IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரை காளவாசல் மேம்பாலம் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு

Get real time updates directly on you device, subscribe now.

மதுரை காளவாசல் சந்திப்பில் கட்டப்பட்டு வந்த உயர்மட்டப் பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.

மதுரை காளவாசல் சந்திப்பில் நிகழும் போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், இங்கு உயர்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் இச்சந்திப்பில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காளவாசல் உயர்மட்டப் பாலத்திற்கு ரூ.54.7 கோடி மதிப்பீட்டில், சுமார் 750 மீட்டர் நீளத்தில் 33 மீட்டர் கொண்ட 10 கண்களோடு அமைக்க அடிக்கல் நாட்டினார்.

கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழகத்திலேயே முதல் முறையாக ஆறு வழி தடை சாலை அமைக்கப்பட்ட பெருமைக்குரிய வழித்தடங்களில் காளவாசல் பகுதியும் ஒன்றாகும். இந்த சந்திப்பிலிருந்து தேனி, போடி மற்றும் கேரள மாநிலத்திற்கு பேருந்துகள் செல்கின்றன.

மேலும் காளவாசல் சந்திப்பிலிருந்து ஏறக்குறைய 6 கி.மீ. தொலைவில் நான்கு வழிச்சாலை அமைந்திருப்பதால் பல நேரங்களில் ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் செல்ல வேண்டிய பேருந்துகள் அனைத்தும் இந்த சாலையையே அதிகம் பயன்படுத்தி வருகின்றன. ஆகையால் போக்குவரத்து நெருக்கடி இப்பகுதியில் மேலும் அதிகரித்தே வருகிறது.

காளவாசல், பழங்காநத்தத்தை இணைக்கும் இந்த சாலை கன்னியாகுமரி-வாரணாசி தேசிய நெடுஞ்சாலையாக இருந்தது. இடையில் அமைக்கப்பட்ட நான்கு வழிச் சாலை காரணமாக இது மாநில நெடுஞ்சாலையின் பராமரிப்பிற்கு விடப்பட்டது. அதுமட்டுமன்றி சர்வீஸ் ரோடுகளோடு இருந்த மதுரையின் முதல் நெடுஞ்சாலையும் இதுதான். தொடக்கத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியான சாலையாக காளவாசல் சாலை பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பணி தொடங்கி 18 மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், 23 மாதங்களுக்குப் பிறகு காளவாசல் உயர்மட்டப்பாலத்தின் பணி நிறைவடைந்துள்ளது. போக்குவரத்திற்காக இன்று காலை 9 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்தப் பாலத்தின் மூலமாக இந்தப் பகுதியில் இதுவரை நிலவி வந்த கடுமையான போக்குவரத்து நெருக்கடி பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader