IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பாரம்பரியம் மாறாத மதுரை பாண்டியன் அப்பளம்

Get real time updates directly on you device, subscribe now.

மதுரை என்றால் பாரம்பரியம் என்பது மட்டுமின்றி தொழில் வளம் மிக்க ஊர். இங்கு இல்லாத தொழிலே இல்லை எனலாம். இங்குள்ள பெரும்பாலான தெருக்கள் தொழிற்சாலைகளால் பின்னி பிணைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் முதல் உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் வரை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்குள்ள சில தெருக்களுக்கு குட்டி ஜப்பான் என்ற பெயரும் உண்டு.

அந்த அளவில் சிறு தொழில்கள் வீடுகளில் இன்றும் நடைபெற்று வருகிறது. பாண்டிய மன்னன் ஆண்ட அக்காலத்திலேயே அதிக வர்த்தகம் நிகழ்ந்த மதுரையில் தனது பாரம்பரியம் மாறாது உணவு பொருளை இன்றளவும் உற்பத்தி செய்வரும் நிறுவனங்களில் மதுரை பாண்டியன் அப்பளமும் ஒன்று.

எந்தவித பண்டிகையானாலும் சரி அங்கு நடைபெறும் விருந்தில் அப்பளம் இல்லாமல் இருக்காது. அப்படிப்பட்ட நமது உணவில் பாரம்பரியமாக கலந்திருக்கும் அப்பளத் தொழில் கேரளாவிலிருந்து வந்தது. மதுரையில் முதன் முதலாக ஒரு அப்பளக் கம்பெனி மட்டுமே இருந்தது. அதில் என் தந்தை என்.கணபதியா பிள்ளை பணியாற்றி 1951ஆம் ஆண்டு துவங்கப்பட்டதே மதுரை பாண்டியன் அப்பளம். எனது தந்தைக்கு பிறகு 1997ஆம் ஆண்டு இதன் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு இன்றும் எனது தந்தையின் பழமை மாறாது அப்பளம் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றேன் என்றார் ஜி.திருமுருகன்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்கள் எல்லாம் என் தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் துவங்கப்பட்டதே. அந்த காலத்தில் அப்பளம் தயாரிப்பதிலும், விற்பதிலும் அதிகக் கட்டுப்பாடுகள் இருந்தது. இன்றைக்கு அப்பளத் தயாரிப்பில் கட்டுபாடுகள் இல்லை. கால சூழ்நிலைக்கு ஏற்ப நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன.

அன்றைக்கு எனக்கு விவரம் தெரிய ஒரு கிலோ அப்பளம் ரூ.11க்கு விற்கப்பட்டது. அன்றைய நிலைக்கு அது நல்ல மார்ஜின், நல்லத் தொழிலாக இருந்தது. ஆனால் இன்றைக்கு லாபமா என்றால் புதிதாக துவங்குபவர்களுக்கு நிச்சயம் இது சவாலான தொழில்தான். அன்றைய காலகட்டத்தை விட தற்போதைய தொழில்நுட்ப டெக்னாலஜி வசதியால் தொழில் விரிவடைந்துள்ளது.

பெயருக்கான காரணம்:
எங்களது நிறுவனத்தின் பெயர் மதுரை என்று வைத்தபோது முதலில் இந்த பெயரை மாற்றுங்கள் என்று பலரும் என்னிடம் கூறினர். ஆனால் மதுரையின் மீது கொண்ட பற்றின் காரணமாகவும், பாண்டிய மன்னரின் பெயர் இணைவதால் அதனை மாற்றம் செய்யாது வெளிநாட்டுகளுக்கு மதுரை பாண்டியன் என்ற பெயரில் ஏற்றுமதி செய்வது எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மதுரை பாண்டியன் என்பது எனது கடைசி தம்பியின் பெயர். அவர் இறந்த காரணத்தினால் எனது தந்தை இப்பெயரை வைத்தார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

மதுரையில் அப்பளத் தொழில்:
மதுரையில் இத்தொழில் சிந்தாமணி, ஜெய்ஹிந்த்புரம், வில்லாபுரம் ஆகிய பகுதியில்தான் அதிகம் நடைபெறுகிறது. இத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அரசு அங்கீகாரம் பெற்று 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கும்.

பிரச்சனை:
இந்த தொழில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை கூலித் தொழிலாளர்கள்தான். மற்ற தொழில் போல் இல்லாது இத்தொழிலுக்கு முன் தொகை (அட்வான்ஸ்) கொடுக்க வேண்டும். தொகையை வாங்கிய பின் அவர்கள் தொடர்ந்து வருவார்களா உன்பது கேள்வி குறிதான். அப்பளத் தொழிலில் ஈடுபடும் பெரும்பாலனோர் தற்காலிக தொழிலாளர்கள் மட்டுமே. என்னிடம் பல ஆண்டுகளாக பணி புரியும் தொழிலாளர்களும் உள்ளனர். திருமணம், திருவிழா போன்ற காலங்களில் அப்பளம் விற்பனை அதிகரிக்கும். இதுவே மழைக் காலங்களில் அப்பளம் தயாரிப்பு சில நேரங்களில் 75 சதவீதம் சரிந்துள்ளது.

