IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கீழடி… ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் கிடைத்திருக்கும் பெருமை! ஆய்வுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் பேட்டி!!

20

ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் கிடைத்திருக்கும் பெருமையாகவே கீழடியை கருதுகிறேன் என்று கீழடியை நேரில் ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


கீழடியில் அகழாய்வுகள் நடந்து வரும் இடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செப். 27) நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது இதுவரை கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்கள் மற்றும் கீழடியின் சிறப்புகள் குறித்து அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். அகழாய்வில் கிடைத்த பொருட்களைப் பார்த்து பிரமித்த மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு பொருட்கள் பற்றியும் ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்.


அதன்பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில், தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் கீழடியில் நிற்பது பெருமையாக இருக்கிறது. இது எனக்கு மட்டும் கிடைத்துள்ள பெருமை அல்ல; ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் கிடைத்திருக்கும் பெருமையாக இந்த கீழடி இருக்கிறது. இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அரசு நிர்வாகம், மத்திய தொல்லியல் துறை, தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் திமுக சார்பில் தெரிவிக்கிறேன், என்றார்.


அகழ்வாய்வு குறித்து ஸ்டாலின் கூறுகையில், எப்படி இந்த முயற்சி இப்போது வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறதோ, அதுபோலவே தொடர்ந்து பணிகள் நடைபெற வேண்டும். அதோடு இனி அதிக அளவு கவனம் செலுத்தி அகழாய்வில் மத்திய, மாநில அரசுகள் முழுமையாக ஈடுபட வேண்டும். கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழர்களின் நாகரிகம் எப்படி எல்லாம் மேன்மையாக இருந்திருக்கிறது என்பதை, இங்கு கிடைத்திருக்கும் பானை ஓடுகள் மூலமாகவும், அவற்றில் இருந்த எழுத்துகள், தங்கம் – இரும்புப் பொருட்கள் மூலமாகவும் அறிய முடிகிறது, என்றார்.


சர்வதேச அருங்காட்சியகம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த ஸ்டாலின், கீழடிக்குப் பிறகு உத்தரபிரதேசத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட சனோவ்லி தற்போது பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் குஜராத் மாநிலம் வாட் பகுதியும் பாதுகாக்கப்பட்டு சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல கீழடியும் பாதுகாக்கப்பட வேண்டும். கீழடியிலும், அதேப் போன்றதொரு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், என்றார்.

#tamilnadu #kizhadi #stalin #greatness