IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சைலண்டாக ஜெயலலிதாவிற்கு சிலை வைத்த செல்லூர் ராஜு – திறப்பிற்காக காத்திருக்கும் அதிமுகவினர்

291


மதுரையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் சிலை திறப்பிற்காக அதிமுகவினர்கள் காத்திருக்கின்றனர்.

மதுரை கே.கே.நகர் ரவுண்டானாவில் கடந்த 3 மாதகாலமாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவச்சிலை திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. சிலை திறப்பிற்கு அரசின் உத்தரவிற்காக அதிமுகவினர் காத்திருக்கின்றனர். இதற்கு எதிர்கட்சி தரப்பிலும் யாரும் எதிர்ப்புகள் தெரிவிக்கவில்லை.

2013 ஜனவரியில் இந்தியா முழுவதும் பொது இடங்களில் சிலை வைக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் பொதுஇடங்களில் சிலைகள் மற்றும் கட்டுமானங்களை மேற்கொள்ள மாநில அரசு, யூனியன் பிரதேசங்கள் அனுமதி கொடுக்க கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதன்படி, தற்போது பொது இடங்களில் தலைவர்களின் சிலைகள் வைக்க அரசு அனுமதி வழங்குவதில்லை. அதனால்தான் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை பொது இடங்களில் வைக்க திமுகவினர் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் மதுரை கே.கே.நகர் ரவுண்டானாவில் ஏற்கனவே எம்.ஜி.ஆர். சிலை இருந்த இடத்தின் அருகே ரகசியமாக ஜெயலலிதாவின் சிலையையும் அதிமுகவினர் அமைத்துள்ளனர். 3 மாதத்திற்கு முன்பு அதிமுகவினர் ரவுண்டானா முழுவதையும் சுற்றி இரும்புத் தடுப்புகளை அமைத்து எம்.ஜி.ஆரின் சிலை பராமரிப்பு என்று கூறி ஜெயலலிதாவின் சிலையை நிறுவும் பணியை தொடங்கியுள்ளனர்.

இதற்கு, மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம், காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி கேட்டதற்கு எம்.ஜி.ஆரின் சிலை மற்றும் புனரமைப்பதாக கூறினார். அதன்பிறகு ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்படுவது தெரிந்தபிறகு அதிமுகவினர் மௌனம் சாதிக்கின்றனர்.

திமுக போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அதிமுகவினருக்கு மறைமுகமாக ஆதரவாக இருப்பதாக குற்றம் கூறப்படுகிறது. அமைச்சர் செல்லூர் ராஜு இச்சிலையை அமைப்பதால் அதிகாரிகளும் மௌனம் காக்கின்றனர். தற்போது இந்த சிலை திறப்பிற்கு தயாராக உள்ளது.

மறைமுகமாக சிலை அமைக்கும் பணியால் ரவுண்டானாவை சுற்றி எதிர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் போக்குவரத்து ஸ்தமிப்பதும் தொடர்கிறது. வரும் டிசம்பர் 5 ஜெயலலிதாவின் நினைவு தினம் என்பதால் அன்று சிலை திறக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அன்றே அனுமதி கிடைத்தால் செல்லூர் ராஜு திறந்து வைப்பார். தாமதமானால் முதல்வர் கே.பழனிச்சாமியை அழைத்து திறந்து வைக்க ஏற்பாடு செய்வோம் அதிமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது.
#SellurRaju #Madurai #JayalalithaStatue #KKNagar #In4Net