IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இரும்பு மனிதன் லக்ஷ்மி மிட்டல் வெற்றிக்கதை

79

இந்திய சுதந்திரத்திற்கு இரும்பு மனிதன் என்ற பெயர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு எப்படி பொருந்துகிறதோ அதேபோல் இந்திய வர்த்தக உலகத்திற்கு லக்ஷ்மி மிட்டல் பெயரும் பொருந்தும்.

சிறுவயது வாழ்க்கை

இவர், 1950ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் சதுல்பூரில் பிறந்தார். இவர் தொடக்கக் கல்வியைக் கொல்கத்தாவில் உள்ள நோபணி வித்யாலயா பள்ளியில் படித்தார். பின்பு கொல்கத்தாவில் உள்ள சேவியர் கல்லூரியில் பி.காம் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். நன்கு படிக்கும் திறனை மிட்டல் கொண்டிருந்தார்.

இரும்பு ராஜ்ஜியம் உருவான கதை

இவருடைய தந்தை மோகன்லால் மிட்டல் ‘நிப்பான் டென்ரோ இஸ்பாட் லிமிடெட்’ என்ற பெயரில் உருக்குத் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

1992ஆம் ஆண்டு மிட்டல், மெக்சிகன் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கினார். தொழிலை விரிவுபடுத்த மிட்டல் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இதன்மூலம் ஸ்டீல் உற்பத்தியில் மிட்டல் நிறுவனம் வேகமாக முன்னேறிச் சென்றது.
2006ஆம் ஆண்டில் லக்ஷ்மி மிட்டல் ஐரோப்பாவைச் சேர்ந்த ஆர்செலார் ஸ்டீல் நிறுவனத்துடன் இணைந்தார். பின்னர் இந்நிறுவனம் ஆர்செலார்மிட்டல் என்று அழைக்கப்படுகிறது. இதனால் இந்நிறுவனம் பன்னாட்டு நிறுவனமாக உருவெடுத்தது.
அதே ஆண்டு மிட்டல் இந்நிறுவனத்துடன் இணையும்போது 33 பில்லியன் டாலர் பங்குகளைக் கையகப்படுத்தியிருந்தார். இந்நிறுவனம் பெல்ஜியம் நாட்டில் உள்ள லக்ஸம்பர் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

இன்று உலகளவில் மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமாக இந்நிறுவனம் திகழ்கிறது. அடுத்த ஆண்டிலேயே உலக உற்பத்தியில் 10 சதவிகிதத்தை இந்நிறுவனம் உற்பத்தி செய்திருந்தது. 2007ஆம் ஆண்டில் மட்டும் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 105 பில்லியன் டாலராக இருந்தது.

2008ஆம் ஆண்டில் 60 நாடுகளில் இயங்கும் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமாக ஆர்செலார்மிட்டல் மாறியது. 2016ஆம் நிதியாண்டு கணக்குப்படி இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 75.14 பில்லியன் டாலர்களாகும். 2016ஆம் இந்த ஒரு நிறுவனத்தின் லாப மதிப்பு மட்டும் 1.77 பில்லியன் டாலர்களாகும்.

கடந்த ஆண்டு வரை இந்நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை 1,99,000 ஆகும். சர்வதேச சூழலில் நிலவிய போட்டியுடன் ஒப்பிடும்போது இந்நிறுவனம் தொடங்கப்பட்ட 11 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. ஸ்டீல் துறையில் சர்வதேச அளவில் தனக்கென தனி முத்திரைப் பதித்துள்ளது.

தொழில்துறையில் இவர் கண்ட சிறப்பான வளர்ச்சி காரணமாக பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். அதில் சில, 1996ஆம் ஆண்டு ‘ஸ்டீல் மேக்கர் ஆஃப் தி இயர்’ விருதை பெற்றார். 2004ஆம் ஆண்டில் 8ஆவது ‘வில்லி கோர்ஃப் ஸ்டீல் விஷன்’ விருது பெற்றார். இந்த விருதை அமெரிக்கன் மெட்டல் மார்க்கெட் அண்ட் உலக ஸ்டீல் டைனாமிக்ஸ் இணைந்து வழங்கியது.

அதே ஆண்டில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வழங்கியது. மேலும் 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐரோப்பிய தொழிலதிபருக்கான விருதை ஃபோர்ப்ஸ் மேகஸின் வழங்கியது. இதுபோன்று மேலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

நெருக்கடிகளை தாண்டிய பயணம்
1976ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் உருக்குத் தொழிலுக்கு விதித்த கட்டுப்பாட்டினால் 26 வயதே நிரம்பிய மிட்டல் புதிய உருக்கு ஆலையை இந்தோனேசியாவில் அமைத்தார். பின்னர் 1990ஆம் ஆண்டில் நாக்பூரில் ஷீட் ஸ்டீல் ஆலை மற்றும் புனேவில் அலாய் ஸ்டீல் ஆலையும் மிட்டல் நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட்டது.

தொடக்கத்திலிருந்தே இந்த நிறுவனங்கள் அவர்களின் குடும்ப நிறுவனமாகவே திகழ்ந்தது. இந்தக் குடும்பத்தின் மிகப்பெரிய ஸ்டீல் ஆலை இன்று மும்பையில் இயங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனத்தோடு லக்ஷ்மி மிட்டலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

இந்த ஆலையை லக்ஷ்மி மிட்டலின் இளைய சகோதரர்கள் பிரமோத் மிட்டல் மற்றும் வினோத் மிட்டல் ஆகியோர் இயக்கி வருகின்றனர். இந்தியாவில் உள்ள இவருடைய பல நிறுவனங்களை இவருடைய சகோதரர்கள்தான் கவனித்து வருகின்றனர்.

இவர் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களைத்தான் முழுவதும் கவனித்து வருகிறார். அதே சமயம் இவருடைய மகன் தொழில், நிர்வாக ரீதியாக எந்தப் பணிகலிலும் ஈடுபடுவதில்லை.

குடும்ப பின்னணி

இவருடைய மனைவி உஷா மிட்டல். இவர்களுக்கு வனிஷா மிட்டல் என்ற மகளும், ஆதித்யா மிட்டல் என்ற மகனும் உள்ளார்கள். தற்போது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார்.

இந்த ஆண்டு மே மாத கணக்குப்படி இவருடைய நிகர சொத்து மதிப்பு 16.4 டாலர்களாகும். 2008ஆம் ஆண்டில் இந்திய அரசு வழங்கும் உயரிய விருதான பத்மவிபூஷண் விருதை லக்ஷ்மி மிட்டல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.