IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்தியாவை ஆளும் அரசியல் வாரிசுகளின் பட்டியல் !

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் அரசியல் வாரிசுகள் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருபவர் ஜவகர்லால் நேருவும் அவரது வாரிசுகளும் தான்.

நேரு குடும்பம்

இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்பு, முதல் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார் நேரு.

நேருவின் பதவிக்காலம் 1947 இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் 1964, மே 27 நேரு காலமாகும் வரை பிரதமர் பதவியில் இருந்தார்.

இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றார்.

அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்கு பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கியமானார்.

இவரது ஒரே மகள், இந்திரா காந்தியும் தந்தையின் வழியில் வந்த பெண் அரசியல் வாதி.

இந்திரா பிரியதர்சினி காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர்.
ஜனவரி 19, 1966 இல் பிரதம மந்திரியாக பதவியேற்ற இந்திரா காந்தி, மார்ச் 24, 1977 வரை பதவியில் இருந்தார்.

1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த இந்திரா, மூன்று ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.

ஜனவரி 14, 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்ட இவர், அக்டோபர் 31, 1984ல் படுகொலை செய்யப்படும் வரை தந்தையை போல் பிரதமராக இருந்து மறைந்தார்.

அதற்கு பின்பு ராஜிவ் காந்தி, புகழ் பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் அரசியல் மீது ஆர்வமில்லாமல் விமானியாக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கினார் ராஜிவ்.

ஆனால், தாய் இந்திராவின் படுகொலைக்கு பின்பு, ராஜிவின் தலையெழுத்து மாறி இந்தியாவின் இளம் பிரதமரானார். இவரது பதவிக்காலம் ( அக்டோபர் 31, 1984 முதல் டிசம்பர் 2, 1989)

நூலை போல் சேலை தாயை போல் பிள்ளை என்பார்கள், தாய் இந்திராவை போல ராஜிவின் செயல்பாடுகள் இந்திய அரசியலில் துணிச்சல் மிக்கது தான்.

இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்றுத்தர முயன்றார்.

இருப்பினும் மே 21, 1991 அன்று தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு இன்றளவும் பரபரப்பு தான்.

தற்போது தந்தை ராஜிவின் வழியில் பயணப்பட்டு கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.

சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வியை தழுவினாலும் கேரளாவின் வயநாடு தொகுதியில் நின்று ஜெயித்த பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்.

கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதற்காக ராகுல் காந்தி புகழப்பட்டது நினைவிருக்கலாம்.
அதேபோல் இவரது தங்கை ப்ரியங்கா காந்தி, பாட்டி இந்திராவின் சாயலில் இருப்பதாக அவரது களப்பணியை பார்க்கும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

கடந்த 1999 இல் தேர்தல் பிரச்சாரத்தின் போது ப்ரியங்கா, பிபிசி சேவைக்கு கூறிய சில வார்த்தைகள் இன்றளவும் முக்கியத்துவம் பெறுகிறது.

நான் மனதளவில் தெளிவாக இருக்கின்றேன். நான் மக்களை விரும்புகின்ற அளவுக்கு அரசியல் என்னை ஈர்க்க வில்லை. அரசியலில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்ய விரும்புகின்றேன் என்றார்.

இந்திய அரசியல் வாரிசுகளில் வடக்கு எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதே அளவுக்கு தான் தெற்கும்.

தென்னிந்தியாவில் அரசியல் வாரிசுகள் இன்றளவும் தங்களது களப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஜெகன் மோகன் ரெட்டி

அதில் பெரும் சக்தியாக உருமாறி இருப்பவர் ஆந்திர பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி.

2004 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், முன்னாள் முதல்வரும் தந்தையுமான ராஜ சேகரின் மறைவுக்கு பின்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒய்.ஆர்.காங்கிரஸ் என்னும் கட்சியை 2011 இல் தொடங்கினார்.

தனது புதிய கட்சிக்கு ஆதரவு திரட்ட 3000 கி.மீ பாதயாத்திரை மேற்கொண்டது மக்களின் கவனத்தை பெற்றது.

பின்னர் 2011ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற இடைத் தேர்தலில் கடப்பா மக்களவை தொகுதியில் 5,45,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச வேட்பாளர்களை தோற்கடித்தது ஜெகனின் அரசியல் செல்வாக்குக்கு ஆதாரம்.

அதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் ஒய்ஆர்எஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இதனால் ஆந்திர பிரதேச முதல்வராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார்.

மு.க.ஸ்டாலின்,கனிமொழி

அடுத்து தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் சாம்ராட்டாக இருந்து மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின்.

தற்போதைய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர். தனது தந்தையின் முதல்வர் பதவிக்காலத்தில் தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார்.

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள ஸ்டாலின், போட்டியை எதிர்பார்க்கிறார்.

இவரது சகோதரியும் கருணாநிதியின் மகளுமான கனிமொழியும் தமிழக அரசியலில் பெரும் பங்கு வகிக்கிறார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் கனிமொழி.

அதேமாதிரி மு.க.ஸ்டாலினோட பையன், நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி இப்ப தான் அரசியலுக்குள்ள என்ட்ரி கொடுத்துருக்காரு.

இதர வாரிசுகள்

இவர்களைப் போல இந்தியாவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், பா.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார், சசிகலா அக்கா மகன் டிடிவி தினகரன், கர்நாடகா தேவகவுடா குடும்பத்தில் குமாரசாமி, காஷ்மீரில் சேக் அப்துல்லா குடும்பத்தில் பரூக் அப்துல்லா, ஒடிசாவில் பிஜு பட்நாயக் குடும்பத்தில் தற்போதைய முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானாவில் சந்திர சேகர ராவ் குடும்பத்தில் கே.டி.ராமராவ், மேனகா காந்தி குடும்பத்தில் வருண் காந்தி என இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாரிசு அரசியல் கொடி கட்டி பறக்கிறது.

#ragulgandhi #Political #Kanimozhi #chandrasekararao #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader