IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தொல்குடிகள் வாழ்ந்த கருங்காலக்குடி

Get real time updates directly on you device, subscribe now.


குகைகளுக்குள் கொடையாளர்கள் செதுக்கச் செய்த கல் படுக்கைகளில் துறவியர் கண்ணயர்கிறார்கள். பசிக்கும்போது அடிவாரக் குடியிருப்புகளில் கையேந்தி உணவிரந்து நின்றவாறு புசிக்கிறார்கள். பள்ளிகளையொட்டி நீர் நிறைந்திருக்கும் சுனைகளில் கையால் மொண்டு பருகுகிறார்கள்.


கள்ளை வெறுக்கிறார்கள். புலாலை மறுக்கிறார்கள். லோச்சன நோன்பிருந்து கண்ணீர் சிந்த மயிர்க்கால் பிடுங்கித் தலையை மழித்துக் கொள்கிறார்கள். சூத்திரச் சாதியினர்க்குச் கல்வி உணவு மருந்து என அவர்கள் அளிக்கும் கொடைக்கு அளவில்லை. எங்கிருந்தெல்லாமோ அவர்களைத் தேடி வந்து சித்தாந்தம் கேட்பவர்கள் ஏராளம். இருட்டில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கிடைத்த பேரானந்தம்.


மதுரை உலகின் தொல் நகரம். மதுரையின் தொன்மையை நிறுவும் சான்றுகளாக பாறை ஓவியங்களும், தமிழிக் கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும், வாய்மொழி வழக்காறுகளும், பிறநாட்டறிஞர் நூல்களும் உள்ளன.


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் வாழ்ந்த தொல்குடிகள் தாங்கள் கண்டவற்றை பாறைகளில் ஓவியமாக தீட்டி உள்ளனர். மனிதன் அன்றிலிருந்து இன்றுவரை தன்னுடைய பார்வையை பதிவு செய்வதிலும், பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாய் இருக்கிறான் என்பதை இதிலிருந்து அறியலாம்.


நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழில் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ள கருங்காலக்குடி மலையைக் காண பசுமைநடைக் குழுவோடு சென்ற அனுபவப் பதிவு.


அதிகாலை எழுந்து மாட்டுத்தாவணி பேருந்துநிலைய வாசலுக்கெதிரில் கூடினோம். அங்கிருந்து ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்தில் கருங்காலக்குடி சென்றோம். மேலூர் தாண்டி கொட்டாம்பட்டி செல்லும் வழியில் கருங்காலக்குடி இருக்கிறது. கருங்காலக்குடி மந்தையில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து மெல்ல நடந்தோம்.


கருங்காலக்குடி மிக அழகான ஊர். இவ்வூரில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். மக்களிடம் பாதை கேட்டு மலையை நோக்கி நடந்தோம். ஓட்டு வீடுகளும், திண்ணைகளும் மனதை ஈர்த்தது.


வலைப்பதிவர் தமிழ்ச்செல்வன் அவர்களோடு சமீபத்திய வாசிப்பு, பதிவு குறித்து உரையாடிக்கொண்டே நடந்தேன். வழியிலுள்ள சிறுசிறு குன்றுகளும், வறண்ட வயல்வெளிகளையும் பார்த்துக்கொண்டே சென்றோம். சிறுகுன்றின் அடிவாரத்திலுள்ள குடிநீர் ஊருணியை மிகவும் சுத்தமாக இந்த ஊர்மக்கள் பாதுகாத்து வருகின்றனர். பாராட்டிற்குரிய விசயம்.


மழை வருவது போல மேகம் சூழ்ந்திருந்ததால் சூழல் மிகவும் ரம்மியமாகயிருந்தது. தொல்குடிகள், சமணத்துறவிகள் வாழ்ந்த குன்றிற்கு சென்றோம். குகைத்தளத்தினடியில் படுக்கைகளும், மருந்து அரைப்பதற்கு ஏற்ப குழிகளைச் செதுக்கியிருந்தனர். குகை முகப்பில் தமிழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதற்கு அருகிலுள்ள குன்றில் சமண முனிவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்தோம்.


சாந்தலிங்கம் அய்யா கருங்காலக்குடி குறித்த தகவல்களை கூறினார். கருங்காலக்குடி பாண்டிய நாட்டிற்கும் சோழநாட்டிற்குமான பெருவழிப்பாதையில் அமைந்துள்ளது. ஏழைய்ஊர் அரிதின் பளி என்ற தமிழிக் கல்வெட்டு இங்குள்ள குகை முகப்பில் காணப்படுகிறது.


ஏழையூர் என்பது இடையூர் என்பதன் திரிபாக இருக்கலாமென்று ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் கருதுகிறார்கள். சிறப்பு ழகரம் இங்குள்ள கல்வெட்டில் உள்ளது. அரிதின் என்ற முனிவர்க்கு படுக்கைகள் செதுக்கித்தந்ததை குறிக்கிறது.


வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் குன்றின் மேலே உள்ள குகையில் காணப்படுகிறது. கிடாரிப்பட்டி, சிவகங்கை திருமலை போன்ற இடங்களிலும் இதுபோன்ற பாறை ஓவியங்கள் காணப்படும் தொல்குடிகள் வாழ்ந்த பகுதிகளில் போய் சமணத்துறவிகள் தங்கியுள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader