IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கே.எஸ்.அழகிரி அறிக்கையால் திமுக-காங்.கூட்டணியில் விரிசல்

188

 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சில தினங்களுக்கு முன்பு கூட்டணி தர்மத்தை மீறியதாக திமுக மீது குற்றம் சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையின் எதிரொலியாக திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட துவங்கியுள்ளது.

 

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தமிழக அளவில் அவ்வவ்போது சிறு உரசல் ஏற்பட்ட போதிலும் இரு கட்சியின் தலைமை கூட்டணியில் தொடர்வதையே விரும்புவதால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி தொடர்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்து உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் இக்கூட்டணி, ஆளுங்கட்சியான அதிமுகவை விட அதிகளவு வெற்றி பெற்றது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுகவால் உரிய ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும், இது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி திடீர் அறிக்கை வெளியிட்டார்.

 

இந்த அறிக்கை திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அந்தமானில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சென்ற சமயத்தில் வெளியான இந்த அறிக்கை இருக்கட்சியினரிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அறிக்கை வெளியான சில மணி நேரத்திற்குள் திமுகவை சமாதானம் செய்வது போல, அழகிரி மாற்று அறிக்கை வெளியிட்ட போதிலும், அன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் சில இடங்களில் திமுக தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ் கட்சியினர் காரணம் என்பது திமுகவினர் மத்தியி;லும் மேலும் எரிச்சலை உருவாக்கியது.

ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதி ஒதுக்கீடு செய்ததால் தான் ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற கருத்து திமுகவினர் மத்தியில் நிலவி வந்த நிலையில், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு கூட்டணியை தொடர வேண்டாம் என்ற மனநிலைக்கு திமுகவினர் வந்து விட்டனர் என்றே கூறலாம்.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் தலைமையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக திடீரென கலந்துகொள்ளவில்லை. இது இந்திய அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக திமுக எம்பி டி.ஆர்.பாலு அளித்த விளக்கத்தில் ‘கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லையென கே.எஸ்.அழகிரி கூறிய பின் காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்? என்றும், கூட்டணியில் பிரச்னை இருந்தால் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலினிடம் நேரில் தெரிவித்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலுவின் இந்த விளக்கத்தை பார்க்கும் போது திமுக, காங்கிரஸ் கூட்டணி விரிசல் ஏற்பட்டுள்ளது கண்கூடாக தெரிகிறது.

 

#K.S.Alagiri #DMK #kutaniyil #virisal