உற்பத்தியின், விலை:
ஒரு மாதத்திற்கு எங்களால் 100 டன் அப்பளம் உற்பத்தி செய்ய முடியும். விற்பனையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப மாதம் குறைந்த பட்சம் 35 முதல் 40 டன் அப்பளம் உற்பத்தி செய்கின்றோம். மதுரையில் மட்டும் குறைந்த பட்சம் வாரம் ரூ.300 கோடி மதிப்பில் அப்பளத் தொழிலில் வர்த்தகம் நடைபெறுகின்றது. இன்றைய நிலவரப்படி வியாபாரிகளுக்கு ஒரு கிலோ அப்பளம் ரூ.140 வரை கொடுக்கின்றோம். அப்பளப் பூ, சோவி அப்பளம், பாய் அப்பளம் செய்கின்றோம்.

கூட்டுப் பெருங்காயம், மசாலா:
தமிழ் புத்தாண்டு முதல் முறையாக மதுரை பாண்டியன் கூட்டுப் பெருங்காயத்தை அறிமுகம் செய்துள்ளோம். பொதுவாக அப்பளம் தயாரிக்க அதிகமாக பெருங்காயம் தேவைப்படும். பொதுவாக பெருங்காயம் வெளியிலிருந்துதான் வாங்கின்றோம். ஏன் இதை நாமே உற்பத்தி செய்யக் கூடாது என்ற தேவையின் அடிப்படையில் புதிதாக கூட்டுப் பெருங்காயத்தை அறிமுகம் செய்துள்ளோம். முதன் முதலாக 50 கிராமுடன் களமிறக்கியுள்ளோம்.

இதேபோன்று பாரம்பரியம் மிக்க செட்டிநாடு சுவைக்கு ஈடான வகையில் அனைத்து விதமான மசாலா பொடிகள் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதில் 100 சதவீதம் கெமிக்கல் இல்லாது துயூமையான மசாலாக்கள் குறைந்த பட்சம் 100 கிராம் முதல் 1 கிலோ பேக்கிங் வரை செய்யவுள்ளோம்.

புதிதாக இத்தொழில் நுழைபவர்களுக்கு:
இத்துறையில் புதிதாக நுழைபவர்களுக்கு முதலில் நாங்களே முழுமையான பயிற்சியை வழங்குகின்றோம். இதுவரை 10,000க்கும் மேல் அப்பளம் தொழில் குறித்து பயிற்சி அளித்துள்ளோம். ஆறு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இத்தொழில் குறித்து நேரடி பயிற்சி வழங்கியுள்ளோம். நலிவுற்ற அப்பளம் நிறுவனங்களை நாங்கள் நேரடியாக எடுத்து நடத்துகின்றோம்.

எங்களின் தேவை:
இத்தொழிலுக்கு இன்றை தேவை உளுந்து விலை சீராக நிர்ணயம் மட்டுமே. ஆனால் அப்படியின்றி விலை அடிக்கடி ஏறி, இறங்குகின்றன். இந்த விலை ஏற்றத்தை அப்பள விற்பனையில் எங்களால் ஏற்ற இயலாது. எனவே இதனை தவிரிக்க அரசு உளுந்து விலையை ஒரே சீராக எங்களுக்கு வழங்க வேண்டும்.

குடும்பத்துடன்:
தமிழ்நாடு வடகம் மோர் வத்தல் அப்பளம் தயாரிப்பாளர் சங்கத்தில் மாநில செயலாளர், தமிழ்நாடு அனைத்து வியாராச் சங்கத்தில் உறுப்பினர், வெள்ளாளர் முதலியார் வர்த்தகச் சங்கத்தின் துணைத் தலைவர், மதுரை எக்கோ கிளப் லயன் சங்கத்தின் தலைவர் என பல்வேறு பொறுப்பிலிருக்கும் எனக்கு குடும்பத்துடன் சேர்ந்திருக்கும் நேரம் என்பது மிகக் குறைவானதுதான். இதற்கு ஏற்றார் போன்று எனது மனைவி பக்க பலமாக இருக்கின்றார்.

எனது மனைவி எனக்கு ஒரு சிறந்த தோழி. தினசரி இரவு நான் எனது மனைவி (மணிமேகலை மாநகராட்சி பள்ளி ஆசிரியை), மகன் (12ம் வகுப்பு) ஒன்றாக அமர்ந்து ஒரு மணி நேரம் அன்றைய பொழுதில் நிகழ்ந்தது குறித்து கலந்துரையாடுவோம். இதனை தினசரி வழக்கத்தில் வைத்துள்ளோம். முடிந்த வரை ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ச்சிகளை தவிரித்து குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பேன்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader