IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கல்வித் தந்தை கருமுத்து தியாகராசர் செட்டியாரின் வாழ்க்கைப் பயணம்

Get real time updates directly on you device, subscribe now.

மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவிய கருமுத்து தியாகராஜன் செட்டியார் ஜுன் 6, 1893 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் முத்துக்கருப்பன் செட்டியாருக்கு பத்தாவது பிள்ளையாக பிறந்தார். கடைக்குட்டியும் இவர் தான்.

கல்வியும் தொழிலும்

இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் தனது கல்வியை முடித்து பின்னர், இந்தியா திரும்பிய தியாகராஜன் 1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார்.

மேலும் இவருடைய குடும்பம் இலங்கையில் துணி வாணிகத்தில் ஈடுபட்டிருந்தது. இவருடைய அண்ணன் அருணாசலம் செட்டியார் துணியின் தரம் அறிவதில் ஆற்றல் பெற்றிருந்தார்.

இவருடைய மற்றொரு அண்ணன் இராமநாதன் செட்டியார் மான்செஸ்டர் ஆலைகளின் நடைமுறையை பற்றித் தெரிந்து கொள்வதற்காக 1907ல் இங்கிலாந்துக்குச் சென்றார்.

அன்றைய காலகட்டத்தில் மேலைநாடுகளுக்கு முதலில் சென்றவர் இராமநாதன் செட்டியாரே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பரம்பரையில் வந்த தியாகராசச் செட்டியார் நூல் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு இந்தியாவின் மாபெரும் தொழில் மேதைகளுள் ஒருவரானார்.

சிறந்த பத்திரிக்கையாளர்

இலங்கையில் படித்த சமயத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தினார்.

இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்திய பெருமை இவரையே சேரும்.

மேலும் தமிழ்நாடு வந்த பின்பு, தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்ததன் காரணமாகத் தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழைப் பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.

தமிழ்நாட்டில் இந்தியைத் தேசிய மொழியாக ஏற்கும் கொள்கைகளை எதிர்த்தவர்களுள் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

இதற்காக இளம் வயது முதல் தாம் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிக் கொண்டார்.

சோமசுந்தர பாரதியாரும், பெரியார் ஈ.வெ.ராவும் இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திய போது அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்.

இவர் இலங்கை கொழும்பு மாநகரிலிருந்து வந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஆசிரியப் பிரிவில் இளமையில் பணிபுரிந்து வந்திருந்த போதிலும் ஆங்கிலம் கலவாது தமிழில் பேசியும் எழுதி வந்தார்.

இராம‌நாத‌புர‌ம் சேதுப‌தி,ப‌ண்டித‌ ம‌ணி,பேராசிரிய‌ர் இர‌த்தின‌ச‌பாப‌தி போன்ற‌ ப‌ல‌ருடைய‌ நூல் நிலைய‌ங‌க‌ளை விலைக்கு வாங்கிக் கொண்டார்.
ஏராள‌மான‌ புல‌வ‌ர்க‌ளுட‌ன் நெருங்கிய‌ தொட‌ர்பு கொண்டு அவ‌ர்க‌ளுக்கு உறுதுணையாக‌வும் ஆத‌ர‌வாக‌வும் இருந்தார்.

அவ‌ர்க‌ளில் சிற்கைலாச‌ம்பிள்ளை, ப‌ண்டித‌ம‌ணி, நாவ‌ல‌ர் சோம‌சுந்த‌ர‌ பார‌தியார், வ‌ர‌த‌ந‌ஞ்ச‌ய‌ பிள்ளை, முனைவ‌ர் இல‌க்குவ‌னார், திருவாசக‌ம‌ணி பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம், க‌விய‌ர‌ச‌ர் க‌ம்ப‌ரை ஆத‌ரித்த‌ ச‌டைய‌ப்ப‌வ‌ள்ள‌ல் வ‌ழிவ‌ந்த‌ டி.ஏ.வி.நாத‌ன், ஒள‌வை துரைசாமிப் பிள்ளை, கி.ஆ.பெ.விசுவ‌நாத‌ம், ம‌.பொ.சி., அற‌நெறிய‌ண்ண‌ல் கி.ப‌ழ‌நிய‌ப்ப‌னார் ஆகியோர் குறிப்பிடத்த‌குந்த‌வ‌ர்க‌ள்.

மகாத்மா காந்தியின் மதுரை வருகை

மகாத்மா காந்தி மதுரைக்கு வந்திருந்த போது அப்போது தியாகராசச் செட்டியார் வாழ்ந்த மேலமாசி வீதி வீட்டில் அவருடைய விருந்தாளியாகத் தங்கினார்.

அப்போது காந்தி விரிவான உடைகளையும் தலைப்பாகையையும் சட்டையையும் கைவிட்டு ஆடைகளைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்தார்.

தமிழ்நாடு அரசு கதர்க்கடை ஒன்றினை இப்பொழுது அவ்வீட்டில் நடத்தி வருகின்றது.

அதன் மாடியில் பொதுமக்கள் காண ஒரு மகாத்மா காந்திஜி சிலையினை நிறுவி புகைப்படக் கண்காட்சியையும் நடத்தி வருகின்றது.

சைவ சமயத்தில் நாட்டம்

சைவ சமயத்தில் அழுத்தமான பற்றுக் கொண்டிருந்த செட்டியார், தம் மக்களுக்கு நாயன்மார்கள் பெயர்களை இட்டார்.

நாள்தோறும் திருவாசகத்தை ஓதி வந்தார். நகரக்கோயில் பிரிவுகளுள் கலைத்தந்தை மாத்தூர் கோயிலைச் சேர்ந்தவர். அக்கோயில் திருப்பணி 1972 ல் மிகவும் சிறப்பாக நிறைவேறக் காரணமாக இருந்தார்.

வள்ளலாருடைய கொள்கைகளிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. புலால் மறுத்தல், அவருடைய தலையாய பண்பாக இருந்தது. தியாகராசர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் புலால் உணவு வேண்டிக் கிளர்ச்சி செய்தனர்.

அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் சென்னையில் கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஆதரவாக இருந்தனர்.

ஒரு சமயம் சமணர்கள் நடத்தும் கல்லூரிகளில் உங்களால் உயிரின இயல் போன்ற‌ பாடத்தைச் சொல்லிக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்த முடியுமா? என்று தியாகராசச்செட்டியார் கேட்டதும் அதிகாரிகள் வாயடைத்துப் போயினர்.

சைவ உணவின் பெருமையைப் பரப்ப நடைபெறும் மாநாடுகளில் ஆண்டுதோறும் இவர் கலந்து கொண்டார்.

தியாகராஜ செட்டியாரின் பிற ஆர்வங்கள்

+ இசையில் அவ‌ர் ஆர்வ‌ம் காட்டி வ‌ந்தார்.
+ ஓவிய‌த்திலும் அவ‌ருக்கு ஈடுபாடு இருந்த‌து.
+ குதிரை ச‌வாரியில் அவ‌ர் விருப்ப‌ம் காட்டினார்.
+ எப்பொதும் தூய‌ வெள்ளை உடை உடுத்தி வ‌ந்தார்.
+ கட்டிடக்கலையிலும் அவருக்குத் தனி ஆர்வம் இருந்தது.
+ சென்னை, கோடைக்கானல், குற்றாலம், மதுரை, ஆ.தெக்கூர் போன்ற ஊரில் அவர் கட்டியுள்ள கட்டிடங்கள் சிறப்பு மிக்கவை.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader