மனசு போல வாழ்க்கை – நம்பிக்கையே மருந்து!

Get real time updates directly on you device, subscribe now.

தோல்விகளுக்கு நன்றி! தோல்விகள் நமக்கான பாடங்கள் என்று தெரிந்தும் தோல்விகளைப் பற்றி நாம் அதிகம் நினைப்பதில்லை. வெற்றியைக் கொண்டாட நினைக்கிறோம். தோல்வியை மறக்க நினைக்கிறோம். தோல்வி தரும் வலிதான் காரணம். சரியும் தவறும் கலந்ததுதான் வாழ்க்கை. வெற்றியும் தோல்வியும் இணைந்திருப்பது தான் இயல்பு. ஒன்றை மட்டும் கொண்டவர்கள் யாரும் இல்லை. நம் தெய்வங்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல.

வாழ்க்கையில் வெற்றியை மட்டும் தனியாகப் பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடி விடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகி விட்டன. இதைப் படி, இதைக் குடி, இதைச் செய், இதை வாங்கு, இங்கு செல், இவரிடம் போ என்றெல்லாம் பிரித்துப் பிரித்துச் சந்தையைப் பிடித்துக் கொண்டதன் காரணம் நமக்கு வெற்றியின் மீது இருக்கிற வெறி தான்.

படிக்காதவர்கள், நல்ல மதிப்பெண்கள் வாங்காதவர்கள், நல்ல வேலை கிடைக்காதவர்கள், பணம் சம்பாதிக்காதவர்கள், சொத்து சேர்க்காதவர்கள் இவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் என்று நம்ப ஆரம்பித்து விட்டோம். அப்படி என்றால் படிப்பு, வேலை, சொத்து சேர்த்தவர்கள் முழுமையான வெற்றியாளர்களா? பின் ஏன் இவர்களில் பலரிடம் இத்தனை வியாதிகள், விவாகரத்துகள், விவகாரங்கள்? இவையெல்லாம் தோல்விகள் இல்லையா?

யோசித்துப் பார்த்தால், வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்ந்தவை. வாழ்க்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி. அது தவறினாலோ அல்லது தாமதமானாலோ அதைத் தோல்வி என்று சொல்கிறோம். அவ்வளவு தான். எந்தத் தோல்வியும் பெரிதல்ல. அதைப் பூதாகரமாக ஆக்கி விடுவது நம் எண்ணங்கள் தான். அந்தந்தப் பருவத்தில் பெரிதாகத் தெரியும் தோல்விகள் காலமும் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும். உங்களுக்கு முன்பாக மலையேறுபவர் தடுக்கி விழும் போது, “அங்கு வழுக்கல் அதிகம். பார்த்துப் போ!” என்று சொல்லாமல் சொல்கிறார். உங்கள் விபத்தைத் தடுக்கிறார்.

உங்களுக்குக் கிடைத்த அனைத்துத் தோல்விகளுக்கும் நன்றி செலுத்துங்கள். உங்கள் தோல்விக்குக் காரணமான அனைவரையும் மனதாரப் பாராட்டி நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு முன்பாக சென்று தோற்றவர்கள் அனைவரையும் நினைவு கூறுங்கள். வெற்றியைத் தலைக்கு மேலே எடுத்துக் கொள்ள வேண்டாம். தோல்வியை மனதுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டாம். இரவும் பகலும் போல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொள்வோம்!

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More