IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கருணாநிதியின் அரசியல் வெற்றி பயணம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்திய அரசியலில் இயங்கிக் கொண்டிருந்த மூத்த தலைவர் என்று வரலாறு சொல்லும். இந்த ஒற்றை வரி இவரைப் பற்றித் தெரியப்படுத்தாது. ஆனால் தெரியாதவர்க்கும் புரிய வைக்கும். 14 வயதிலேயே சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் மூலம் அரசியல் என்னும் போராட்டக்களத்தில் பிஞ்சிலேயே பழுத்தவரானார் கலைஞர்.

மாணவர் இயக்கத்தில் சேர்ந்து சமூக கருத்துகளை வீதி நாடகங்கள், பாடல்கள் வழியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கத் தொடங்கியவர் தன் எழுத்தின் முழு வீச்சை திரைக்கதைகளில் ஏற்றி பட்டி தொட்டியெல்லாம் தீயென பரவவிட்டார். அதுவும் தன் இருபதாவது வயதில். அந்த வயதில் அப்படியொரு ஆற்றலை அதுவும் திரைத்துறையில் நம்மால் யோசித்துக் கூடப் பார்க்க முடியாது. இவரது வசனங்களின் வீச்சு தாளாமல் பல திரைப்படங்கள் தணிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றன.

திரைத்துறைப் புகழ் ஒருபுறமும் அரசியல் வட்டாரத்தில் அங்கீகாரம் ஒருபுறமும் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் அவரை பயணிக்க வைத்தது. பெரியாரின் திராவிடச் சிந்தனைகள் இவரது எழுத்துகள் மூலமாக பெரும் பரப்பைக் கண்டன.

தமிழ் இலக்கியத்திலும் இவரது பணி முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழ் இலக்கியத்தின் கரை கண்டவர் கலைஞர், வள்ளுவத்திற்கும் தொல்காப்பியத்திற்கும் உரை கண்டவர் கலைஞர். இவரே இன்றைய தமிழ் என்றால் அது மிகையல்ல. இந்தியை திணிப்போர் மீது இவருக்கு கொஞ்ச நஞ்ச பகையல்ல. நெஞ்சமெல்லாம் தமிழ் இருந்ததால் இவர் கொஞ்சமும் அஞ்சாமல் நடுவன் அரசை எதிர்ந்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வஞ்சிறை கண்டார். இன்றளவும் இவர் தமிழினக் காவலர் என அன்றிலிருந்து போற்றப்பட்டார். இதன் பின் அரசியல் இவரை அரவணைக்கத் தொடங்கியது.

Your Digital PR


திராவிடர் இயக்கத்திலும் பின்னர் அண்ணாவைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்திலும் பெரும் பொறுப்புகளை வகித்தார். ஒரு இயக்கத்தில் பொறுப்பில் இருப்பது பெரிய விஷயமல்ல. அந்த இயக்கத் தலைவராக இருந்த அறிஞர் அண்ணாவின் தம்பி என அனைவரும் ஒருவரை ஏற்றுக் கொள்வது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அப்படி ஒரு இடம் கிடைக்கப் பெற்றவர் நிச்சயம் பெரும் ஆளுமை நிறைந்தவராகவே இருப்பார் என்பதில் சந்தேகத்திற்கு சற்றும் இடமில்லாமல் வாய்க்கப் பெற்றவர் கலைஞர்.

இன்றைய காலகட்டத்தில் அரசியல் தலைமை என்பது எதோ கடைத் தேங்காய் வழிப்பிள்ளையாருக்கு கிடைக்கும் மதிப்புத் தெரியாத பொருளாக இருக்கும் நிலையில், இவர் காலகட்டத்தில் பல நிலைகளைக் கடந்து அடி மேல் அடி வைத்து அடுத்த அடுத்த நிலைகளுக்கு தன்னைத் தகுதியானவன் என நிரூபித்தவாரு அடுத்த பத்து வருடங்களில் சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்தவர் அதற்கடுத்த பத்து வருடங்களில் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். இது எதோ குருட்டு அதிஷ்டத்தில் வந்த பதவி அல்ல. அவரது திறமைக்கும், அறிவுக்கும் கிடைத்த வெகுமதி.

இவரது ஆட்சியில் சமூக நீதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சாதிப்பிரிவுகள் நிறைந்த தமிழ் சமூகத்தில் சாதிகளின் அடக்குமுறை ஒழிய திராவிடக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டார். கடவுள் மறுப்பு கொள்கை திராவிட இயக்கத்தின் முக்கிய கோட்பாடு. ஆனால் மதங்களின் மரியாதையை குறையாதவாறு அந்த கோட்பாட்டை சமூக நலன் சிறக்க நடைமுறை படுத்தினார். சமூகத்தில் மூன்றாம் பாலினத்திற்கு சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்தார்.

திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று கடந்த நாற்பது ஆண்டுகளாக அதை தமிழகத்தின் பெரும் கட்சியாக நடத்தி வந்திருக்கிறார் கலைஞர். இந்தியாவின் பல மாநிலங்களில் தேசிய கட்சிகள் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் கலைஞர் இருக்கும் இன்றைய தேதி வரை எந்த ஒரு தேசிய கட்சியினாலும் ஊடுருவ முடியாத ஒரு வலிமையான கோட்டையாக தமிழகம் இருக்கிறதென்றால் அது கலைஞராலும் அவரது திராவிட இயக்கத்தாலும் தான் என்பது நிதர்சனம். அது இவரால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒன்று.

தனிப்பெரும் ஆளுமை கலைஞர். தமிழுக்குக் கிடைத்த தவப் புதல்வர் கலைஞர். சொற்களின் களஞ்சியம் கலைஞர். இலக்கியத்தின் இளவல் கலைஞர். அரசியல் மேதை கலைஞர். தமிழ்குடியின் மூத்தவர் கலைஞர். அவரது மான்பு பெரிது. அவரது இடம் நிரப்புவதற்கு அரிது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader