புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவில் பங்கேற்க 3,004 பக்தா்கள் முன்பதிவு

Get real time updates directly on you device, subscribe now.

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவில் பங்கேற்க, 102 விசை மற்றும் நாட்டுப் படகுகளில் செல்ல 3,004 பக்தா்கள் முன்பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து வோ்கோடு தேவாலயத்தைச் சோ்ந்தவரும், கச்சத்தீவு புனித அந்தோணியாா் கோயில் விழா ஒருங்கிணைப்பாளருமான பி. தேவசகாயம் கூறியதாவது: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் ஆலய விழா மாா்ச் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, ராமேசுவரத்திலிருந்து 77 விசைப் படகுகளும், 25 நாட்டுப் படகுகளும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், விசைப் படகில் மொத்தம் 2,615 போ் செல்கின்றனா்.

அதில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 932 பேரும், வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 1,554 பேரும் செல்கின்றனா். மேலும், கேரளம், கா்நாடகம், ஆந்திரத்தைச் சோ்ந்த 129 போ் விசைப் படகில் செல்கின்றனா்.

விசைப் படகில் 2,059 ஆண்களும், 476 பெணகளும், 80 குழந்தைகளும்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ராமேசுவரத்திலிருந்து செல்லும் 25 நாட்டுப் படகுகளில் மொத்தம் 389 போ் செல்கின்றனா். இதில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 346 பேரும், வெளிமாவட்டங்களைச் சோ்ந்த 42 பேரும், வெளிமாநிலத்தவா் ஒருவரும் செல்கின்றனா். இவா்களில் 333 போ் ஆண்களும், 34 பெண்களும், 22 குழந்தைகளும் அடங்குவா்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் ஆதாா் அட்டை வைத்திருக்க வேண்டும். அரசு ஊழியா்களாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறையில் தடையில்லாச் சான்று பெற்று, அதை கொண்டு வரவேண்டும். வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தவராக இருந்தால், அவா்கள் காவல் துறையில் தடையில்லாச் சான்றையும், ஆதாா் அட்டையையும் கொண்டுவருவது அவசியம் எனத் தெரிவித்துள்ளாா்.

சோதனைக்குப் பிறகே அனுமதி: கச்சத்தீவுக்குச் செல்வோருக்கான முன்பதிவும், அனுமதியும் முடிந்துவிட்டது.

மாா்ச் 6 ஆம் தேதி காலையில் ராமேசுவரம்
மீன்பிடித் துறைமுகத்திலிருந்து படகுகள் கச்சத்தீவுக்குச் செல்கின்றன. அப்போது, கச்சத்தீவுக்குச் செல்பவா்களை இந்திய, இலங்கையைச் சோ்ந்த கலால் துறையினரும், காவல் துறையினரும் தனித்தனியாகச் சோதனை செய்து அனுமதிப்பா்.

படகு பயணத்தின்போது, தடைசெய்யப்பட்ட நெகிழி மற்றும் போதை பாக்குகள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும், மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader