IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருநங்கைகளுக்கான தனி கிளினிக்! கலக்கும் மதுரை அரசு மருத்துவமனை!!

29


மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனி கிளினிக் அமைய உள்ளது. திருநங்கை கிளினிக் தற்போது சென்னையில் செயல்பட்டு வருகிறது.


சென்னை அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை உள்ளது. அதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய சுகாதாரத் திட்டத்தில் 19 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


மதுரை அவசர சிகிச்சை பிரிவு அருகே இந்த மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கு திருநங்கைகள் கிளினிக் என்று பெயரிட்டுள்ளனர். திருநங்கைகளுக்கான அனைத்து வகை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளும் அளிக்கப்படும். அதற்கான பணிகளை விரைவாக முடிக்க மருத்துவமனை டீன் வனிதா உத்தரவிட்டுள்ளார்.


மதுரை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் திருநங்கை மருத்துவமனைக்கான பொறுப்பாளராக டாக்டர் சங்குமணி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாவது,


இம்மருத்துவமனையில் திருநங்கைகளுக்கென சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், அகச்சுரப்பியல் நிபுணர், பெண்கள் மருத்துவ நிபுணர், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர், மனநல மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை, மனநல ஆலோசனைகள் மற்றும் பிறப்புறுப்பு மாற்ற சிக்சிசை போன்ற சிகிச்சைகள் மருத்துவ குழுவினர்கள் மூலம் வழங்கப்படும் என்றார்.


மருத்துவமனைக்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும். இந்த மாதத்தின் இறுதியில் திருநங்கை கிளினிக் திறக்கப்படும் என்று டாக்டர் சங்குமணி தெரிவித்தார்.