்து உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் பாரம்பரிய முறைப்படி சமையல் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், சில்லறை வியாபாரிகள் அதிகம். ரீபைன்டு எண்ணெய் குறித்த பிரச்சனையால் தற்போது மதுரையில் செக்கு எண்ணெய் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. நகர்ப்புறங்களில் பாத்திரங்களில் எண்ணெய் அளந்து விற்பனை செய்து வருகின்றனர்.

உணவு பாதுகாப்பு விதிகளின்படி லேபிள் ஒட்டிய கேன் மற்றும் பாட்டில்களில் மட்டுமே எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். இந்நிலையில் தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரையில் சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்கு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. இனி நகர்ப்புறங்களில் பாக்கெட், கேன்களை தவிர மற்ற வகையில் எண்ணெய் விற்பனை செய்ய கூடாது.

மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சோமசுந்தரம் கூறியதாவது, உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் 2011ன் படி சில்லறை விலையில் எண்ணெய் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மதுரையில் முழுவீச்சில் அமல்படுத்த உள்ளோம். சில்லறை விற்பனையில் சில கடைகளில் கலப்படம் செய்வது தெரியவந்துள்ளது. ஆனால் அவற்றை கண்டுபிடிப்பது சுலப காரியம் அல்ல. அதனால் தான் சில்லறை எண்ணெய் விற்பனையை தடை செய்கிறோம்.

சில்லறை விற்பனையில் விதிகளை பின்பற்றுவோர் பாதிக்கப்பட மாட்டார்கள். விதிகளை பின்பற்றி பாக்கெட், கேன் விற்பனைக்கு அனைவரும் மாற வேண்டும். அதில் லேபிள் இருக்க வேண்டும். சில்லறை விற்பனையில் மட்டும் மதுரையில் தினம்தோறும் 2லட்சம் லிட்டர் எண்ணெய் விற்பனையாகிறது. அடுத்த கட்டமாக பாக்கெட் விற்பனை கலப்படம் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம் என தெரிவித்தார்.